Published : 12 Oct 2015 09:48 AM
Last Updated : 12 Oct 2015 09:48 AM

ஆச்சியுடன் ஒப்பிட உலகில் ஒருவர் கூட இல்லை!- மனோரமா குறித்து நடிகர் சத்யராஜ் உருக்கம்

நான் 5-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மறக்க முடியாத அனுபவம். முதல் முதலாக ஒரு சினிமா படப்பிடிப்பைப் பார்க்கிறேன். அது சின்னப்பா தேவர் தயாரித்து இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ படம். அன்றைய கோவை மாவட்டத்தில் ஈரோடு அருகே இருந்த ‘பழையக்கோட்டை’ என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. அந்த ஊரின் நிலக்கிழார் பழையக்கோட்டை நல்ல சேனாபதி மன்றாடியார் எனது மாமா. அவரது வீட்டை அரண்மனை என்றுதான் சொல்லுவார்கள். முத்துராமன், அசோகன், சந்திரகாந்தா, நாகேஷ், மனோரமா என நடிகர்கள் அனைவரும் மாமாவின் வீட்டில் தங்கியிருந்து நடித்துக் கொண்டிருந்தார்கள். நடிகர்களுக்காக அரண்மனையிலேயே தடபுடலான சமையல் நடக்கும்.

அங்கேதான் ஆச்சி மனோரமா அவர் களை முதல்முறையாகப் பார்க்கிறேன். “அரண்மனைக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் உள்ள மீன்கள் தனி ருசியாக இருக்குமாமே?” என்று படப்பிடிப்பு இடைவேளையில் பேசிக்கொண்டிருந்தார் ஆச்சி. உடனே ஆற்றுக்கு ஓடிப்போய் மீன்களைப் பிடித்துவந்து மனோரமா அவர்களிடம் கொடுத்தேன். அன்போடு அதை வாங்கி சமைக்கக் கொடுத்தனுப்புகிறார். எனக்கு உள்ளம் கொள்ளாத மகிழ்ச்சி. நாகேஷுடன் இணைந்து அவர் நடிக்கிற எல்லாக் காட்சிகளையும் பார்த்து வியந்துபோகிறேன். நாகேஷுக்கே சவால்விடும் அவரது துறுதுறுப்பான நடிப்பு என்னைப் பத்து வயதில் ஈர்த்தது என்று சொல்லவேண்டும்.

வாழ்த்திய ஆச்சி

பட்டப்படிப்பை முடித்துவிட்டு நடிகனா கிவிடுவது என்று சென்னை வந்தபோது சிவகுமார் அண்ணனிடம் சென்றேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பு அனுபவம் வேண்டும் என்று கூறிய அவர், மனோரமா அவர்களின் நாடகக் குழுவில் சேர்த்துவிடுவதாகக் கூறி என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். எதிர்பாராதவிதமாக மீண்டும் கோவைக்கு திரும்பிவிட்டேன். மனோரமா நாடகக் குழுவில் இணைந்துகொள்ளும் வாய்ப்பு அமையாமல் போய், பின்னர் கோமல் சுவாமிநாதன் குழுவில் சேர்ந்து நாடகங் களில் நடித்துக் கொண்டிருந்தேன்.

சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கியபோது இரண்டு கறுப்பு வெள்ளைப் படங்களிலும் நான் நடித்திருக்கிறேன். அதில் எனது 2-வது படம் ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’. சிவகுமார், சுமித்ரா நடித்த அந்தப் படத்தில் மனோரமா கதாநாயகியின் அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டே தயாரிப்பு நிர்வாகியாகவும் வேலை செய்தேன். அந்தப் படத்துக்கான சம்பளக் காசோலையை கொடுக்க மனோரமா அவர்களைச் சந்தித்தேன்.

அப்போது பத்து வயதுச் சிறுவனாக பழையக்கோட்டை கிராமத்தில் ஆற்று மீன் பிடித்துக் கொடுத்தது நான்தான் என்று சொன்னதும் ஆச்சரியப்பட்டுப் போனார். “எவ்வளவு வளர்ந்துட்டீங்க! நல்லா வருவீங்க அப்பு” என்று உளமார வாழ்த்தினார்.

அன்று தொடங்கிய என் மீதான அவரது அன்பும் பாசமும் கடுகளவும் கடந்த மாதம் அவரைச் சந்தித்த வரை குறையவில்லை. என்னிடம் என்றில்லை எல்லோருக்குமே அவர் ஒரு பாசமான ஆச்சிதான். அதனால்தான் அவரது பெயரு டன் பெண்ணரசி என்ற பொருள்கொண்ட ஆச்சி என்ற வார்த்தை பிணைந்துவிட்டது.

