Published : 01 Aug 2014 02:36 PM
Last Updated : 01 Aug 2014 02:36 PM

இலங்கை அரசு வலைதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்த கட்டுரை நீக்கம்

மீனவர் பிரச்சினையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சாடப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டுரை, இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 1, 2014 தேதியிட்ட அந்தக் கட்டுரைக்கு, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி வரும் கடிதங்களை கொச்சைப்படுத்தும் வகையில் தலைப்பு ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. (How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?)

ஷெனாலி டி வடுகே என்பவர் எழுதியிருந்த அந்தப் பதிவின் முக்கிய அம்சம்: "இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு கவுன்சிலில் கலந்து கொள்ள வந்த சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட இந்திய குழுவினர், இந்தியா - இலங்கை உறவில் தமிழ்நாடு குறுக்கீடு இருக்காது என தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு அவர்கள் அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கும்போது, தமிழக மீனவர்கள் அவர்கள் கடல் எல்லையில் மீன் வளம் இல்லாததால் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறுகின்றனர் என்பதை ஜெயலலிதா மறுக்க முடியாது என்பது உறுதியாகிறது.

எனவே இலங்கையை குற்றம்சாட்டி மோடிக்கு கடிதம் எழுதும் தந்திரத்தை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்டுவித்த மாதிரி எல்லாம் ஆட மோடி ஒன்றும் அவரது கைப்பாவை இல்லை என்பதை ஜெயலலிதா தெரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.

கடித தந்திரத்தை கைவிட்டுவிட்டு மோடி வலியுறுத்துவது போல் யதார்த்த நிலையை உணர்ந்து அரசாட்சி செலுத்துவது ஜெயலலிதாவுக்கு நல்லது. இந்திய கடலில் மீன்வளம் குறைந்துவிட்டால் அண்டை நாட்டுக் கடலில் அத்துமீறி மீன்பிடிக்கலாம் என்பது அர்த்தமில்லை. மாறாக, ஜெயலலிதா தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்".

இவ்வாறு விவரிக்கப்பட்ட அந்த பதிவின் கீழ் ஒரு பொறுப்புத்துறப்பு வாக்கியமும் இணைக்கப்பட்டிருந்தது. (-The Ministry of Defence bears no responsibility for the ideas and opinion expressed by the numerous contributors to the “Opinion Page” of this web site-)

இந்த வலைத்தளத்தின் கருத்துப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள கருத்துகள், யோசனைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு; கட்டுரை நீக்கம்

இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகியிருந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த கட்டுரைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில், டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்; இக்கட்டுரைக்காக இலங்கை அதிபரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும் மன்னிப்பு கேட்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்; மன்னிப்பு கேட்க இலங்கை அரசு மறுத்தால் அந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்ளவும் இந்திய அரசுத் தயங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

தமிழக முதல்வரையும், தமிழக மக்களின் பிரச்சினையையும் தரக்குறைவாக விமர்சித்துள்ள இலங்கை அரசுடனான தூதரக உறவை மத்திய அரசு முறித்துக் கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையில் இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இது தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அதிகாரியையும் தொடர்பு கொண்டு கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்தக் கட்டுரையையும், சர்ச்சைக்குரிய புகைப்படத்தையும் தமது வலைதள முகப்புப் பக்கத்தில் இருந்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக நீக்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x