Published : 30 Jun 2015 10:48 AM
Last Updated : 30 Jun 2015 10:48 AM

ஆர்.கே.நகரில் அதிமுக வெற்றி... ஜனநாயகம் தோல்வி: சி.மகேந்திரன் கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோற்றுவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோற்றுவிட்டது.

இது எதிர்பார்த்த வெற்றி என்பதால் அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்த வெற்றிக்கு பின்னால் ஜனநாயகம் சீரழிந்து கிடக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் இலவசங்களையும், சலுகைகளையும் மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்தனர் என்பது வேதனைக்குரியது.

இத்தேர்தலில் நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என விரும்பினோம். அதையே செய்துள்ளோம்.

இப்போது நாங்கள் பெற்றுள்ள வாக்குகள் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளன" என்றார்.

சி.மகேந்திரன் அறிக்கை: இது தொடர்பாக சி.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆர்.கே.நகர் தொகுதியில் இடசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட எனக்கு, வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில முதலமைச்சர் போட்டியிட்ட இந்த தொகுதியில் அமைச்சர்கள், ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் தலைவர்கள் என்று ஆயிரக்கணக்கில் ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருந்து நடத்திய ஆளும் கட்சி ஆதிக்க தேர்தலை எதிர்த்து தான், இடதுசாரி கட்சிகள் இந்த வாக்குகளைப் பெற்றுள்ளோம். பெற்ற இந்த 9,710 வாக்குகளும் எதிர்கால ஜனநாயக மாற்றத்திற்கான விதை நெல்களாகும்.

ஆளும் கட்சியின் அதிகாரபலம், அரசு எந்திரத்தின் அடக்குமுறை, தேர்தல் ஆணையத்தின் அருவெறுப்பான தந்திரம் ஆகியவற்றை நேருக்கு நேர் எதிர்த்து களமாடி பெற்ற வாக்குகள் தான் இவை.

வாக்குரிமை ஜனநாயகத்தைக் பாதுகாக்க விழிப்புணர்வு கொண்டு வாக்களித்த மதிப்பிற்குரிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல், ஜனநாயகத்தின் மீதே, மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது. மிகப்பெரிய அளவில் வாக்குசாவடிகள் கைப்பற்றப்பட்ட தேர்தல் இது. தேர்தல் ஆணையம் 181வது வாக்குச்சாவடியில் மறுதேர்தலை நடத்தியதன் மூலம் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதை அது ஏற்றுக் கொண்டுள்ளது. இவை அனைத்தையும் மீறி தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.

வாக்குரிமை ஜனநாயகத்தை பாதுகாப்பது ஜனநாயகத்தின் அடிப்படையான கடமையாகும். களம் இறங்கி போரடிய இடதுசாரி கட்சிகளின் களப்போராளிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழகம் முழு ஆதரவை வழங்கியிருந்தது. தமிழர் தேசிய முன்னணி ஆதரவை வழங்கியதுடன் அதன் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் நேரில் வந்து பிரச்சாரம் செய்தார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தம்பி சீமான் ஆதரவை வழங்கியிருந்தார் இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

நகர்புறங்களில் கார்ப்பரேட் உலகமயம், அடித்தள மக்களின் வாழ்க்கையை பெரும் அளவில் பாதித்து வருகிறது. சென்னையில் ஆர்.கே. நகர் மிகவும் புறக்கணிக்கப்பட்ட தொகுதி. கொடுங்கையூர் குப்பை மேடு, ஐந்து ரயில்வே கேட்டுகள் மற்றும் பல ஆண்டுகளாக கட்டி முடிக்க படாத பாலம் ஆகியவற்றால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பயணிகள் மணிக்கணக்கில் நெரிசலில் சிக்கி சாலைகளில் காத்துக்கிடக்கிறார்கள்.

சாராயக் கடைகள் குடும்பங்களை சீரழித்து வருகிறது. சாக்கடை கலந்த குடிநீர் தான் மக்களுக்கு கிடைக்கிறது. இந்த மக்கள் பிரச்சனையை தான் தேர்தலில் முன்வைத்தோம். இதற்காக தொடர்ந்து குரல்கொடுப்போம் போராடுவோம்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதுடன், வாக்குரிமை ஜனநாயகத்தை விழிப்போடு இருந்து பாதுகாக்க இளைய தலைமுறையினரும், ஜனநாயகசக்திகளும், பொதுமக்களும் தொடர்ந்து எங்களுக்கு பேராதரவு தரவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மத்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்திட வலியுறுத்துகிறேன்.

ஜனநாயகத்தை பாதுகாத்திட தேர்தல் முறைகேடுகளை தடுத்து நிறுத்திட ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்று சி.மகேந்திரன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x