Published : 17 Apr 2016 02:31 PM
Last Updated : 17 Apr 2016 02:31 PM

கச்சத்தீவை மீட்பதாக இரு திராவிடக் கட்சிகளும் நாடகங்கள் நடத்துகின்றன: ராமதாஸ் குற்றச்சாட்டு

கச்சத்தீவை மீட்கும் விஷயத்தில் இரு திராவிடக் கட்சிகளும் நடத்துவது நாடகங்கள் மட்டுமே என்பதை மக்கள் அறிவார்கள். அவர்களை இனி ஏமாற்ற முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? என்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கடந்த இரு நாட்களாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். குற்றவாளிகளே நீதிபதிகளாகி தீர்ப்பளித்தால் எப்படியிருக்குமோ, அதேபோல் தான் கச்சத்தீவு தொடர்பாக இரு கட்சிகளும் முன்வைக்கும் வாதங்கள் மிகவும் அபத்தமாக உள்ளன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று முன்நாள் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை கருணாநிதி தான் இலங்கை அரசுக்கு தாரைவார்த்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.

மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இதற்கு பதிலளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்படவில்லை என்றும், அதன்பின் வந்த நெருக்கடி காலத்தின் போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். கச்சத்தீவு பற்றி இருவரும் கூறியுள்ள கருத்துகள் உண்மைக்கு மாறானவை. இவற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கச்சத்தீவு சிக்கலில் இரு கட்சிகளுமே துரோகம் செய்தவை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்தது. கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி இலங்கையிலும், 28 ஆம் தேதி டெல்லியிலும் கையெழுத்திடப்பட்டது.

அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு அதை திமுக எதிர்த்ததாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுக்குழுவைக் கூட்டி கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக ஒதுங்கிக் கொண்டார்.

அந்த நேரத்தில் மக்களவையில் திமுகவுக்கு 28 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சிகளுக்கு 10 இடங்களும் இருந்தன. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க வேண்டுமானால் அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், நிர்வாக ஆணை அடிப்படையில் கச்சத்தீவு வழங்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக போராடியிருந்தாலோ, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தாலோ கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கும். ஆனால், கருணாநிதி அதை செய்யவில்லை.

மு.க.ஸ்டாலின் அவரது உரையில் இன்னொரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். ''சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை எப்போதெல்லாம் சந்திக்கிறோமோ, அப்போதெல்லாம் தேர்தல் அறிக்கையில் அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி திமுக குரல் கொடுத்து வருகிறது'' என்பது தான் மு.க.ஸ்டாலின் உதிர்த்த முத்து.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தமிழகத்தை திமுக ஆட்சி செய்திருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் திமுக அங்கம் வகித்திருக்கிறது. அப்போதெல்லாம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியும். ஆனால், திமுகவுக்கு என்னென்ன துறைகள் வேண்டும் என்பதற்காக மத்திய அரசுக்கு அளித்த நெருக்கடியில் பத்தில் ஒரு பங்கைக் கூட கச்சத்தீவை மீட்பதற்காக கருணாநிதி அளிக்கவில்லை. மொத்தத்தில் கச்சத்தீவு மீட்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியதைத் தவிர கச்சத்தீவை மீட்பதற்காக திமுக துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது தான் உண்மை.

கச்சத்தீவை மீட்கப்போவதாகக் கூறி ஜெயலலிதா நடத்திய நாடகங்கள் இன்னும் அதிகம். 1991 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக முதன்முதலில் பொறுப்பேற்ற ஜெயலலிதா அந்த ஆண்டு விடுதலை நாளையொட்டி கோட்டையில் கொடியேற்றி வைத்து பேசும் போது, கச்சத்தீவை மீட்காமல் ஓயமாட்டேன் என்று சபதம் எடுத்தார். ஆனால், அதன்பின் 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் சபதம் சபதமாகவே இருக்கிறதே தவிர இன்னும் செயலாகவில்லை. முதன்முதலில் சபதம் எடுத்த பிறகு 17 ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு 8 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு 09.06.2011 அன்று கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனடிப்படையில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசையும் வாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டி உச்ச நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

15.04.2013 அன்று சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் கச்சத்தீவு தொடர்பாக வழக்குத் தொடர தீர்மானம் நிறைவேற்றப் பட்டு அதனடிப்படையில் கருணாநிதி ஒரு வழக்கு தொடர்ந்தார். ஆனால், முதன்மை வழக்கு 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் அவ்வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு கூட ஜெயலலிதாவால் முடியவில்லை. இவர் தான் கச்சத்தீவை மீட்கப் போகிறாராம். கச்சத்தீவை மீட்கும் விஷயத்தில் இரு திராவிடக் கட்சிகளும் நடத்துவது நாடகங்கள் மட்டுமே என்பதை மக்கள் அறிவார்கள். அவர்களை இனி ஏமாற்ற முடியாது.

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து கச்சத்தீவை மீட்கும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x