Published : 10 Aug 2015 03:14 PM
Last Updated : 10 Aug 2015 03:14 PM

ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவதே முதல் பணி: திமுக போராட்டத்தில் ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், முதல் பணியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அக்கட்சி போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திமுக சார்பில் மதுவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அதில் ஸ்டாலின் பேசும்போது, ''கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி தலைவர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் வந்தால் அல்ல வரத்தான் போகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆக அப்படி ஆட்சிக்கு வருகிறபோது, மது விலக்கை அதை அமல்படுத்துகிற சூழ்நிலையை நாங்கள் தீவிரப்படுத்துவோம் என்று ஒரு செய்தியை வெளியிட்டார்.

மதுவிலக்கு அறிவிப்பை தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக அதிர்ச்சியடைந்துவிட்டது. இப்படி ஒரு அறிவிப்பை கருணாநிதி அறிவித்து விட்டாரே என்று அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அதிலே ஒரு சிலர் அதிர்ச்சியிலே உறைந்து போய்விட்டார்கள். அதுவும் தெரியும் நமக்கு.

அது மட்டுமல்ல நாங்கள் 35 ஆண்டுகாலமாக இதற்காக போராடிக் கொண்டிருக்கிறோமே என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைகள் எல்லாம் இன்றைக்கு நாட்டிலே வந்திருக்கிறது. இதை வைத்துத்தானே நாங்கள் அரசியல் நடத்துகிறோம். இப்படி ஒரு அறிவிப்பை கருணாநிதி வெளியிட்டுவிட்டு எங்களையெல்லாம் நிராகரமாக்கிவிட்டார்களே என்று வேதனையிலே வெந்து குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவர் கருணாநிதி 31.08.1973-லே முதன் முதலில் கள்ளுக்கடைகளை மூடினார். அதற்குப் பிறகு செப்டம்பர் 1974-லே சாராயக்கடைகளை மூடினார். ஆக மொத்தததில் திமுக ஆட்சியிலே மது விலக்கு கொள்கை அமுலுக்கு வந்தது.

ஆனால், அதற்குப் பிறகு தமிழ்நாட்டிலே மறைந்த எம்ஜிஆர் தலைமையிலே அதிமுகவின் ஆட்சி. 1981-ஆம் ஆண்டு மே மாதம் கள்ளுக்கடை, சாராயக்கடைகள் திறக்கப்பட்டன.

அப்போது தனியார் நிறுவனங்களும், கூட்டு முயற்சியில் இயங்கக்கூடிய நிறுவனங்களும், ஐ.எம். எப்.எம். என்று சொல்லக்கூடிய அயல்நாட்டு மதுபானங்களை தயாரிக்கலாம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தனர். ஆக 82, 84லே ஆட்சியிலிருந்த அதிமுகதான், அதற்கான உத்தரவை வழங்கியிருக்கிறது. அதுபோல் இன்றைக்கு இருக்ககூடிய டாஸ்மாக், நிறுவனத்தை ஆரம்பித்த ஆட்சி எது? அதுவும் அதிமுக ஆட்சிதான்.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது தான். ஏன் இன்று தெருவுக்கு தெரு பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்து மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் இருக்கே இது எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா?

29.11.2003 இப்போது முதலமைச்சராக பொறுப்பிலிருக்ககூடிய ஜெயலலிதா ஆட்சியிலே தான் இது திறக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.

இதை விட கொடுமை என்ன தெரியுமா? அரசாங்கமே சாராயத்தை விற்ககூடிய நிலையை ஏற்படுத்தி அரசாங்கத்திலே பணிபுரிந்து கொண்டிருக்ககூடிய அதிகாரிகளையெல்லாம் சாராயக்கடை திறக்க கடைகளுக்கு நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று டாஸ்மாக் கடைகளை தேர்ந்தெடுக்ககூடிய அந்த வேலையை அதிகாரிகளை விட்டுச் செய்யச் சொன்ன ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முதலமைச்சராக இருக்கக்கூடிய ஜெயலலிதா தலைமையிலிருக்ககூடிய அதிமுக ஆட்சி.

7 ஏயிரம் டாஸ்மாக் கடைகள். 4500-க்கும் மேற்பட்ட பார்கள், திறந்துவிட்ட ஆட்சி, ஜெயலலிதா தலைமையிலிருக்ககூடிய அதிமுக ஆட்சி.

ஆனால், திமுக ஆட்சியில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இப்படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய இடங்களில் அருகிலிருக்ககூடிய அந்த கடைகளை ஏறக்குறைய 350 கடைகளை தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அகற்றினார்.

காந்தியவாதி சசிபெருமாள் இரங்கல் கூட்டத்தில் தீர்மானம் போட்டோமே என்ன காரணம். தலைவர் கருணாநிதி மதுக்கடைகளை மூடுவோம். மது விலக்கை அமுல்படுத்துவோம் என்று சொன்னதும், அடுத்த இரண்டாவது நாள், சசி பெருமாள் கோபால புரத்திற்கு வந்தாரே தலைவர் கருணாநிதியை வந்து சந்தித்தாரே. நான் கேட்கிறேன் எத்தனையோ பேர் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்,.35 வருஷமா போராடுகிறோம். நாங்கள் தான் குத்தகை எடுத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போய் என்றைக்காவது சசிபெருமாளைப் பார்த்ததுண்டா? சசிபெருமாள் கருணாநிதியை வந்து பார்த்ததுக்கு என்ன காரணம் என்று கேட்டீர்களென்றால் கருணாநிதி சொன்னால் செய்வார். செய்வதைத் தான் சொல்வார் என்ற அந்த நம்பிக்கையோடு வந்தார்.

சசிபெருமாள் சாவிலே மர்மம் இருக்கிறது. ஏறக்குறைய விசாரணை நடத்திட வேண்டும். உயர் நீதிமன்றத்தினுடைய நீதிபதி தலைமையிலே ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டுமென்று ஏற்கெனவே நம்முடைய கருணாநிதி மிகத் தெளிவாக குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

ஒரு கொள்கைக்காக சசிபெருமாள் போராடுகிறபோது இறந்திருக்கிறார். அதற்காக ஒரு வரியாவது, தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் தன்னுடைய இரங்கலை தெரிவித்து ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறாரா, இதுவே வெட்கம், வேதனை வேறு என்ன வேண்டும். நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு சிலர் இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். மதுவிலக்கை அந்த கொள்கையை திமுகவால் நிறைவேற்றிட முடியாது. கருணாநிதி சொல்வார் செய்ய மாட்டார். எனவே நம்பாதீர்கள் என்று இந்த மதுவிலக்கை வைத்து அரசியல் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்ககூடிய சில தலைவர்களெல்லாம் இன்றைக்கு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாது என்ற வார்த்தையே திமுகவின் வரலாற்றிலே கிடையாது. கருணாநிதியின் வரலாற்றிலேயும் கிடையாது. திமுகவைப் பொறுத்தவரையிலே, தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரையிலே சொன்னதைதான் செய்வார். செய்வதைதான் சொல்வார் அது நடக்கப்போகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணியாக, முதல் நடவடிக்கையாக தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்'' என்று ஸ்டாலின் பேசினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மகளிர் அணி செயலாளாரும், எம்.பியுமான கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் ஒரு பகுதியாக சசிபெருமாள் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈரொடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு ரயில் நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமயில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். மதுரையில், திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் முத்துராமலிங்கம் பங்கேற்றார்.

இதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மதுவிலக்கு போராட்டங்கள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x