Published : 08 Jun 2017 11:24 AM
Last Updated : 08 Jun 2017 11:24 AM

ஒரு ஜீவ நதியின் மரணப்போராட்டம்: வைகையில் தினமும் கலக்கும் 98 லட்சம் லிட்டர் கழிவுநீர்

கழிவுநீர் கலப்பு, குப்பைகள், கட்டிட இடிபாடுகள், ஆக்கிரமிப்புகள், மணல் திருட்டு என்று ஒரு ஆற்றுக்கு என்னென்ன தீமைகளை செய்ய முடியுமோ, அவை அனைத்தும் வைகையாற்றுக்கு நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்க அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

“தென் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்து, அவர்களின் உள்ளத்தையும், நிலத்தையும் குளிர்வித்து பசுமையாக வைத்திருந்த வைகை ஆறு, தற்போது முற்றிலும் வறண்டு பாலைவனம்போல் உயிரற்று கிடக்கிறது. ஆனால், நிறைய பேர் வைகை நதியை மீட்டெடுப்பது என்பதை கரைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வது மட்டுமே என நினைக்கின்றனர்” என்று தனது முகநூல் பக்கத்தில் ஆதங்கப்பட்டிருந்தார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சக்தி.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “குப்பையை அகற்றினால் மட்டும் போதுமா? வைகையில் நீர்வரத்து வேண்டுமென்றால், அதன் தொடக்கமான மூல வைகையை சரிசெய்ய வேண்டாமா? அதன் கிளை ஆறுகளான சுருளியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, மருதாநதி, சாத்தையாறு, உப்பாறு, கிருதுமால் நதியை சீரமைக்க வேண்டாமா? ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டாமா?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

எது உண்மையான வளர்ச்சி?

அவர் கூறுவது உண்மைதான். அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையெல்லாம் குப்பையை அள்ளுவது, சாலை அமைப்பது, பாலம் கட்டுவது ஆகியவைதான் வளர்ச்சிப் பணிகள் என்று உள்ளது. நீர்ஆதாரத்தை பெருக்கி பாதுகாத்து, சுற்றுச்சூழல் மாசடையாமல் காப்பாற்றுவதுதான் உண்மையான வளர்ச்சி. இதை உணர்ந்து செயல்படாததால்தான், வைகை ஆற்றில், கழிவுநீர் அருவிபோல் கொட்டுகிறது. பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள், கட்டிட இடிபாடுகள், ரசாயன கழிவுகளை எந்தவித தயக்கமும் இன்றி ஆற்றில் கொட்டுகின்றனர். மூல வைகையில் ஆரம்பித்து ராமநாதபுரம் வரை வைகை ஆற்று தண்ணீரை தனியார் நிறுவனத்தினர் அட்டைப்பூச்சியை போல் உறிஞ்சுகின்றனர்.

மற்றொரு புறம் வைகையும், அதன் கிளை நதிகளும் உருவாகும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் எல்லாமல் காணாமல்போய் மொட்டை யடிக்கப்பட்டுவிட்டன.


ஆழ்வார்புரம் செல்லும் வழியில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டும், அதில் கொட்டாமல் வைகை கரையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை.

இப்படி இயற்கை சுழற்சியை சிதைத்தும், அதனை மீட்பது பற்றி கவலைப்படாமலும் இருப்பதால்தான், வைகை ஆறு உயிரோட்டத்தை இழந்து விட்டது. வைகையின் இந்த அபாய கரமான நிலை பற்றி யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு, அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் தொட்டி கட்டி தண்ணீர் நிரப்பப்பட்டது. வைகை ஆற்றை பொறுத்தவரை தங்கள் கடமை இத்துடன் முடிந்தது என்ற மனநிலையில் இருக்கும் அதிகாரிகளால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வைகையை மீட்க இயக்கமாக செயல்பட்டாலாவது தீர்வு கிடைக்கிறதா என்ற எண்ணத்துடன், மதுரையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இணைந்து வைகை நதி மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் நமது செய்தியாளரிடம் பேசியதாவது: வைகை நதி, வருச நாடு மலையில் தொடங்கி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு வழியாக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கும் வரை 258 கி.மீ. நீளமும், 7 ஆயிரத்து 31 சதுர கி.மீ. வடிநிலப்பரப்பும் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு திசைகளில் இருந்து வரும் சிற்றோடைகள், மூல வைகை ஆற்றில் கலந்தாலும், பெரியாறு அணையில் இருந்து வரும் உபரி நீரே வைகை ஆற்றின் முக்கிய நீர்வரத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், தென் மாவட்டங்களில் வசிக்கும் 50 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. ஆனால், இன்று குப்பைகள், கழிவுநீர், சீமைக் கருவேல மரங்களால் ஆற்றின் தன்மையே மாறிவிட்டது. இதன் காரணமாக ஆற்றோரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. பொதுமக்கள் தண்ணீருக்காக மாதம் ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.

