Published : 24 Aug 2015 05:39 PM
Last Updated : 24 Aug 2015 05:39 PM

ஒரே நாளில் 20 பேரை கடித்த வெறிநாய்: தருமபுரி அருகே கிராம மக்கள் பீதி

தருமபுரி மாவட்டம் இண்டூர் பகுதியில் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் கடித்ததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த சோம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை வெறிநாய் ஒன்று அப்பகுதியில் தென்பட்டவர்கள் அனைவரையும் கடித்துள்ளது. அருகிலுள்ள ராஜாகொல்லஅள்ளி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்ற விவசாயிக்குச் சொந்தமான அந்த நாய்க்கு திடீரென வெறிநோய் ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அந்த நாய் ராஜாகொல்லஅள்ளியைச் சேர்ந்த ரேணுகா (8), நாயின் உரிமையாளர் கோவிந்தன் (60), சோம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் (40), மாது (50), மாதப்பன் (40), முனியம்மாள் (50), சின்னக்கண்ணு (40), திப்பட்டி சுப்பிரமணியன் (42), செக்காரப்பட்டி குணசெல்வி (23), பென்னாகரம் விஜய் சாய்ராம் (53), தருமபுரி மோனிகா (4) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது.

இவர்களில் குணசெல்வி 9 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத் தக்கது. அதேபோல, காவல் உதவி ஆய்வாளரான விஜய் சாய்ராம் இரவு ரோந்துப் பணியில் இருந்தபோது வெறிநாய் கடிக்கு ஆளாகியுள்ளார். நாய்க்கடிக்கு ஆளானவர்களில் 19 பேர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

முதலுதவிக்குப் பிறகு அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற சிலர் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளனர். இதுதவிர சோம்பட்டி பகுதியில் 1 எருமை, கூலிக்கொட்டாய் பகுதியில் 5 மாடு, 7 ஆடுகளை இந்த வெறிநாய் கடித்ததாகக் கூறப்படுகிறது.தருமபுரி அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கான மருந்து இருப்பு இல்லாததாலேயே சேலம் அனுப்பப்பட்டதாக சிலர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை யில் பணியில் இருந்த மூத்த மருத்துவர் இளங்கோவன் கூறும்போது, ‘சாதாரண மற்றும் வெறிநாய்க் கடிக்கு போடப்படும் ‘ஏஆர்சி’ என்ற மருந்து தருமபுரி மருத்துவமனையில் போதிய அளவு உள்ளது.

அதேநேரம், மிருக உடலில் இருந்து சேகரிக்கப்படும் வெறிநாய்க் கடிக்கான இரண்டாம் நிலை ஊசி மற்றும் மனித உடலில் இருந்து சேகரிக்கப்படும் மூன்றாம் நிலை ஊசி ஆகியவற்றுக்கான மருந்துகள் மற்றும் நவீன வசதிகள் சேலம் மருத்துவமனையில் இருப்பதால் அங்கே அனுப்பி வைத்தோம்’ என்றார்.

இதனிடையே வெறிநாயை கிராம மக்கள் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x