Published : 04 Nov 2015 07:47 PM
Last Updated : 04 Nov 2015 07:47 PM

உயர் நீதிமன்றப் பாதுகாப்பு குறித்து தமிழக அரசின் மனு தள்ளுபடி: கருணாநிதி கருத்து

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மத்திய காவல்துறை பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சென்னை உயர் நீதி மன்றத்திற்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து, ஒரு வழக்கு உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று, தமிழக உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி, தலைமை நீதிபதி சஞ்சய் கவுல் அவர்களும், நீதிபதி டி.எஸ். சிவஞானம் அவர்களும் தீர்ப்பு கூறியது பற்றி நான் விளக்கமாக 2ஆம் தேதி கொடுத்த அறிக்கையிலே விரிவாக எழுதியிருந்தேன். அந்தத் தீர்ப்பு முதலில் கூறப்பட்ட போதே, முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில், தமிழகப் போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்று நீதிபதி கூறவே இல்லை என்று மறுத்து விட்டார். அதன் பின்னர் நான் விளக்கமாக ஏடுகளில் வெளி வந்த செய்திகளை யெல்லாம் விரிவாக ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியிருந்தேன்.

சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தின் பாதுகாப்புக்கு மத்திய காவல் துறையின் பாதுகாப்பா? மாநில அரசின் பாதுகாப்பா? என்பதற்கான வழக்கு தான் 30-10-2015 அன்று உயர் நீதி மன்ற முதல் அமர்வின் முன்னால் விசாரணைக்கு வந்து, அப்போது தலைமை நீதிபதி சஞ்சய் கவுல் அவர்களும், நீதிபதி டி.எஸ். சிவஞானம் அவர்களும் "சுதந்திரமான ஓர் அமைப்பைக் கொண்டு உயர் நீதி மன்றத்துக்கு தற்காலிகமாக பாதுகாப்பு வழங்குவது அவசியம். எனவே சென்னை உயர் நீதி மன்றத்துக்கு நவம்பர் 16ஆம் தேதி முதல் மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அடுத்த ஆறு மாதத்துக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்கும்.

இதற்காக மத்திய அரசு கோரிய வைப்புத் தொகையான 16 கோடியே 60 லட்சம் ரூபாயை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும். மேலும் நீதிபதிகள் கூறும்போது, நீதி மன்றப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினையை விளையாட்டாக கருதப்படுவதற்காக நாங்கள் எங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். உயர் நீதி மன்றப் பாதுகாப்பாக இதனை எடுத்துக் கொள்ளாமல் அரசியல் உள்நோக்கத்தோடு தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டதற்காக வேதனையை வெளிப்படுத்த விரும்புகிறோம்" என்றும் தெரிவித்தார்கள்.

ஆனால் தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளாமல், அவசர அவசரமாக உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்து கொண்டார்கள். அதன் மீது தான் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பி.எஸ். தாக்கூர், பிரபுல்லா சி. பந்த் ஆகியோர் இன்று (4-11-2015) விசாரித்து, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள், "நீதிபதிகள் அச்சத்துடன் செயல் படுவதை ஏற்க முடியாது. மத்திய படை பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால், ராணுவத்தைக் கொண்டு வரலாம். சென்னை உயர் நீதி மன்ற உத்தரவில் தலையிட முடியாது. தேவைப்பட்டால் தமிழக அரசு, ஐகோர்ட்டை அணுகலாம். ஐகோர்ட்டிற்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சினை? அசாதரண சூழலில் மத்திய படையின் பாதுகாப்பை அழைப்பதில் தவறில்லை. மத்தியப் படையின் மொழிப் பிரச்சினை என்பது உங்கள் பிரச்சினை அல்ல. நீதித் துறை எப்போதும் விழிப்புடனும், மரியாதையுடனும் செயல்படுவது அவசியம்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்தவுடன் அதனை மதித்து, தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருந்தால், உச்ச நீதி மன்றம் வரை சென்று குட்டுப்படத் தேவையில்லாமல் இருந்திருக்கும் என்பது தான் நமது கருத்து.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x