Last Updated : 05 Dec, 2015 03:22 PM

 

Published : 05 Dec 2015 03:22 PM
Last Updated : 05 Dec 2015 03:22 PM

கடலூரில் இடைவிடாத கொட்டும் மழை: சென்னை வெள்ளம் கடலூரை மூழ்கடித்து விட்டதா?

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாவட்ட மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். நவ.9-ம் தேதி பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்டு, 66 உயிர்களை பலிவாங்கியது. இந்த நிலையில் ஆறுதல் தரும் விதமாக மழை சற்று விட்டு விட்டு பெய்த நிலையில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தது.

இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் கனமழையால் மாவட்டம் மீண்டும் தத்தளிக்கிறது. கெடிலம், தென்பெண்ணையாறு, பரவானாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.

இதனால் கரையோர கிராம மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாயினர். இதேபோன்று மாவட்டத்தின் உட் பகுதிகளில் வசிப்போரு சகதியில் இருந்தவாறு சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.கடலூர் நகரப் பகுதிகளான கோண்டூர் சுப்ராயலு நகர்,குமளங்குப்பம்,சதாசிவம் நகர், பீமாநகர், வரதராஜன் நகர் உள்ளிட்டப் பகுதிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாது. தற்போது பெய்த மழையினால் மேலும் 13 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடலூர் இன்று சராசரி மழையளவு 63 மி.மீ. அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் ஆற்றங்கரையோரப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் மட்டுமே நிவாரணப் பணிகள் நடைபெறுவதாகவும், மாவட்டத்தின் உட்புறப் பகுதிகளான பண்ருட்டி,சிதம்பரம், குறிஞ்சிப்பாடி,நெய்வேலி சுற்று வட்டார கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நிவாரணப் பணிகளே நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மழையால் சேதமைடந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய மழையில் மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளது சாலைகள். இதுவரை 210 கி.மீ தேசிய நெடுஞ்சாலையும், 485 கி.மீ மாநில நெடுஞ்சாலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்கிறது. அவற்றை சரிசெய்ய மெக்கானிக்களும் கிடைக்காத பரிதாப நிலை நிலவுகிறது.

இதனிடையே கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களிலிருந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதன்படி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள தற்போது உள்ள அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒரு கோட்ட பொறியாளர், 3 உதவி கோட்ட பொறியாளர்கள், 3 உதவி பொறியாளர்கள்,திருப்பூர் மாநகராட்சியிலிருந்து ஒரு செயற்பொறியாளர், 1 உதவி செயற்பொறியாளர் ஆகியோர் தலைமையில் 100 பணியாளர்கள் மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மூழ்கடித்து விட்டதா சென்னை வெள்ளம்

கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. லட்சக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஆயிரக் கணக்கானஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிக் கொண்டு இருக்கிறன.

சென்னைக்கு பாதிப்பு என்றால் தமிழகமே பாதிக்கப்பட்டு விட்டது என்பார்கள். சென்னையில் 24 மணி நேரமும் மின்சாரம் இருந்தால் தமிழகம் முழுவதும் மின்சாரம் இருப்பதாக் கூறுவார்கள். ஆனால் சென்னை தவிர மற்ற பகுதிகளில் 8 மணி நேரம்கூட மின்சாரம் இல்லாத நிலையில் இருந்தது. அதைப்போலத்தான் சென்னை பாதிப்பு கடலூர் மாவட்ட சேதத்தை மூழ்கடித்து விட்டது.

எனவேதான் சென்னையை பார்வையிட்ட பிரதமர் கடலூர் மாவட்ட வெள்ளச் சேதத்தை பார்வையிடவில்லை.சென்னைதான் தமிழகமா?, சென்னை மக்கள்தான் தமிழக மக்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? என கடலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் முகநூலில் தங்கள் பதிவுகளை செய்த வண்ணம் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x