Published : 13 Oct 2016 09:51 AM
Last Updated : 13 Oct 2016 09:51 AM

உள்ளாட்சி 13: வாவ்... வழிகாட்டுது வாவிபாளையம் மக்கள் மருத்துவமனை!- இன்முக வரவேற்பு... 24 மணி நேரமும் சிகிச்சை... இல்லாதோருக்கு இலவசம்!

ஒரு புள்ளிவிவரம். இந்திய கிராமங்களில் வசிக்கும் 70 சதவீத மக்களில் 31 சதவீதம் பேர் அடிப்படை மருத்துவ சிகிச்சைக்குக் கூட 30 கி.மீ தூரம் பயணிக்கிறார்கள். தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறப்ப வர்கள் 27 சதவீதம் பேர். அதில் 33.1 சதவீதம் குழந்தைகள். 8 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லை. 39 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக்கூடம் கிடையாது. 18 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளே கிடையாது. சரி, வாருங்கள் நாம் வாவிபாளையம் செல்வோம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கிறது வாவிபாளையம். நாம் அந்த கிராமத்துக்குள் நுழைந்தபோது இரவு 12 மணியாகியிருந்தது. சில்வண்டுகளின் ரீங்காரம் தவிர்த்து நிசப்தம். தெரு விளக்கில் இருந்து வழிந்துகொண்டிருந்தது சிறுவெளிச்சம். சில நிமிடங்களில் நம்மை அழைத்துச் செல்ல வந்தார் தேவராஜ். பொடிநடையாக நடந்தோம். கொஞ்சம் கவலை சூழ்ந்தது. ‘நடுநிசி நேரம்... இந்த கிராமத்தில் எங்கு தங்குவது’ என்று எண்ணிக்கொண்டே ஒரு திருப்பத்தில் திரும்பினோம். கண் எதிரே கண்ட காட்சி சிலிர்க்க வைத்தது. சற்றே தொலைவில் ஒளிர்ந்துகொண்டிருந்தது, ‘வாவிபாளையம் மக்கள் மருத்துவமனை.’ மக்களால்... மக்களுக்காக... நடத்தப்படும் தமிழகத்தின் ஒரே 24 மணி நேர நவீன மருத்துவமனை அது.

அந்த இரவிலும் திறந்திருக்கிறது மருத்துவ மனை. வரவேற்பறையில் செவிலியர் பெண் இன்முகத்துடன் வரவேற்கிறார். சுடச் சுட தேநீர் கொடுத்தார்கள். திடீரென்று நிசப்தத் தைக் கலைத்தது இளம் பெண்ணின் அழுகுரல். கைக்குழந்தையுடன் பதற்றத்துடன் ஓடிவந்தார். குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. கண்கள் சொருகி விட்டிருந்தன. மின்னல் வேகத்தில் செயல் பட்டார்கள் செவிலியர்கள். ஒருவர் மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்தும் குடுவையைக் குழந்தைக்குப் பொருத்தினார். ஒருவர் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க, இன்னொருவர் ஊசியை செலுத்தினார். வீறிட்டது குழந்தை. சற்று நேரத்தில் நிலைமை சீரானது. சீராக மூச்சு விட்டபடி அசந்து உறங்கியிருந்தது குழந்தை. தாயின் முகத்தில் மலர்ச்சி.

“இன்னிக்கு ராத்திரி இங்கேயே தங்கிட்டு காலையில செக் பண்ணிட்டு வீட்டுக்குப் போகலாம் அக்கா” என்கிறார் செவிலியர். மெல்ல மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிப் பார்த்தோம். நோயாளி ஒருவரை காந்தி ஆறுதல்படுத்தும் காட்சி முகப்புப் படமாக வைக்கப்பட்டிருந்தது. நவீன ஆய்வகம், ஈ.சி.ஜி. பரிசோதனை மையம், மருந்தகம், உள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு எல்லாம் படுசுத்தமாக இருந்தன.

மருத்துவ இல்லத்தின் சேவை உள்ளங்கள்...

