Published : 15 Jun 2016 08:34 PM
Last Updated : 15 Jun 2016 08:34 PM

இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்

திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ''பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் திரையுலகம் கண்ட மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். நன்கு படித்த பண்பாளர். நாகரீகமான மனிதர். படப்பிடிப்புக்கு வரும் முன்பே ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு திறம்பட இயக்கும் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’, நான் நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள், ‘தர்மம் எங்கே’, ‘எங்க மாமா’, ‘தெய்வ மகன்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இதில் நான் நடித்த ‘தெய்வ மகன்’ ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்ற சிறப்பினை பெற்றது.

திருலோகச்சந்தர் பெண்களை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்குவதிலும், கதாபாத்திரங்களின் குண இயல்புகளை தனக்கே உரிய சிறப்பான பாணியில் சித்தரிப்பதிலும் வல்லவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவு திரைப்படத்துறையினருக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x