Published : 25 Feb 2014 09:06 AM
Last Updated : 25 Feb 2014 09:06 AM

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அற்புதம் அம்மாள் பிரச்சாரம்?- ம.தி.மு.க.வினர் அதிர்ச்சி

மரண தண்டனை ஒழிப்பு கருத்தரங்கில் பங்கேற்க வந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களுக்கு தனது பேச்சில் நன்றி கூட தெரிவிக்காமல், ஆளுங்கட்சியின் பிரச்சாரகர் போல் பேசியதால் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

முதல்வருக்கு நன்றி

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று ஆரம்பம் முதல் கூறிவந்தது தற்போது நிரூபணமாகியுள்ளது. வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள் கூட இதனை தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர். அப்பாவி தமிழர்கள் மரண தண்டனை குறைப்பில் அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு மாநில முதல்வர் தனது கடமையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டது அரசியல் என்று விமர்சிப்பவர்கள்தான் அரசியல் நடத்துகின்றனர்.

மறு சீராய்வு மனுவும், நீதியரசர் சதாசிவம் பார்வைக்கு செல்லும் என்பதால், அவர் அதனை பார்த்துக்கொள்வார் என்று காத்திருக்கிறோம். தமிழினத்தை பாதுகாத்த முதல்வருக்கு ஒட்டு மொத்த தமிழினமும், மனித உரிமை ஆர்வலர்களும் தங்களது நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக முதல்வரின் அணுகுமுறையை பின்பற்றி, கர்நாடக முதல்வரும் வீரப்பன் கூட்டாளிகள் என பிடித்து வைத்துள்ள அனைத்து அப்பாவி தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.

அதிர்ச்சியில் ம.தி.மு.க.

மரண தண்டனை ஒழிப்பு கருத்தரங்கில் ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி, கொளத்தூர் மணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். மேலும், திரளான ம.தி.மு.க.வினரும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்று இருந்தனர். அற்புதம் அம்மாள் பேசும்போது, மரண தண்டனை குற்றவாளிகள் விடுதலைக்காக துவக்கம் முதல் முயற்சிகளை எடுத்த வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்காததால் ம.தி.மு.க.வினரும், மனித உரிமை ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கருத்தரங்கில் பங்கேற்ற ம.தி.மு.க.வினர் சிலர் கூறியதாவது:

மூவரின் மரண தண்டனைக்கு எதிராக துவக்க காலம் முதல் வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்கள்தான் போராடி வருகின்றனர். இயக்கங்கள் நடத்துவதோடு நில்லாமல், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை இந்த வழக்கில் வாதாட ஏற்பாடு செய்தவர் வைகோ. ஆனால், அவருக்கு ஒரு வார்த்தையில் நன்றி கூட அற்புதம் அம்மாள் தெரிவிக்கவில்லை. முழுக்க, முழுக்க முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று ஆளும் அரசை பாராட்டி பேசி, ஆளுங்கட்சியின் பிரச்சாரகராக அவர் மாறிவிட்டது அதிர்ச்சியளிக்கிறது.

தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க காரணமாக இருந்தவர்களை மறந்து விட்ட அவரது செயல் வருத்தமளிக்கிறது. அவரை அ.தி.மு.க. தலைமை தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் என்றே தோன்றுகிறது.

அவர்களின் நிர்பந்தம் காரணமாகவே, மற்ற தலைவர்கள் யாருடைய பெயரையும் அவர் மறந்தும் குறிப்பிடவில்லை என நினைக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x