அபூர்வ கலைஞர்

நான் வில்லனாக நடிக்கத் தொடங்கி, நாயகனாக உயர்ந்து, பிறகு குணச்சித்திர நடிகன் என்று மாறி மாறிப் பயணித்த கடந்த 35 ஆண்டுகளில் அவருடன் நூற்றுக்கும் அதிகமான படங்களில் இணைந்து நடித்திருக்கிறேன். அவரிடம் என்ன கதாபாத்திரத்தை ஒப்படைத்தாலும் அதில் மனோரமா என்ற நட்சத்திரத்தின் முகத்தைக் காட்டவே மாட்டார். அவர் வருகிற முதல் காட்சியிலேயே தன்னைக் கதாப்பாத்திரமாக நம்பவைத்துவிடும் ஆற்றல் கொண்ட அபூர்வமான கலைஞர்.

கலைவாணர் - மதுரம் ஜோடிக்குப் பிறகு தமிழர்களை ஈர்த்த கண்ணியமான ஜோடி என்றால் என்றால் அது நாகேஷும் ஆச்சி மனோரமாவும் மட்டும்தான். 60-களில் ஆரம்பித்து 70-கள் வரையிலும் நாகேஷ் அவர்களுடன் ஆச்சி கொடுத்த வலுவான நடிப்பு, நாகேஷ் அவர்களுக்கே பல படங்களில் சவாலாக இருந்ததைத் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

அவருடன் ஒப்பிடுவதற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகில் ஒரு நடிகர் கூட இல்லை. முதல் காரணம் அவரளவுக்கு பெண் கலைஞர்களில் மொழியை அதன் முழு ஆற்றலுடன் தனது வசன உச்சரிப்பில் பயன்படுத்தியவர் அவர் மட்டுமே.

ராஜமன்னார்குடியில் பிறந்து செட்டிநாட்டில் வளர்ந்து தமிழகம் முழுவதும் நாடக மேடைகளில் ஜொலித்து திரையில் உயர்ந்த அவரைப்போல அசலாக வட்டாரப் பேச்சு வழக்குகளில் பேசக்கூடிய நடிகர் யாரும் கிடையாது. கொங்கு வட்டார வழக்கை கோவை, ஈரோட்டுக்காரர்களைவிட அச்சு அசலாகப் பேசக்கூடியவர் என்பதற்கு ‘சின்னக்கவுண்டர்’ படமே போதுமானது. அவரது பாடும் திறனுக்கும் மாற்று இல்லை என்று சொல்லிவிடலாம். அவரது திறமைக்கு தீனி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கான காட்சிகளின் எண்ணிக்கையை அன்று இயக்குநர்கள் அதிகப்படுத்தினார்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜியுடன் தோன்றும் காட்சிகளைக் கவனித்தீர்கள் என்றால் இருவருமே நடிகர் திலகம்தான் என்பதை உணர முடியும். கருப்பாயி, ஜில் ஜில் ரமாமணி, ரோசாராணி என்கிற முப்பரிமாணங்களை ஒரு நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய விதத்தில் ஓவர் ஆக்டிங் என்பதே இல்லாமல் இயல்பாக அந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்.

கத்திப் பேசி நடிக்கவேண்டிய தன்மைகொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுப்பதிலும் அவரளவுக்கு அதிக சக்தியைப் பிரயோகித்த கலைஞர் யாருமில்லை என்பதையும் மறுக்கமுடியாது.

நடிகனுக்கு ஒரு இடம்

ஆயிரம் படங்களைத் தாண்டி நடித்துக் கொண்டிருந்த ஆச்சியின் பேட்டி ஒரு வார இதழில் வெளியானது. அதில் நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த ஐந்து படங்களைச் சொல்ல முடியுமா என்று கேள்வி கேட்டிருந்தார்கள். அவர் குறிப்பிட்ட அந்த ஐந்து படங்களில் ஒன்று அவருடன் நான் இணைந்து நடித்திருந்த ‘நடிகன்’. அதைப் படித்தபோது எனக்கு விருது கிடைத்ததுபோல பெருமையாக இருந்தது. ‘நடிகன்’ படத்தில் இளமை யான தோற்றத்தில் போய் குஷ்புவை காதலிப்பேன்.

வயதான தோற்றத்தில் போய் ஆச்சியம்மாவை காதலிப்பேன். வயசான தோற்றத்தில் ஆச்சியம்மாவை காதலிப்பதை ரசிகர்கள் விரசமாக எடுத்துக் கொண்டு விடக்கூடாது. எனவே ஆச்சியம்மா அவர்கள் நடிக்கட்டும்; அவர் நடித்தால் விரசம் என்பது மறைந்துபோய் நகைச்சுவை மட்டுமே விஞ்சி நிற்கும் என்று நான் சொன்னபோது எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள். அந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆச்சியம்மா அவர்களின் அற்புதமான நடிப்புதான் முக்கிய காரணம்.

