Published : 10 Nov 2014 03:31 PM
Last Updated : 10 Nov 2014 03:31 PM

இந்தியாவில் வசிக்கும் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்: மத்திய அரசுக்கு சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்

இந்தியாவில் வசிக்கும் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பவும், அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் அனைத்து உரிமைகளுடன் வாழவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் சிவில் உரிமைக் கழக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்திருந்த விக்னேஸ்வரன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று கூறியதாவது:

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம் நடந்து வருகிறது. அதேவேளையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆளுநரின் நிர்வாகமும் அங்கே நடக்கிறது. மாகாண அரசின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு பல முட்டுக்கட்டைகள் போடப்படு கின்றன. நிதி ஒதுக்கீடும் போதிய அளவில் இல்லை.

போருக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. முழுமை யான ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ், எந்த சுதந்திரமும் இல்லாத மக்களாகவே தொடர்ந்து வாழ் கின்றனர். ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட இளம் விதவைகள் வாழ்வா தாரம் இன்றி தவிக்கின்றனர். தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு ராணுவத்துக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் ஒரே இடத்தில் வாழ் வதைத் தடுக்கும் வகையில் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. அதாவது, தமிழர்களுக் கான தனித்துவ அடையாளத்துடன் கூடிய பகுதிகள் நாட்டில் எங்கும் இருக்கக்கூடாது என்பதில் இலங்கை அரசு முனைப்பாக உள்ளது.

இந்நிலையில், 13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இலங்கை அரசிடம் இந்தியா கூறி வருகிறது. இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கான சுய நிர்ணய உரிமையைப் பெற்றிட 13-வது திருத்தச் சட்டம் உதவாது. உரிய அதிகார பகிர்வு கிடைக்காது என்பதாலும், ஒற்றை ஆட்சி முறையை வலுப்படுத்துகிறது என்பதாலும் இந்த திருத்தச் சட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனினும் தங்களிடம் அளித்த வாக்குறுதிப்படி குறைந்தபட்சம் 13-வது திருத்தச் சட்டத்தையாவது அமல்படுத்தும்படி இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்.

இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை உறுதியாக நம்புகிறோம். புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைப் போக்க உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழர்களின் பகுதி தனித்து வமான அடையாளத்துடன் நீடிக்க வேண்டுமானால், தமிழர் பகுதிகளில் மக்கள்தொகை அதிகரிக்க வேண்டும். இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடத்தில் உடனடியாக மறுகுடி யமர்த்தப்பட வேண்டும். இந்தியா வில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கே திரும்பி அனுப்ப இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் திருப்பித் தருமாறு இலங்கையை இந்தியா வற்புறுத்த வேண்டும். போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்தும் கடமை இந்தியாவுக்கும் உள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் நிலம் தமிழர்களுக்கே கிடைத்து, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் தடை யின்றி கிடைக்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏராளமானோர் மீண்டும் இலங்கைக்கே திரும்பி விடுவர்.

இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.

பேட்டியின்போது தமிழரசு கட்சியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான மாவே சேனாதி ராஜா, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தரன், வடக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழக பொதுச் செயலாளர் வீ.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x