Published : 13 Feb 2017 06:12 PM
Last Updated : 13 Feb 2017 06:12 PM

ஆயிரம் பன்னீர்செல்வங்களை பார்த்துவிட்டோம்: சசிகலாவின் 10 அம்ச பேச்சு

'ஆயிரம் பன்னீர்செல்வங்களை பார்த்துவிட்டோம்; எங்களின் அமைதிப் போராட்டம் வெற்றி பெறும், அதிமுக ஆட்சியை அமைக்கும்' என அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் திங்கட்கிழமை தன்னை சந்தித்து ஆதரவு தெரிவித்த தொண்டர்களிடையே சசிகலா பேசியதன் 10 அம்சங்கள்:

"* ஓ.பன்னீர்செல்வம் என்ற சாதாரண மனிதரை பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. இப்போது நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார். இந்த இயக்கத்தை பிரித்தாள நினைக்கிறார். கட்சிக்கு அவர் விசுவாசமாக இருந்தவர் அல்ல என்பதைக் காட்டிவிட்டார்.

* ஜெயலலிதா இறந்தவுடன் எல்லோரையும் அழைத்து, 'நமக்கு நேரம் இல்லை. உடனடியாக இன்றிரவே பதவி ஏற்க வேண்டும். அதற்கு ஆளுநர் சந்திப்புக்கு அனுமதி கேளுங்கள். இப்போதுள்ள அமைச்சர்களே அப்படியே பதவியேற்க வேண்டும். தற்சமயம் பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்கட்டும்' என்று சொன்னேன். அப்போது, பன்னீர்செல்வம் உட்பட 5 அமைச்சர்கள், 'உங்களைத்தான் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்' என தெரிவித்தனர். 'எனக்கு எல்லாவற்றையும்விட, அக்காதான் (ஜெயலலிதா) முக்கியம். அவரது உடல் அருகில் நிற்க வேண்டும். எனக்கு இந்த பதவி மேல் ஆசை கிடையாது. எனவே, நீங்கள் உடனடியாக பதவி ஏற்க வேண்டும்' என கூறி, அதற்கான ஏற்பாடுகளை நானே செய்தேன். அப்போது இருந்த துக்கத்தில், எனக்கு முதல்வர் பதவி பெரியதாக தெரியவில்லை.

* ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்தேன். எந்தப் பணியை எடுத்தாலும் திறம்பட, சிறப்பாக செயல்பட வேண்டும் என எண்ணுபவர் ஜெயலலிதா. 9 முறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 15 லட்சம் தொண்டர்களாக இருந்த நம் கட்சி உறுப்பினர்களை 1.5 கோடி உறுப்பினர்களாக உயர்த்தினார்.

* எம்ஜிஆர் இறந்தபோது, அவரது உடலுக்கு மலர்வளையம் வைக்கக்கூட ஜெயலலிதா அனுமதிக்கப்படவில்லை. அவருக்காக ஒருவரும் குரல் கொடுக்கவில்லை. எம்ஜிஆர் உடல் எடுத்துச் செல்லப்பட்ட ராணுவ வண்டியில் இருந்தவர்கள் ஜெயலலிதாவை கீழே தள்ளிவிட்டனர். நான் கீழே இருந்து அவரை தாங்கிப் பிடித்தேன். 'அமைச்சர்கள் ஜெயலலிதாவைத் தாக்க திட்டமிட்டுள்ளனர். எனவே, அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்' என அன்றைக்கு போலீஸ் கமிஷனராக இருந்த ஸ்ரீபால் தெரிவித்தார். பிறகு, நாங்கள் வீட்டுக்கு வந்தோம். வீட்டுக்குள் வந்ததும் ஜெயலலிதா மயங்கி விழுந்தார். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து துடைத்துவிட்டேன். பின்னர் கண்விழித்த ஜெயலலிதா, 'எல்லோர் முன்பும் என்னை அவமானப்படுத்தி விட்டனர். இனிமேல் எனக்கு கட்சியே வேண்டாம்' என்றார். நான்தான் அவரிடம் கெஞ்சிக்கூத்தாடி கட்சியில் தொடர வேண்டும் என்றேன்.

* கட்சியில் என்னை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. முக்கிய பதவிகளிலும் இருக்கவில்லை. எனது வேலை என்னவென்றால் கட்சிக்காரர்கள் கொண்டுவரும் முக்கிய மனுக்களை ஜெயலலிதாவிடம் கொடுத்து முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை விடுவேன். கூட்டணி பேச்சுவார்த்தையில் நானும் அவருடன் கலந்துகொள்வேன்.

* நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்தபோதே முதல்வராக பதவி ஏற்றிருக்க முடியும். ஆனால், அப்போது எனக்கு அந்த ஆசை இல்லை. என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா கொண்டுவந்த இந்த அரசு நீடிக்க வேண்டும். அதற்குத்தான் பன்னீர்செல்வத்தை நியமித்தோம்.

* சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பார்த்தபோது, எனக்கு மனசுக்கு சரியாக இல்லை. தலைவரை விரட்டியடித்த கட்சியினரோடு சட்டப்பேரவையில் இப்படி சிரித்துப் பேசியிருக்கிறாரே, இது எப்படி சரியாக வரும் என உணர்ந்தேன். இதே கருத்தைத்தான் மற்ற அமைச்சர்களும் என்னிடம் கூறினர்.

* இந்த அரசாங்கம் இருக்க வேண்டும். அதற்காக என் உயிரையும் விடத் தயார். நிறைய போராட்டங்களை சந்தித்து வந்திருக்கிறோம். போராட்டம் என்பது எங்களுக்கு கையில் உள்ள தூசுதான்.

* ஆயிரம் பன்னீர்செல்வங்களை பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். நாங்கள் ஆட்சி அமைப்போம். அதற்கு என்னால் எத்தனை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வேன்.

* ஜெயலலிதா நிழலாக இருந்து போராட்டத்தில் நானும் ஒருத்தியாக இருந்தேன். பிரிந்த கட்சியை ஒன்றாக இணைந்து இரட்டை இலையை மீட்டோம். அதிமுக என்றால் ஜெயலலிதா என்பதை நிருபித்தோம். தொண்டர்கள் துணை இருக்கும்போது, ஜெயலலிதா ஆசி இருக்கும்போது அதிமுகவை ஆட்சியை அமரவைத்து அழகு பார்ப்போம். நமது அமைதிப் போராட்டம் வெற்றி பெறும். நல்ல செய்திகாக காத்திருக்கிறேன். நிச்சயம் தர்மம் வெல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு சசிகலா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x