Published : 11 Feb 2017 01:28 PM
Last Updated : 11 Feb 2017 01:28 PM

எம்.எல்.ஏ.க்களுடன் சந்திக்க உடனே நேரம் ஒதுக்கக் கோரி ஆளுநருக்கு சசிகலா கடிதம்

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக, தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கக் கோரி, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. அதில், என்னை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்து, உங்களைச் சந்திக்க நேரம் கேட்டு 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கடிதங்கள் சமர்ப்பித்தேன்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 9-ம் தேதி இரவு 7.30 மணியளவில் மூத்த அமைச்சர்களுடன் உங்களைச் சந்தித்தேன். அப்போது, என் வசம் முழு பெரும்பான்மை இருப்பதால், என்னை ஆட்சியமைக்க அழைக்கக் கோரினேன். அத்துடன், அதிமுக நிறைவேற்றிய தீர்மானத்தையும், கடிதத்தையும் உங்களிடம் சமர்ப்பித்தேன்.

உங்களிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து 7 நாட்கள் ஆகிவிட்டன. நீங்களும் அதை ஏற்றுக்கொண்டீர்கள். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக, என்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களுடன் உங்களை (இன்று) சனிக்கிழமை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சட்ட அமைப்பு, ஜனநாயகத்தின் இறையாண்மையை காக்கும் வகையிலும், மாநில நலனைக் கருத்தில் கொண்டும் நீங்கள் உடனடி நடவடிக்கையை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று அந்தக் கடிதத்தில் சசிகலா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x