“வாங்க சார் கெஸ்ட் ஹவுஸ் போகலாம். தூங்குங்க, காலையில பேசிக்கலாம்” என்று அழைத்துச் சென்றார் தேவராஜ். மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவர் தங்குவதற்கு அருமையான வீடு கட்டப்பட்டிருக்கிறது. கொஞ்சம் தள்ளி செவிலியர் தங்கும் விடுதி. அருகில் இருக்கும் விருந்தினர் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவ மனையில் கண்ட காட்சிகள் எல்லாம் மனக் கண்ணில் ஓடின. இன்ப அதிர்ச்சியில் உறக்கம் வரவில்லை. மெதுவாக தேவராஜிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“எனக்கும் தூக்கம் வரலீங்க. தாராளமாப் பேசலாமுங்க. இந்த மருத்துவமனைக்கு மிகப் பெரிய வரலாறு இருக்கு. 15 வருஷங்களுக்கு முன்பு வாவிபாளையம் ரொம்ப பின் தங்கின கிராமமுங்க. பக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கெடையாது. அவசரம்னா 15 கிலோ மீட்டரு தள்ளியிருக்கிற பல்லடத் துக்குதான் ஓடோணும். பெரிய பிரச்சினைன்னா 50 கிலோ மீட்டரு தள்ளி இருக்கிற கோயமுத்தூருக்கோ, திருப்பூருக்கோதானுங்க ஓடோணும். வாவி பாளையம் ஒரே புதர்க் காடுங்க. பாம்பு, தேளு, நட்டுவாக்காலி அதிகமுங்க. அடிக்கடி பாம்பு கடிச்சி விவசாயிங்க செத்துப் போவாங்க. நானே கண்ணு முன்னாடி நாலைஞ்சு சாவு பார்த்திருக்கேன். வருஷத்துக்கு சராசரியா 50 பேராச்சும் செத்துடுவாங்க. அப்போதான் ஊருக்குள்ள ‘சிந்தனை சிற்பி’ன்னு ஒரு அமைப்பு உருவாகியிருந்தது. எம்.எஸ்.உதயமூர்த்தி அய்யாவால ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் சிலர் அதை உருவாக்கியிருந்தாங்க.

2001-ம் வருஷம் உள்ளாட்சித் தேர்தல் வந்துச்சு. தேர்தலில் அந்த அமைப்புல இருந்த சுந்தரமூர்த்தி அண்ணன் வாவிபாளையம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரா தேர்வு செய்யப்பட்டாருங்க. எங்க கிராமத்துக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேணும்னு மனு மேல மனு போட்டாரு. ஒண்ணும் நடக்கலைங்க. ஒருபக்கம் பாம்புக் கடி, குடும்பத் தகராறுல தற்கொலைன்னு இறப்பு எண்ணிக்கை அதிகமாகிட்டேப் போச்சு. இனிமே அரசை நம்பி பலன் இல்லை, நாமளே ஆஸ்பத்திரி கட்டலாம்னு முடிவு பண்ணோமுங்க. சொந்தமா ஆஸ்பத்திரி கட்ட கிராம சபைக் கூட்டத்துல தீர்மானம் போட்டோம். வாவிபாளையம் மட்டுமில்லாம பக்கத்துல இருக்கிற கம்மாளப்பட்டி, ஜல்லிப்பட்டி, கேத்தனூர், செஞ்சேரிப்புத்தூர் ஆகிய நான்கு கிராமப் பஞ்சாயத்து தலைவர்களிடமும் பேசினோம். அவங்க பஞ்சாயத்திலேயும் கிராம சபைக் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேத்தித் தந்தாங்க.

எல்லாம் சரி, ஆஸ்பத்திரி கட்ட பணம் வேணும், இடம் வேணும். எங்கிட்டுப் போக..? பஞ்சாயத்துல பத்துக் காசு கிடை யாதுங்க. மக்கள்கிட்டயே போக முடிவு பண்ணோம். உண்டியல் ஏந்தினோம். வாவி பாளையம், மந்திரிபாளையம், குள்ளம் பாளையம், கோட்டைப்பாளையம், கழுவேரிப் பாளையம், கொசவம்பாளையம், பழனிக் கவுண்டன்பாளையம், காளியப்பன்கவுண்டன் புதூர்ன்னு சுத்துவட்டாரத்துல சுமார் 25 கிராமங்கள்ல தண்டோரா அடிச்சு உண்டியல் வசூலிச்சோமுங்க.

