Last Updated : 10 Nov, 2016 10:26 AM

 

Published : 10 Nov 2016 10:26 AM
Last Updated : 10 Nov 2016 10:26 AM

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி அளிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதி: இதுவரை 350 பேர் பயனடைந்துள்ளனர்

ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தொடங்கி கல்வி, வேலைவாய்ப்பு வரை அனைத்தையும் தன் மனைவியின் உதவியுடன் செய்துவருகிறார் அரசு பள்ளி ஆசிரியர். இதுவரை 350 குழந்தைகள் அவரால் பயன்பெற்றிருக்கிறார்கள்.

“அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தங்களிடம் படிக்கும் குழந்தைகள் மேல் அக்கறை இல்லை. தங்கள் ஊதியம், சலுகை போன்ற சொந்தப் பிரச்சினைகளுக்காக மட்டுமே போராடுவார்கள்” என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆனால் பெற்றோரைவிட குழந்தைகள் மேல் அதிக அக்கறை கொண்ட ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார்(51).

வாடிப்பட்டி அருகில் உள்ள போடிநாயக்கன்பட்டி அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியராக உள்ள இவர், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து தன் பராமரிப்பிலேயே வளர்த்து வருகிறார். மாணவ, மாணவிகள் தங்குவதற்காக தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் விடுதி அமைத்துள்ளார். தற்போது 10 பெண் குழந்தைகள் உட்பட 45 பேர் இவரது பராமரிப் பில் உள்ளனர். விடுதி மாணவர் களைப் போலின்றி, தன் சொந்தக் குழந்தைகளைப்போல அவர் களைப் பாவித்து வருகிறார் ஆசிரியர்.

இந்த எண்ணம் வந்தது குறித்து ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: 1990-ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆதரவற்ற 4 குழந்தைகளின் கல்விக்காக சிலர் என்னிடம் உதவி கேட்டு வந்தனர். அந்தக் குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்ல, அன்பும், அரவணைப்பும் தேவைப்படுமே என்ற கேள்வி எழுந்தது. அப் போதுதான் நாமே குழந்தைகளை வளர்க்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அன்றிலிருந்து ஆதர வற்ற குழந்தைகளை வளர்க்க ஆரம்பித்தேன். இதில் பெற்ற தாயால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகளும் அடக்கம்.

படிக்க வைத்துவிட்டு, அப்படியே விட்டு விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே, மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்ததும், ஐடிஐயில் சேர்த்து அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறேன். உயர்கல்வியில் ஆர்வமுள்ள சில மாணவர்களை மட்டும் கல்லூரியில் சேர்த்துவிடுவேன். அந்த மாணவர்கள் படிக்க வந்த சூழலை விளக்கியதும், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களே அவர் களுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்கின்றனர். பெண் குழந்தைகளை 5-ம் வகுப்பு வரை மட்டுமே நான் வளர்க்கிறேன். அதற்கு மேல் அரசு ஆதரவற்றோர் விடுதிகளில் சேர்த்துவிடுவேன்.

தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் 300 பேரின் கல்விக்கு உதவியிருக்கிறேன். படித்து வெளியேறியவர்கள் போக, தற்போது 45 குழந்தைகள் விடுதியில் தங்கியிருக்கிறார்கள். மாதம் 30 ஆயிரம் ரூபாயை மாணவர் களுக்காக நான் ஒதுக்கிவிடுகிறேன். எனினும், மனித நேயமுள்ள நண்பர்களின் உதவி இல்லாமல் இந்தப் பணியை என்னால் தொடர்ந்திருக்க முடியாது.

அதைவிட முக்கியமான விஷயம் என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு. என் மனைவி கேத்ரின் லீமா உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். என் தாயார் சரஸ்வதி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். மாணவர்களைப் பராமரிப்பதிலும், படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதிலும் அவர்கள் உதவுகின்றனர். எழுத்து, ஓவியம், ஆங்கில வாசிப்பு என இங்கு உள்ள மாணவர்களைக் கல்வியில் சிறந்தவர்களாக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமாரின் சேவையைப் பாராட்டி, மத்திய உள்துறை அமைச்சக விருதும், 2010-ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் வழங்கப்பட்ட சன்மானத் தொகையையும் இந்த மாணவர் களுக்காகவே செலவழித்திருக் கிறார். விடுதி வளாகத்தில் குழந்தைகளைக்கொண்டே ஒரு பூங்கா அமைத்திருக்கின்றனர். அங்கு தென்னை, வாழை மரங்களுடன் மூலிகை மற்றும் பூச்செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x