இதற்கு, ‘மழையில்லை. நாங்கள் என்ன செய்வோம்?’ என்று ஆட்சியாளர்கள் ஒற்றை வரியில் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்கின்றனர். இவர்கள் சரியாக செயல்படாததால் பல நீர்நிலைகளை இழந்த நாம், இப்போது வைகை ஆற்றையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.


மதுரை செல்லூர் அருகே கழிவுநீர், குப்பைகள் தேங்கி மாசடைந்து காணப்படும் வைகை.

கழிவுநீர் கலப்பு

வைகை ஆற்றின் வடகரைப்பகுதியில் சாத்தையாறு அணையிலிருந்து செல்லூரை கடந்து வைகை ஆற்றுக்கு வரும் ஆழ்வார்புரம் கால்வாயில் மதுரை அரசு மருத்துவமனையின் ஒட்டுமொத்த மருத்துவக் கழிவு நீரும், நகரின் ஒட்டுமொத்த கழிவு நீரும் குற்றால அருவிபோல் கொட்டுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பயன்பாட்டுக்கு நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது. பயன்பாட்டுக்கு பிறகான இந்த கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வைகை ஆற்றில் நேரடியாக விடப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தால் அதை சுத்திகரிக்க வேண்டியது மாநகராட்சியின் பொறுப்பு என்கின்றனர்.

ஆனையூர் முதல் அண்ணாநகர் வரை வைகை ஆறு கழிவுநீரின் சங்கமமாகி விட்டது. ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தில்தான் கள்ளழகர் இறங்குகிறார். விழா நடைபெறும்போது இங்கு 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். அவர்கள் எல்லாம் கழிவுநீரில் இறங்கித்தான் அழகரை தரிசிக்கின்றனர். வருச நாட்டில் தொடங்கும் வைகை ஆறு சோழவந்தான் வரை அவ்வளவாக மாசுபாடின்றி உள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதிக்குள் வரும்போதுதான் 58 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. தினமும் 98 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது.

ஓபுளா படித்துறை பாலம் அருகே சிலர் உரச்சாக்கை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடு கின்றனர். பெயிண்டிங் டப்பாவை கீழே கொட்டி எரிக்கின்றனர்.

வைகையாற்றின் வழிநெடுகிலும் இருக்கும் 72 நடுத்தர மற்றும் 132 பெரிய தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுநீரின் தன்மையை பரிசோதித்து, அவற்றை ஆற்றில் கலக்கவிடாமல் தடுக்க வேண்டும். வைகையில் ஏற்பட்டுள்ள மாசுக்கு நகரமயமாக்கலும், திட்டமிடப்படாத வளர்ச்சியும்தான் முக்கிய காரணம். வாழ்வியலுக்கு அடிப்படையான நீர்நிலைகளை பறிகொடுத்துவிட்டு மதுரையை ஸ்மார்ட் சிட்டி யாக்குவதால் என்ன பயன்? சுகாதாரத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாநகராட்சி, ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்காதது வருத்தமளிக்கிறது. கழிவுநீரை சுத்திகரிக்கவும், சுகாதாரத்தை பாதுகாக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கீழடி அகழாய்வின் மூலம் தமிழரின் பழம் பெருமை மீண்டும் உலகத்துக்கு நிரூபண மாகியுள்ளது. வைகை நதியோர நாகரிகம் என்றே இதை அழைக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அத்தகைய பெருமை மிக்க வைகையை நம் தலைமுறையில் தொலைத்துவிடலாமா? அரசு மட்டுமல்ல, மக்களும் இணைந்தால்தான் வைகையை காப்பாற்ற முடியும்.

