Last Updated : 10 Apr, 2015 03:48 PM

 

Published : 10 Apr 2015 03:48 PM
Last Updated : 10 Apr 2015 03:48 PM

துப்பாக்கிசூட்டில் இறந்தவர் உடலை மறுபிரேதப் பரிசோதனை கோரும் வழக்கு: ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் -மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செம்மரம் கடத்தியதாக சுட்டுக் கொல்லப்பட்டவரின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்யக் கோரும் வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 20 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் திருவண்ணா மலை மாவட்டம், வேட்ட கிரிபாளையத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனி யம்மாள், தனது கணவரின் மரணத்தில் பெரும் சந்தேகம் இருப்பதால், அவரது உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் இவ் வழக்கை விசாரித்தார். முதல் தகவல் அறிக்கை இல்லாமல் மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிபதி, சசிகுமாரின் சடலம் உள்பட 6 பேரின் சடலங்களை திருவண்ணாமலை அரசு தலைமை மருத்துவமனையில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, சசிகுமாரின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொண் டார்.

அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி வாதிடுகையில், மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லாதபோது, அரசு எப்படி மறுபிரேதப் பரிசோதனை செய்ய ஆணையிட முடியும்.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், அதனை செய்ய அரசு தயாராக இருக்கிறது என்றார். அத்துடன் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் அந்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் சமர்ப் பித்தார்.

இதையடுத்து, நீதிபதி சத்திய நாராயணன் பிறப்பித்த உத்தரவில், ‘‘சம்பவம் சென்னை உயர் நீதிமன்ற வரம்புக்கு அப்பால் நடந்துள்ளதால், மனுதாரர் ஆந்திர உயர் நீதி மன்றத்தை அணுக வேண்டும். இப்பிரச்சினை தொடர்பாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

எனவே, மனுதாரர் அங்கு சென்று தேவையான உத்தரவைப் பெறுவதற்கு வசதியாக இவ் வழக்கு விசாரணை வரும் 17-ம் தேதிக்கு தள்ளிவைக் கப்படுகிறது.

மறுஉத்தரவு வரும்வரை மனுதாரரின் கணவர் சசி குமார் சடலம் உள்பட 6 பேரின் சடலங்களை திரு வண்ணாமலை அரசு தலைமை மருத்துவமனையில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x