பள்ளிக்கூடப் பசங்க, வயசானவங்க எல்லோரும் உண்டியல் ஏந்தினாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க, ஸ்கூல் புள்ளைங்க தீனி வாங்கித் தின்ன வெச்சிருந்த காசையெல்லாம் சேகரிச்சு வந்து இருவது, முப்பது ரூபாய்ன்னு கொடுத்தாங்க. (நெகிழ்ச்சியில் கண் கலங்குகிறார்) நெடுஞ் சாலையில போகிற வண்டிகள், பேருந்துகள்ல துண்டு அறிக்கை கொடுத்தோம். விசுவோட ‘அரட்டை அரங்கம்’, அப்புறம் டி.ராஜேந்தரோட ‘அரட்டை அரங்கம்’ இதிலெல்லாம் எங்க பஞ்சாயத்துத் தலைவர் சுந்தரமூர்த்தி அண்ணன் பேசினாரு. விஷயம் தீ போல சரசரன்னு பரவ ஆரம்பிச்சிருச்சு.

இதைக் கேள்விப்பட்ட ‘அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்கம்’ எங்களைத் தொடர்புகொண்டு ‘இடத்துக்கு நாங்க பொறுப்பு, உடனே இடத்தைப் பாருங்க’ன்னு ஏழரை லட்சம் ரூபா அனுப்பி வெச்சாங்க. கோவையின் பிரபல மருத்துவமனைகளோட மருத்துவர்கள் செல்வராஜ், திருமலைசாமி, ஒண்டிபுதூர் தனியார் ஆஸ்பத்திரி டாக்டருங்க இவங்கெல்லாம் நிதி உதவி செஞ்சாங்க. சுத்துவட்டாரத்துல பெரிய விவசாயிங்க, கோழிப் பண்ணை நிறுவனங்கள், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள்னு நிதி குவிஞ்சுது. 2006-ம் வருஷம் சுந்தரமூர்த்தி அண்ணன், ‘நான் ஒருமுறைதான் பஞ்சாயத்துத் தலை வரா இருப்பேன்’னு ஒதுங்கிட்டார்.

ஆனாலும் தொடர்ந்து வந்த பஞ்சாயத்துத் தலை வருங்க ஆதரவு கொடுத்தாங்க. மளமளன்னு வேலைங்க ஆரம்பிச்சுது. ரூ.20 லட்சத்துல திட்டமிட்டு 60 லட்சத்துல வேலை முடிஞ்சு துங்க. 2005-ல் ஆஸ்பத்திரி கட்டி முடிச்சிட் டோம். ‘வாவி மருத்துவமனை - மக்களால்... மக்களுக்காக’ன்னு பேரு வெச்சோமுங்க. கிராமப் பஞ்சாயத்துல வரிவிலக்கு கொடுத்தி ருக்காங்க. இலவசமா குடி தண்ணீர் தர்றாங்க. நிர்வாகம் பார்க்க மக்களால் தேர்வு செய்யப்பட்ட குழு இருக்குது. 24 மணி நேரமும் மருத்துவம் பார்க்க டாக்டர் மதன் சார் இருக்காரு.

சுழற்சி முறையில் செவிலிப் பெண்கள் அன்போட வேலைப் பார்க்கிறாங்க. கிட்டத்தட்ட அரசாங்கத்துக்கு இணையான சம்பளம் தர்றோமுங்க. ஜெனரேட்டர் ரூம் இருக்கு. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்குது. ஒரு நாளைக்கு சுமார் 30 கிராமங்களில் இருந்து 75 நோயாளி கள் வர்றாங்க. ஊசி போட்டா மட்டும் மருத்துவக் கட்டணம் 30 ரூபா. ஆலோசனைக்கு கட்டணம் ஏதுமில்லை. மருந்தகத்தில் விலை குறைந்த, தரமான அடிப்படை மருந்து கள் மட்டுமே விற்கிறோம். வசதி இல்லாத வங்களுக்கு முழுக்கவும் சிகிச்சை இலவசம். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முந்தைய நிலை வரைக்கும் இங்கே மருத்துவம் பார்க்கிறோம். சீக்கிரமா அந்த வசதியையும் கொண்டாந்துடுவோமுங்க...” கருணையின் உதடுகளால் தேவராஜன் பேசி முடித்தபோது விடிந்திருந்தது. கதிரொளியில் கண் கூசியது.

உள்ளாட்சி என்னும் மக்கள் அதிகாரத்தின் வெளிச்சம் அது!

- பயணம் தொடரும்... | படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x