Published : 14 Feb 2017 07:38 PM
Last Updated : 14 Feb 2017 07:38 PM

எந்த தீர்ப்பை எதிர்த்து தாடி வளர்த்து, காவடி எடுத்து, மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்பை இன்று அதிமுகவினர் கொண்டாடுவது வேடிக்கை: ஸ்டாலின் பேட்டி

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது எந்த தீர்ப்பை எதிர்த்ஹ்டு தாடி வளர்த்து, காவடி எடுத்து மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்புக்கு இன்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுப்பது வேடிக்கையானது என்று கூறினார்.

அவர் கூறியதாவது:

சசிகலா தான் எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற கட்சித் தலைவர், அவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஒரு அணி சொல்லிக் கொண்டிருந்தது. இன்று அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக குற்றவாளிகளைத் தான் முதலமைச்சராகவோ, பொதுச் செயலாளராகவே தேர்ந்தெடுக்கும் நிலை இருந்து வருகிறது. நான் சொல்ல விரும்புவது, நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த வரலாற்று சிறப்புக்குரிய தீர்ப்பு நியாயமானது தான் என்று தீர்ப்பாகி, கடந்த 21 வருடங்களாக நடந்த வழக்கு, இன்று முடிவுக்கு வந்திருக்கிறது.

நீதிபதி குன்ஹா அவர்கள், முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கும், அவருடைய ஆருயிர் தோழி சசிகலா நடராஜன் அவர்களுக்கும், சசிகலாவின் உறவினர்களாக இருக்கக்கூடிய இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 வருட சிறை தண்டனை, முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு 100 கோடி ரூபாய் அபராதம், மீதமுள்ளவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு விதித்தார். ஆனால் இடையில் அந்த தீர்ப்பு என்ன நிலைக்கு ஆளானது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். பிறகு மேல் முறையீடு செய்யப்பட்டு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பு நியாயமானது என்று இன்று வந்துள்ள தீர்ப்பு நிரூபித்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு வெளியான போது அதனை திமுகவின் சதி என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல, காவடி எடுத்தார்கள், அலகு குத்திக்கொண்டு, மொட்டையடித்து, தாடி வளர்த்துக் கொண்டு, இப்படியெல்லாம் பலவற்றை செய்து, திமுக மீதும் விமர்சனம் செய்தனர். ஆனால், இன்றைக்கு அதே தீர்ப்பை நியாயமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அப்போது யாரெல்லாம் தாடி வளர்த்தார்களோ, காவடி எடுத்தார்களோ, அலகு குத்தினார்களோ, அவர்கள் எல்லாம் இன்றைக்கு இனிப்பு கொடுக்கிறார்கள்., பட்டாசு வெடிக்கிறார்கள். வழக்கு போட்டது இப்போது எதிர் கட்சியாக உள்ள திமுக. இந்த தீர்ப்பில் எங்களுக்கு தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், நாங்கள் கூட அதை கொண்டாடவில்லை. ஆனால் அதிமுகவினர் இதை பெரிதாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அது தான் வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு கூறினார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x