உங்களுக்கு ஜோடியாக நடித்தவர் களில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகி யார் என்று என்னிடமும் பலமுறை கேட்டிருக்கிறார்கள். அப்போ தெல்லாம் மிக நேர்மையாக ஆச்சி அவர்கள்தான் என்று ஒவ்வொரு முறையும் நான் சொல்லி வந்திருக்கிறேன். சமகால நடிகர்களில் ஆச்சியுடன் நடிக்கிற வாய்ப்பு பலருக்கு அமைந்திருக்கலாம். ஆனால் ஜோடியாக நடிக்கிற வாய்ப்பு எனக்கு மட்டும்தான் அமைந்தது. அதேபோல நான் ஈ.வே.ரா பெரியாராக நடித்த படத்தில் எனக்கு அம்மாவாகவும் நடித்து பெருமை சேர்த்துவிட்டார்.

சக கலைஞர்களை வாய்விட்டு மனமார பாராட்டுவதிலும் ஆச்சி தாயுள்ளம் கொண்டவர். ‘அழகேசன்’ என்ற படத்தில் 16 வயதினிலே சப்பாணி கமல் போல ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்தப் படம் ஓடவில்லை. ஆனால் அந்தப் படத்தில் எனது நடிப்பைப் பார்த்துவிட்டு, படப்பிடிப்புக்குத் தேடிவந்து கண்கலங்க என்னைப் பாராட்டிவிட்டுப்போனார்.

தொழில் பக்தி

தொழில் மீது அவருக்கு இருந்த பக்தியைப் போல நான் யாரிடமும் கண்டதில்லை. இயக்குநர்களுக்குத் தருகிற மரியாதை என்றாலும் படப்பிடிப்புக்கு அரைமணி நேரம் முன்னதாக வந்துவிடும் நேரம் தவறாமை என்றாலும் அவர் பொம்பள சிவாஜிதான். ‘மதுரை வீரன் எங்கசாமி’ என்ற படத்தில் வில்லனும் அவனது ஆட்களும் அவரை அடித்துத் தூக்கிவீசுகிற மாதிரியான காட்சி. அவரை அடித்துத் தூக்கி வீசும்போது அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தரையில் பள்ளம் தோண்டி அதில் பஞ்சு மெத்தைகளை வைத்து மேலே மண், சருகுகளைப் போட்டு மூடிவிட்டார்கள் சண்டைக் கலைஞர்கள்.

ஆனால் மனோரமா “மெத்தையை எடுத்துவிட்டு தரையில் என்னைத் தள்ளிவிடுங்கள். அடிபட்டால் படட்டும். நான் மெத்தையில் விழும்போது அது மக்களுக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது என்றால் இந்தக் காட்சியே வீணாகப்போய்விடும்” என்று சொல்லிச் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அந்தக் காட்சியில் அவருக்கு அடிபடவும் செய்தது. ஆனால் நம்பகத் தன்மைக்காக பொறுத்துக் கொண்டார்.

ஓர் அற்புதம்

ஒரு ஆக்‌ஷன் காட்சிக்காக இத்தனை மெனக்கெட்ட ஆச்சி நடுத்தர வயதைக் கடந்திருந்த நிலையில் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்தார். இந்திய சினிமாவில் அதுவொரு மிராக்கிள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு நகைச்சுவை குணச்சித்திரக் கலைஞராக முதுமையில் இருந்தவரை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து ஒரு சூப்பர் வுமன் படம் எடுத்து அது பாக்ஸ் ஆபீஸை கலக்கிய வரலாறு ஆச்சி அவர்களுக்கு மட்டுமே உரித்தானது. அண்ணா, பெரியார் பற்றி என்னிடம் வாய்ப்பு அமையும் போதெல்லாம் மனம்விட்டுப் பேசுவார்.

‘பெரியார்’ படத்தின் படப்பிடிப்பில் கடைசியாக அவருடன் நடித்துக் கொண் டிருந்தபோது தமிழ், தமிழர், தமிழ் தேசியம் பற்றி என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். “மானமும் அறிவும் துணிவும் தமிழர்க்கு வேண்டும் என்று பெரியார் சொன்னார். அதை தமிழர்கள் காதிலேயே வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லையே” என்று வருத்தத்துடன் கூறினார். நான் அவரது கையை இறுக்கப் பற்றிக் கொண்டேன். அவர் மறைந்தாலும் அவரது சாதனைகள் என்றும் நம்மோடு இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x