Published : 03 Feb 2017 08:46 AM
Last Updated : 03 Feb 2017 08:46 AM

எண்ணூர் கடல் பகுதியில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக கடற்கரையில் திரண்ட மாணவர்கள்

எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்தது. எண்ணெய் படலம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால், கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. இதில், எர்ணாவூர் கடலோரப் பகுதியில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளது.

எண்ணெய் படலத்தை அகற்ற தன்னார்வலர்கள் தேவை என சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கப் பட்டது. இந்தப் பணிக்காக நூற்றுக் கணக்கான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தாங்களாகவே எண்ணூர் கடற்கரைக்கு வரத் தொடங்கி யுள்ளனர். அவ்வாறு எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருபவர்களின் ஒருவரான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய தன்னார்வ அமைப்பான ‘இஎஃப்ஐ’ அமைப்பின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி ‘தி இந்து’விடம் கூறுகையில் “இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் எண்ணூரில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அரசும் உதவிகளை செய்து வருகிறது. பணி செய்ய விரும்புவோர் யாரையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. அதிகம் பாதிக்கப்பட்ட எர்ணாவூர் விவேகானந்தா நகர், எண்ணூர் கடற்கரை பகுதிகளுக்கு தாங்களே சென்று பணியில் ஈடுபடலாம்” என்றார்.

தொடரும் பணி

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் கச்சா எண்ணெயை அகற்றும் நடவடிக் கைகளை முடுக்கி விட்டுள்ளது. தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என நூற்றுக் கணக்கானோர் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் நேற்று 6-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டனர். மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரை யில் திட்டு, திட்டாக படிந்துள்ள எண்ணெய் படலங்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 300 பேர் நேற்று காலை முதல் அகற்றினர்.

இந்நிலையில், எண்ணூர் கடல் பகுதியில் நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ‘‘கச்சா எண்ணெயை முழுமை யாக அகற்றும் பணி விரைவில் முடி வடையும்” என்று ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x