ஆக்கிரமிப்புகளால் அகலம் குறைகிறது

வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் கூறியதாவது:

வைகை ஆற்றின் அகலம் பற்றிய விவரங்களை அறியும் வகையில் அதன் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் நீளம் குறித்து தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தோம். அதன்படி எங்களுக்கு வந்த பதிலில், ஆரப்பாளையம் அம்மா பாலத்தின் நீளம் 300 மீட்டர், செல்லூர் பாலம் 223 மீட்டர், குருவிக்காரன் பாலம் 200 மீட்டர், அண்ணா நகர் பாலம் 403 மீட்டர், விரகனூர் பாலம் 358 மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நகரின் ஒவ்வொரு பகுதியிலும் ஆற்றின் அகலம் மாறுபடுகிறது. ஆக்கிரமிப்புகள்தான் இதற்கு காரணம்.

மதுரை வைகை ஆற்றின் இரு கரைகளில் வசிக்கும் 5 ஆயிரம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்தோம். அவர்கள், ‘‘கழிப்பிட வசதியில்லை. ஆற்றுக்குத்தான் போக வேண்டியதிருக்கிறது” என்றனர். தற்போதுதான் அப்பகுதிகளில் பொதுக்கழிப்பறை வசதிகளை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. வைகையை பாதுகாக்கும் பொறுப்பை பொதுமக்கள் ஏற்க வேண்டும் என்றார்.

நீர்வளத்தைப் பெருக்க என்ன செய்யலாம்?

தமிழகத்தின் தீராத தலைவலியாக மாறியுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வாக தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை முன்வைக்கிறார் மதுரையை சேர்ந்த பொறியாளர் ஏ.சி.காமராஜ். அவரது இந்த திட்டத்தை செயல்படுத்தினால், தமிழகத்தின் 17 முக்கிய ஆறுகளை இணைத்து கடலில் வீணாகக் கலக்கும் 177 டி.ம்.சி. தண்ணீரை தேக்கி தேவையான பகுதிகளுக்கு தேவையான நேரத்தில் வழங்க முடியும். தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்.

வேலைவாய்ப்பு பெருகும், வெள்ளச் சேதம் ஏற்படாது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.5,000 கோடி அளவுக்கு மின்சாரம் மிச்சமாகும். திட்டத்தின் மதிப்பு ரூ.50,000 கோடி மட்டுமே. ஆனால், அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இத்திட்டத்துக்கான செலவுத்தொகையில் மத்திய அரசு 60 சதவீதமும், தனியார் முதலீட்டாளர்கள் 40 சதவீதமும் தர வாய்ப்புள்ளது. தமிழகம் நீர்வளத்தில் தன்னிறைவுபெற, இந்த நீர்வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கிறார் ஏ.சி.காமராஜ்.

மணல் திருட்டை தடுக்க வேண்டும்

திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் கூறுகையில், “வைகை ஆற்றின் நீர்வடி நிலப்பகுதியில் 550 குளங்கள் அமைந்துள்ளன. காவிரி டெல்டா பாசனத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பாசன வசதியை கொண்ட வடிநிலமாக வைகை ஆறு இருக்கிறது. ஆனால், முறையான நீர்வரத்து இல்லாததாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலையான மழை பொழிவு இல்லாததாலும் பெரும்பாலான காலங்களில் வைகை வறண்டு காணப்படுகிறது.

இந்த ஆறு உருவாகி வரும் மேற்குத் தொடர்ச்சி மலையில் சரிவு அதிகமாக இருப்பதாலும், பாறைகளின் தன்மை எளிதில் உடையும் வகையில் இருப்பதாலும், வைகை ஆற்றில் மணல் தேங்கி முறையான நீர்கடத்தும் திறனின்றி உள்ளது. இதன் காரணமாகவே பெரியாற்றில் குறைந்த அளவு நீரை திறந்துவிட்டால் மதுரைக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உண்டாகிறது.

மணல் திருட்டால் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு அதன் காரணமாகவும் பிற பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. மணல் திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வைகை ஆற்றுடன் இணையும் ஓடைகள், கிளை ஆறுகளை அகலப்படுத்த வேண்டும். தடுப்பணைகள் போன்ற நீர்தேங்கும் அமைப்புகளை ஏற்படுத்தி, குறைந்த மழை பெய்தாலும் அனைத்து மேட்டு நில விவசாயிகளுக்கும் நிலத்தடி நீர் கிடைக்கும் வகையில் மெல்லிய நீரோட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x