Published : 21 Jul 2016 04:04 PM
Last Updated : 21 Jul 2016 04:04 PM

ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

ஏழைகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில் ஏழைகளுக்கான வீட்டு வசதி பற்றி குறிப்பிடுகையில், ''தமிழத்தில் குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப்பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, ஏழைகளுக்கான வீட்டுவசதி வழங்கும் மாநில இயக்கத்தின் கீழ், வீட்டுவசதித் திட்டங்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் செயல்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் தலைமையிலான இந்த அரசு, தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பல்வேறு திட்டங்களின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கும்.

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (ஊரகம்)கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு ஒன்றுக்கு ரூ.70,000 மதிப்பீட்டில் 45,788 வீடுகளை சிறப்பு ஒதுக்கீடாகவும், வீடு ஒன்றுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் 1,31,831 வீடுகளை வழக்கமான ஒதுக்கீடாகவும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் 40 சதவீதம் நிதிப் பகிர்வு மாநில அரசின் பங்காகும். எனினும், வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு ஒரே சீராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில், கூரை அமைப்பதற்கு ரூ.50,000 கூடுதலாக வழங்கி, அனைத்து வீடுகளுக்குமான மதிப்பீட்டுத் தொகையை வீடு ஒன்றுக்கு ரூ.1.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறப் பகுதிகளில் ரூ.3,095.62 கோடி செலவில் 1,77,619 வீடுகளை 2016-2017 ஆம் ஆண்டிலேயே இந்த அரசு கட்டும். இதில், ரூ.1,908.47 கோடி மாநில அரசின் பங்காக இருக்கும். பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, முதல்வரின் சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.420 கோடி செலவில் 20,000 வீடுகள் கட்டப்படும்.

குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் மறுவாழ்விற்காகவும், நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழை மக்களுக்கு வீட்டு வசதி வழங்கவும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், கடந்த ஐந்து ஆண்டுகளில், ரூ.2,753.42 கோடி செலவில், 59,023 குடியிருப்புகளைக் கட்டியுள்ளது.

மேலும், 10,537 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இம்முயற்சிகளைத் தொடர, 2016-2017 ஆம் ஆண்டில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம், 23,476 வீடுகளைக் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்புறங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களை மறுகுடியமர்த்துவதற்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதி வழங்க, ஒரு சிறப்பு நிதியமாக வீட்டுவசதி நிதியத்தை இந்த அரசு ஏற்படுத்தும். ‘அனைவருக்கும் வீட்டு வசதி’ திட்டத்திற்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.689 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x