Published : 15 Jul 2014 11:16 AM
Last Updated : 15 Jul 2014 11:16 AM

அரிசி, பருப்பில் இருந்து அப்பளம், வடகம் வரை அத்தனையும் இயற்கை வேளாண் பொருட்கள்

வேளாண் பொருட்களையே மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காக நாங்கள் மிகவும் அக்கறை கொள்கிறோம். ஆனால், மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லையே’ என ஆதங்கப்படுகிறார் மதுரை கோமதிபுரத்தில் இருக்கும் ‘நவதானியா ஆர்கானிக் அண்ட் எக்கோ ஃபிரண்ட்லி குட்ஸ் ஷாப்’ உரிமையாளரான கஜலட்சுமி.

‘இயற்கை இவரது கடையின் விசேஷமே அரிசி, பருப்பில் இருந்து வற்றல், வடகம் வரை அனைத்துமே இயற்கை விவசாயத்தில் விளைந் தவை, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களால் செய்யப் பட்டவை. இயற்கை விவசாயத்தின் பயனை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடையை ஆரம்பித்தார் கஜலட்சுமி. அதற்கு முன்பு, வீடுவீடாய் போய் இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தைப் பற்றி பிரச்சாரம் செய்திருக்கிறார்.

‘உங்களுக்குத் தேவையான விளைபொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து தருகிறோம். எல்லாம் இயற்கை உரங்களால் வளர்க்கப்பட்டவை’ என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னபிறகும் ஆரம்பத்தில் வெறும் 7 வாடிக்கையாளர்கள்தான் கிடைத்தனர். ஆனாலும் தன்னம்பிக் கையுடன் தொடர்ந்து கடை நடத்தினார். இப்போது, இவரது கடைக்கு 250 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசினார் கஜலட்சுமி.

‘‘விழுப்புரம் பக்கத்துல ஒரு சிறிய கிராமம்தான் எங்கள் சொந்த ஊர். அப்பாவும் அம்மாவும் விவசாயம் பார்த்தவர்கள் என்பதால் எனக்கும் விவசாயத்தின் மீது சிறுவயதிலிருந்தே ஒரு பற்றுதல் உண்டு. கொடைக்கானல் மலையில் ஊத்து என்ற இடத்தில் எங்களுக்கு 32 ஏக்கர் தோட்டம் இருக்கிறது. 7 வருடங்களுக்கு முன்பு அதில் பதினோரு ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். அங்கு விளையும் காய், கனிகளை நாங்களே மதுரைக்கு எடுத்து வந்து விற்றோம்.

தேவை அதிகரித்ததால் தேனி, அலங்காநல்லூர், சோழவந்தான் பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் இருந்தும் காய், கனிகளை கொள்முதல் செய்து மதுரையில் டோர் டெலிவரி செய்ய ஆரம்பித்தோம். அதற்கு முன்பாக, எங்களுக்கு காய், கனிகளை தருபவர்கள் உண்மையிலேயே இயற்கை விவசாயம்தான் செய்கிறார்களா என்பதை நேரடியாக களத்துக்குச் சென்று விசாரித்து உறுதிப்படுத்தினோம். அதிகாலை 5 மணிக்கு கடைக்கு காய், கனிகள் வந்து சேரும். அவற்றை பதினோரு மணிக்குள் அனைத்து வீடுகளுக்கும் டோர் டெலிவரி செய்துவிடுவோம். எஞ்சியவை எங்கள் கடையில் விற்பனைக்கு இருக்கும்.

தொடக்கத்தில், ஒரு வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வகைகளில் 20 சதவீதத்தை மட்டுமே எங்களால் இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்து கொடுக்க முடிந்தது. இதை மாற்றி எண்ணெய், அப்பளம், வற்றல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையுமே ஆர்கானிக் பொருட்களாக கொடுக்க தீர்மானித்தோம். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ‘24 லெட்டர்ஸ் மந்த்ரா’ என்ற இயற்கை வேளாண் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டோம்.

அவர்கள் 2 ஆயிரம் ஏக்கரில் இயற்கை வேளாண்மையில் பசுமைக் குடில் அமைத்து அனைத்துப் பொருட்களையும் விளைவிக்கின்றனர். கடந்த எட்டு மாதங்களாக எங்கள் கடையில் வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்துமே இயற்கை வேளாண் பொருட் களாகவே விற்பனை செய்கிறோம். மக்கள் நோய்நொடியின்றி வாழ வேண்டும். அவர்களுக்கு இயற்கை வேளாண் பொருட்களையே தரவேண்டும் என்பதற்காக நாங்கள் இவ்வளவு மெனக்கெடுகிறோம். ஆனால், மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை.

எங்களது வாடிக்கையாளர் களில் 50 பேர் மட்டுமே அனைத்துப் பொருட்களையும் வாங்குகின்றனர். மற்றவர்கள் குறிப்பிட்ட சில பொருட்களை மட்டுமே வாங்குவர். இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி பிரச்சாரம் செய்துகொண்டிருந்தால் மட்டும் போதாது. இயற்கை வேளாண் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தினால்தான் அது வளரும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கை வேளாண் பொருட்களை விற்க விரும்புகிறவர்களுக்கு அதற்கான வழிமுறைகளை சொல்லிக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கோதுமை உள்ளிட்ட ஒரு சில பொருட்களைத் தவிர நமக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் தமிழகத்திலேயே விளைவிக்க முடியும். ஈரோடு, திருப்பூர் பகுதி விவசாயிகள் துணையுடன் அதை சாதிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இயற்கை விவசாயம் என்பதும் குழந்தையை வளர்ப்பது போன்றதுதான். எதையும் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும். எங்காவது சிறு பூச்சி வந்துவிட்டால் அந்தச் செடிகளை காப்பாற்றுவது கஷ்டம். அந்தச் செடியை பிடுங்கிவிட்டு வேறு செடிதான் வைக்க வேண்டும்.

இதுபோன்ற கஷ்டங்கள் இருப்பதால் இயற்கை விவசாயத் தில் விளையும் பொருட்கள் 15 சதவீதம் வரை விலை அதிக மாகத்தான் இருக்கும். ஆனால், ரசாயன உரத்தில் விளைந்த பொருட் களை சாப்பிட்டு அதனால் ஏற்படும் வியாதிக்காக மருத்துவத்துக்கு செலவிடும் தொகையை கணக்குப் பார்த்தால் இந்த விலை உயர்வு ஒன்றும் பெரிய விஷயமில்லை’’ என்கிறார் கஜலட்சுமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x