Published : 25 Aug 2014 01:02 PM
Last Updated : 25 Aug 2014 01:02 PM

ஆந்திரம், தெலங்கானா வரிச்சலுகையால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அளிக்கும் வரிச் சலுகைகளால் தமிழகம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது.

இந்தப் பிரச்சினையை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும் என்று பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அண்மையில் பிரிக்கப்பட்ட ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யும்போது சில பொருளாதாரச் சலுகைகள் அளிப்பதற்காக, 14-வது நிதிக்குழுவுக்கு மத்திய அரசு பரிந்துரைகள் செய்திருப்பதாக அறிகிறேன். பக்கத்து மாநிலங்களான ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு அளிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது.

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-ல், மேற்கண்ட இரு மாநிலங்களுக்கும் தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக வரிச் சலுகைகளை தரலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அம்மாநிலங்களுக்கு எவ்விதமான வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பி னும், பிரதேச அடிப்படையிலான வரிச் சலுகைகளை அளிக்கலாம் என சில தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால், பக்கத்து மாநில முதல்வர் என்ற அடிப்படையில் சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தியாவில் வரிச் சீர்திருத்தங்கள், ஒரேசீராக இருக்கும் வகையிலும் எளிதாக இருக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகைகளை குறைக்க கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு சீரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே 2003-ல் இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்ட பிரதேச ரீதியிலான சலுகைகள் பெரும் தவறாகும். அதுபோன்ற விதிவிலக்குகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2005-ல் அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அப்போது நடந்த தேசியக் கவுன்சில் கூட்டத்தில், பெரும்பாலான முதல்வர்கள் எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதுபோன்ற சலுகைகளை ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு அளித்தால் அண்டை மாநிலங்களில் இயங்கிவரும் ஆலைகள் இடம்பெயரும் அபாயம் உள்ளது. கடந்த 2000-ம் ஆண்டில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அப்படிப்பட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை.

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-ல், அவர்களுக்கு ஏற்கெனவே பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சினையை மிகுந்த கவனத்துடன் அணுகவேண்டும். பக்கத்து மாநிலங்கள், பாதிக்கப் படாத வகையில் சமதளத்தை ஏற்ப டுத்தித் தரவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு பிராந்திய ரீதியி லான சலுகைகளை அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்பிரச்சினை யில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக தமிழகம் போன்ற அண்டை மாநிலங்களின் நலனை கருத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x