Last Updated : 26 Dec, 2015 08:27 AM

 

Published : 26 Dec 2015 08:27 AM
Last Updated : 26 Dec 2015 08:27 AM

எளிமையால் மக்களை கவர்ந்த மூத்த தலைவர் நல்லகண்ணு

இன்று 91-வது பிறந்த நாள்



*

அரசியல்வாதிகள் என்றாலே ஒருவித வெறுப்புணர்வுடன் பார்க்கப்படும் தமிழகத்தில் தனது எளிமையால் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு இன்று 91-வது பிறந்த நாள்.

1925-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி கருப்பாயி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். நெல்லைச் சீமையில் வ.உ.சி. மூட்டிய சுதந்திரத் தீ 15 வயதிலேயே அவரை போராட்டக் களத்துக்கு கொண்டு வந்தது.

மகாத்மா காந்தியைவிட நேருவின் பொதுவுடைமை பேச்சுகளால் அதிகம் ஈர்க்கப்பட்டார் நல்லகண்ணு. அதனாலோ என்னவோ 1944-ல் ஸ்ரீவைகுண்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கிளை தொடங்கப் பட்டபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். சுதந்திரப் போராட்டத்தின்போது அவரது மீசையை ஒரு காவல்துறை அதிகாரி சிகரெட்டால் சுட்டு பொசுக்கியிருக்கிறார். நல்ல கண்ணு மீசையில்லாத ரகசியம் இதுதான். விவசாய தொழிலாளர் அமைப் பில் மாநில, தேசிய அளவில் பொறுப்பு வகித்த அவர், 1992-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். 2005 வரை 13 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்து தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர். 91 வயதிலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என தமிழகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எளிமை, நேர்மை, வாய்மைக்காக மாற்று கட்சியினராலும் போற்றப் படும் நல்லகண்ணு, மணல் கொள் ளையர்களால் நெல்லையின் உயிர் நாடியான தாமிரபரணி நதி அழிந்து வருவதை கண்டு உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுக ளுக்கு அங்கு மணல் அள்ள தடை உத்தரவு பெற்றார். இதற்காக ‘அரசியலை விட்டு ஓடு' என்று அவருக்கு மிரட்டல் விடுத்து சுவரொட்டிகள் ஒட்டி னார்கள் ஆனாலும் அஞ்சவில்லை. தூர் வாருதல் என்ற பெயரில் ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் அடுத்த வழக்கை தொடர்ந்தார்.

மக்கள் பிரச்சினைகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் குரல் கொடுப்பதுடன், போராடியும் வருவதால்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு எதிரானவர்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளார் நல்லகண்ணு. தற்போது சென்னை சி.ஐ.டி நகரிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசிக்கும் நல்லகண்ணு இன்று தனது 91-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

வாழும் வழிகாட்டி - தமிழிசை சவுந்தரராஜன்

‘‘கொள்கை ரீதியாக மாறுபட்டாலும் நல்லகண்ணுவின் எளிமை, நேர்மை, கொள்கை பிடிப்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்ப்பவை. அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு பலமுறை கிடைத்துள்ளது. பார்க்கும் போதெல்லாம் தந்தையின் பாசத்தோடு என் கணவரையும், தந்தையையும் விசாரிப்பார். அவரோடு பல மேடைகளில் பேசியிருக்கிறேன். கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழாவில் நானும் அவரும் பங்கேற்றோம். நான் பேசி முடித்ததும் மிகவும் துணிவுடன் இனிய தமிழில் பேசியதாக பாராட்டினார். அதனை மிகப்பெரிய விருதாக, கவுரவமாக கருதுகிறேன். அவர் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழகத்துக்கு வழிகாட்ட வேண்டும். என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு அவர் வாழும் வழிகாட்டி’’ என்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x