Published : 18 Mar 2017 04:57 PM
Last Updated : 18 Mar 2017 04:57 PM

ஆர்.கே.நகர் மார்க்சிஸ்ட் வேட்பாளராக லோகநாதன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளாராக லோகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக லோகநாதன் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:

''ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத்தொகுதி இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது எனவும், வேட்பாளராக கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஆர்.கே.நகர் தொகுதிச் செயலாளருமான ஆர்.லோகநாதனை (வயது 39) நிறுத்துவது எனவும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சிப்பொறுப்பிலிருந்த திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியினால் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றமும், மேம்பாடும் ஏற்படவில்லை.

மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், குடிநீர், வேலைவாய்ப்பு, குடியிருப்பு போன்ற வசதிகள் இன்றளவும் பெரும் பிரச்சினைகளாகவே உள்ளன. அரசு நிர்வாகத்தில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை மேலோங்கியுள்ளது.

ஆற்றுமணல், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து வளங்களும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக ஆகிய ஆட்சியாளர்களின் துணையோடு கொள்ளை போகின்றன. தவறான கொள்கை செயலாக்கத்தினால் விவசாயமும், தொழிலும் நலிவடைந்து வருகின்றன. படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான திட்டங்கள் இல்லை. அரசுத்துறை- பொதுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படவில்லை.

பெண்கள்-குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளும், சாதி ஆணவக் கொலைகளும், தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. கடலை நம்பி வாழும் மீனவர்கள் அன்றாடம் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், கொல்லப்படுவதுமான நிலைமை தொடர்கிறது.

மத்திய பாஜகவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி - கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுத்தும் வகையிலேயே உள்ளது. நாடு முழுவதும் விவசாயம், தொழில், சேவைத்துறை என அனைத்து துறைகளும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

விவசாயிகளின் தற்கொலை, அதிர்ச்சி மரணம் அதிகரிக்கிறது. வேலையின்றி இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் என அனைத்தும் தனியார் கொள்ளைக்கு அனுமதிக்கப்படுகிறது. செல்லா நோட்டு அறிவிப்பினால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். நாட்டின் வளர்ச்சி - மக்கள் வாழ்க்கை மேம்பாடு புறக்கணிக்கப்படுகிறது.

பாஜகவின் மதவெறி, சாதிவெறி அரசியலால் மக்கள் ஒற்றுமை சிதைக்கப்படுகிறது. நாடெங்கும் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன - வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இத்தகைய நிலைமை மாற்று அரசியலுக்கான தேடலை மக்களிடையே உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தான் பாஜக, காங்கிரஸ், திமுக, அஇஅதிமுக கட்சிகள் மற்றும் சாதி - மதவெறி சக்திகளுக்கு மாற்றான அரசியலை தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு , மின்துறையில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் உதய் திட்டம் திணிப்பு, புயல் மற்றும் வறட்சி நிவாரணத்திற்கான நிதி உதவிக்கோரிக்கை நிராகரிப்பு, தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு திணிப்பு, விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி, உணவு பாதுகாப்பு சட்டத்தை திணித்து பொது விநியோக முறையில் உணவு பொருட்கள் வழங்க மறுப்பது, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைப்பது என மத்திய பாஜக அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது. இதற்கு தமிழக அரசு துணை நிற்கிறது.

ஜெயலலிதா மறைவினைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு அசாதாரணமான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பினைத் தொடர்ந்து அதிமுக மூன்று பிரிவாக பிளவுபட்டு அதிகாரப்போட்டியில் ஈடுபட்டுள்ளது. அதிகார வேட்கையில் ஜனநாயக மாண்புகளை புறந்தள்ளி சூழலை தனதாக்க திமுக முயற்சிக்கிறது.

மாநில அரசியல் சூழலை பயன்படுத்தி புறவழிப்பாதையில் தமிழகத்தில் காலுன்ற பாஜக முயற்சிக்கிறது. இந்நிலையில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் வளர்ச்சியையும் - மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஊழலை எதிர்க்கவும், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் வேண்டிய பெரும்பொறுப்பு ஜனநாயக சக்திகளின் முன்னே உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இதன் பகுதியாகவே ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கும், ஆட்சிகாலத்து தவறுகளுக்கும் மாற்றாக 'மாற்று அரசியல்' முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிற அனைத்து இடதுசாரி ஜனநாயக கட்சிகளும், இதர ஜனநாயக சக்திகளும் - அமைப்புகளும், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர். லோகநாதனை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விசிக போட்டியிடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் எங்களுக்குள் எந்தக் கசப்பும், சங்கடமும் இல்லை. இனி தேர்தல் அல்லாத மக்கள் பிரச்சினைகளில் மட்டுமே மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து செயல்படும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

ஆர்.கே.நகர் மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன்

லோகநாதன் மீனவர் குடும்பத்தில் பிறந்தவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றி 1996-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவர். தற்போது ஆர்.கே.நகர் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x