Last Updated : 16 Apr, 2014 10:53 AM

 

Published : 16 Apr 2014 10:53 AM
Last Updated : 16 Apr 2014 10:53 AM

இழந்த இளமையை மீட்டு அழகாக மாற்றும் ஊசி: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இலவசம்

திரைப்பட நடிகர், நடிகைகள் எப்போதும் அழகாகவும், இளமை யாகவும் இருக்க போட்டுக் கொள்ளும் போடாக்ஸ் என்ற ஊசி மருந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இலவசமாக போடப்படுகிறது. இதன் மூலம் இழந்த பொலிவை மீண்டும் கொண்டுவர முடியும்.

இந்தியாவில் அரசு மருத்துவ மனைகளில் முதல்முறையாக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் கடந்த ஜூன் மாதம் அழகியல் துறை (Cosmetology) தொடங்கப்பட்டது. இந்த துறையில் இழந்த இளமையை மீண்டும் கொண்டு வந்து அழகாகவும், இளமை யாகவும் மாற்றுவதற்கு போடாக்ஸ் (BOTOX) என்ற ஊசி இலவசமாக போடப்படுகிறது.

இது தொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை அழகியல் துறை தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல் கூறியதாவது: போடாக்ஸ் மருந்து மண்ணில் உள்ள ஒருவித உயிரி மூலம் கிடைக்கிறது. நமது முகம் பல் வேறு தசைகள் நிறைந்த பகுதியாகும். அதனால்தான் அழும் போதும், சிரிக்கும் போதும், கோபப்படும் போதும் முகத்தோற்றம் பலவிதமாக மாறுகிறது.

முகத்தில் தோல் சுருங்கி விடுவதால் வயதான தோற்றம் ஏற்படுகிறது. அதே போல சிலருக்கு கண் புருவம், வாய், உதடு உள்ளிட்ட உறுப்புகளின் வடிவங்கள் மாறி இருக்கும். இதற்கு முகத்தில் உள்ள தசைகளே முக்கிய காரணம். போடாக்ஸ் ஊசி மூலம் தோல்களின் சுருக்கத்தை நீக்கி, இழந்த இளமையை திரும்பப் பெற லாம்.

உள்ளங்கை வியர்ப்பது

இந்தியாவில் 2 கோடி பேர் உள்ளங் கைகள், உள்ளங்கால்கள் வியர்க்கும் நோயினால் அவதிப்பட்டு வருகின்ற னர். இதற்கு ஒரு விதமான சுரப்பியே காரணம். போடாக்ஸ் ஊசி மருந்தால் இந்த நோயை சீர்படுத்த முடியும்.

மார்பக வளர்ச்சி

சில பெண்களுக்கு மார்பகம் வளர்ச்சி இல்லாமல் இருக்கும். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். போடாக்ஸ் ஊசி மருந்து மூலம் மார்பக தசைகளை சீர்படுத்தி குறையை நிவர்த்தி செய்ய இயலும். இந்த சிகிச்சைக்கு 2 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

தனியார் மருத்துவமனையில் ரூ.20 ஆயிரம்

தனியார் மருத்துவமனைகளில் போடாக்ஸ் ஊசி போட ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சாதாரண ஏழை-எளிய மக்களும் போடாக்ஸ் ஊசி போட்டுக் கொண்டு எப்போதும் அழகாகவும், இளமையாகவும் இருக்கலாம். இதற்காகத்தான் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இந்த ஊசியை இலவசமாக போடுகிறோம்.

போடாக்ஸ் ஊசியை போடுவதால், உடலில் எவ்விதமான பக்க விளைவும் ஏற்படாது. ஆனால், இந்த ஊசியை ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதாது 6 மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x