Published : 15 Feb 2014 01:49 PM
Last Updated : 15 Feb 2014 01:49 PM

ஆம் ஆத்மியின் இரண்டாவது அத்தியாயம் இனி ஆரம்பம்!

ஆவேசத்துடனும், ஆர்ப்பரிப்புக்கு மத்தியிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில், அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், அதுதான் ஆச்சர்யமான விஷயமாக இருந்திருக்கும்.

ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சி அமைத்தபோது அக்கட்சிக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. அது, ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது, இல்லாவிட்டால் ஊழலை எதிர்த்துப் போராடியததற்காக பதவியைத் துறந்தோம் என்ற தியாகி அந்தஸ்தைப் பெறுவது என்பது மட்டுமே. ஆம் ஆத்மியின் இந்தத் திரைக்கதை மிகவும் நேர்த்தியாகவே உருப்பெற்றுள்ளது என்றே கூறவேண்டும். '

ஊழல் தடுப்புச் சட்டம்' - இதுதான் அரசியல் புதுவரவாக இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் சக்தியை வழங்கியிருக்கிறது. ஆனால், ஊழலுக்கு எதிரான ஜன்லோக்பால் சட்ட மசோதா சர்ச்சையில் சிக்கி டெல்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படாமல் போவதற்கு கேஜ்ரிவாலின் கடந்த கால நிகழ்வுகளின் தாக்கமும் காரணம்.

2011-12ல், அண்ணா ஹசாரே தொடங்கிய பேரியக்கத்திற்கு மையப்புள்ளியாக இருந்தது ஜன்லோக்பால் மசோதா. அண்ணாவின், ஊழலுக்கு எதிரான பேரியக்கத்திற்கு பேராதரவு தர மக்கள் குவிந்தபோது, அவர்களுக்கு ஜன்லோக்பால் மசோதாவில் உள்ள ஒரு சில பிரிவுகள் எவ்வளவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பதும், அது எப்படி உருவாக்கியவர்களுக்கு எதிராகவே உருபெறும் என்பதும் புரிந்திருக்கவில்லை என வல்லுநர்கள் விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.

அத்தருணத்தில், கேஜ்ரிவால் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "மக்களுக்கு ஜன்லோக்பால் மசோதாவின் விபரங்கள் முழுமையாகப் புரியவில்லை. ஊழலுக்கு எதிராக கிடைத்த ஓர் அரிய மருந்தாக மட்டுமே அவர்கள் ஜன்லோக்பால் மசோதாவைப் பார்க்கிறார்கள்" எனக் கூறியிருந்தார்.

அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய அரசின் அதிகாரத்தை ஏன் எதிர்த்தார்? ஜன்லோக்பால் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு அரசியல் சாசன ரீதியாக உள்ள சிக்கல்களை டெல்லி துணைநிலை ஆளுநர் தெரிவித்தபோது அதையும் ஏன் எதிர்த்தார்? இந்த இரண்டு நிகழ்வுகள்தான், ஜன்லோக்பால் மசோதாவுக்கு அளவு கடந்த உருவகம் கிடைக்கப்பெற்றதற்கு காரணம்.

இந்த விஷயத்தில் இரு வேறு கருத்துகள் எழுவது நிச்சயம். மத்தியில் காங்கிரஸ் கட்சியிடம் அதிகாரம் உள்ளது, அதனால் திருத்தங்களுடன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, டெல்லி அரசு முன்வைக்கும் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் முட்டுக்கட்டை போடும். மேலும், நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கான முழு புகழும், பெருமையும் ராகுல் காந்திக்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளின் அடிப்படையில் ஜன்லோக்பால் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்துதல் என்ற முதல் கட்டத்திலேயே தடங்கலுக்கு உள்ளாகிறது. உள்துறை அமைச்சகம், துணைநிலை ஆளுநரிடம் முன் அனுமதி பெறுமாறு தெரிவிக்கிறது. ஆனால், கேஜ்ரிவால் கொதித்தெழுகிறார்.

துணைநிலை ஆளுநரிடன் வாதம் எழுகிறது. ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்காவிட்டால், ஆம் ஆத்மி அரசு நீடிப்பதற்கான அர்த்தம் இல்லை எனக் கூறுகிறார் கேஜ்ரிவால். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டு சேர்ந்து ஜன்லோக்பால் மசோதாவை எதிர்க்க, ஆம் ஆத்மியின் முடிவு நிர்ணயிக்கப்படுகிறது.

ஜன்லோக்பால் மசோதாவின் போக்கு எந்த திசையில் இருந்திருந்தாலும் கேஜ்ரிவால் நிச்சயமாக அதில் வெற்றி ஆதாயமே தேடியிருப்பார். முன்னதாக, டெல்லி சட்டப்பேரவை வெளியில் குழுமியிருந்த ஆம் ஆத்மி ஆதரவாளர்கள், கேஜ்ரிவால் சட்டப்பேரவையில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துவிட்டது போல் ஆரவாரம் செய்தனர்.

ஆனால், சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் வெளியேறிய கேஜ்ரிவால் கூறிய கடைசி வார்த்தைகள், எதிர்பார்த்தது போலவே காங்கிரஸையும் பாஜகவையும் குற்றம்சாட்டுவதாகவே இருந்தது. ஊழல் திரையைக் கிழிப்பதை காங்கிரஸ், பாஜக-வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனக் கூறிச் சென்றார்.

நாடகத்தின் உச்சம்:

ஆட்சி அரியணையில் ஆம் ஆத்மி கட்சியின் குறுகிய காலம், சர்ச்சைகளுக்கு மலிவு இல்லாமல் இருந்தது. 2 மாதங்களில் ஓராண்டுக்கான சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேஜ்ரிவாலும் அவரது சகாக்களும் ஏதாவது செய்து அடுத்தவர்கள் கவனத்தை ஈர்க்கும் கலையில் மிகை மிஞ்சிவிட்டனர். இதையே விவாதப்பொருளாகவும் அவர்களில் சிலர் மாற்றுவர். ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் யாரும் செல்லத் துணியாத நிலைக்குச் சென்றுவிட்டது ஆம் அத்மி என்பார்கள். இயற்கை எரிவாயு விவகாரத்தில் அம்பானிக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையும், அது குறித்த மற்ற கட்சிகளின் காதுகேளா மெளனமுமே இதற்கு வலுவான ஒற்றைச் சான்று.

ஆம் ஆத்மியின் இரண்டாம் அத்தியாயத்தில், நாடு முழுவதும் ஒரு செய்தி கொண்டு செல்லப்படும். அது, 'நீதி விசாரணையிலும், நேர்மையிலும் நாங்கள் மாற்று குறையாத தங்கம்' என்பதாகவே இருக்கும்.

தமிழில் - பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x