Published : 01 Nov 2014 10:26 AM
Last Updated : 01 Nov 2014 10:26 AM

இன்று தமிழகத்துடன் குமரி இணைந்த நாள்: திருவிதாங்கூரில் குமரி இருந்தபோது.. நினைவுகளைப் பகிர்கிறார் கொடிக்கால் ஷேக் அப்துல்லா

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத் துடன் இணைந்து 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இன்று 59-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைப்புக்காக நடைபெற்ற திருத்தமிழர் போராட் டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா (80), அந்த நாள் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த போது நிலவிய சூழ்நிலை என்ன?

அப்போது உரிமைகள் மறுக் கப்பட்டிருந்தது. குடியானவர் களுக்கு 2 இடங்குழி அரிசி (3 கிலோ) கன்ட்ரோல் துணி (மலிவான துணி) 2 ராத்தல் மரவள்ளி கிழங்கு (3 கிலோ) இவைதான் வாழ்க்கை.

குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அரிசியும், கிழங்கும் வழங்கப்படும். மலிவான துணியை சில குறிப்பிட்ட கடைகளில் வாங்கி அணிந்து கொள்ள வேண்டும். படிப்பதற்கு கூட அனைவருக்கும் உரிமை இல்லை. சாதி கொடுமை தலைவிரித்தாடியது.

ஆனால் ஒன்று, அப்போதும் கேரளாவில் ஸ்ரீமூலம் மன்னரின் அசெம்பிளி இருந்தது. அங்கு மன்னருக்கு துதிபாடுபவர்கள் மட்டுமே இருந்ததுதான் சோகம்.

தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு?

சாதி, மதம்,மொழி என மக்கள் பிரித்தாளப்பட்டனர். மன்னரையும், திவான்களையும் எதிர்ப்பவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 1954 ஆகஸ்ட் 11 அன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. திருத்தமிழர் போராட்டத்தின் ஒருகட்டமாக ஆகஸ்ட் 8-ம் தேதி நாகர்கோவில் ஜில்லா நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு நீதிபதியாக அன்னா சாண்டி இருந்தார். இந்திய தேசத்தின் முதல் பெண் நீதிபதி. மாஜிஸ்திரேட்டாக குழித்துறை தெக்குறிச்சியைச் சேர்ந்த ஓமணகுஞ்சம்மாள் என்ற பெண் இருந்தார். மறியலில் ஈடுபட்டபோது, எனக்கு வயது 20. கைது செய்யப்பட்டு, 2 நாட்கள் கோட்டாறு சிறையிலும், தொடர்ந்து 3 மாதம் திருவனந்தபுரம் மத்திய சிறையிலும் அடைத்தார்கள். போராட்டத்தின்போது தமிழரசு கட்சியில் இருந்தேன். சிறைச்சாலை என்னை கம்யூனிஸவாதியாக மாற்றி அனுப்பியது.

மலையாளிகளுக்கு எதிரான போராட் டத்தில் கேரள சிறையில் அடைக்கப் பட்ட காலம் எப்படி இருந்தது?

சிறையில் இருப்பவர்களை அடிக்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால், சிறையில் இருந்தபோது அங்கிருந்த மலையாள ஜெயிலர் எங்களை தினம் அடிப்பார். அதே சிறையில் இருந்த கேரள மாநிலம் வயலார், புன்னப்புரையைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்தனர். பிறப்பால் அவர்கள் மலையாளியாக இருந்தாலும், இந்திய விடுதலையை பார்த்த அதே கண்ணோட்டத்தில் கன்னியாகுமரி விடுதலையையும் பார்த்தனர். அவர்களுடன் இருந்ததால் இலக்கிய தாகம், நாட்டு வேட்கை என என் உலக சிந்தனை விரிவடைந்தது.

குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய தியாகிகளுக்கு உரிய அங்கீகாரம் இப்போது கிடைக்கிறதா?

இதில் என் நிலைப்பாட்டில் 2 வகை உண்டு. திமுக ஆட்சியின்போது திருத்தமிழர் விடுதலை போராட்ட தியாகிகளுக்கு தாமரை பட்டயமும், ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. இப்போது ரூ.4 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

சிறையில் வழங்கப்பட்ட சான்றிதழை பார்த்து தியாகிகள் என்று அங்கீகாரம் செய்தார்கள். இதை வரவேற்கிறேன்.

திருத்தமிழர் விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தாருக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க வேண்டும். தியாகிகளிடம் குறைகள் கேட்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மரியாதை செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவுடன் இருந்திருந்தால் வளர்ச்சி அடைந்திருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக் கிறார்களே?

நிச்சயமாக இல்லை. தாய் தமிழகத்துடன் இணைப்புக்கு பின்னர்தான் கன்னியாகுமரி மாவட் டத்துக்கு நல்ல சாலைகள் கிடைத் தன. காமராஜர் முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த நெய்யாறு இடதுகரை கால்வாய் தொடங்கி ஏராளமான பணிகள் அதன் பின்னர்தான் குமரிக்கு வந்து சேர்ந்தன.

இப்போது சில அரசியல்வாதிகள், அதிகாரிகளால் வளர்ச்சி பணிகள் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரவில்லை. அது இணைப்பின் பின்னூட்டமான தவறு அல்ல. நேர்மையான அரசியல்வாதிகள், அதிகாரிகள் இல்லாமையின் வெளிப்பாடு. சாதி, மதம், பணம், சூது இவைதான் இப்போது இந்தியாவை பிடித்து ஆட்டுகிறது. மனிதனை மனிதன் நேசித்தாலே நாங்கள் போராடியதன் நோக்கம் நிறைவேறிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x