Published : 18 Jul 2017 10:42 AM
Last Updated : 18 Jul 2017 10:42 AM

அரண்மனைக்கு ராஜா ஆயுள் காப்பீட்டு முகவர்!

தென்னாட்டுப் புலி முருகதாஸ் தீர்த்தபதி

சிங்கம்பட்டி ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. தமிழகத்தில் மன்னராட்சியில் ராஜாவாக முறைப்படி பட்டம் சூட்டிக் கொண்டவர்களில் எஞ்சி இருக்கும் ஒரே ராஜா. 86 வயதைக் கடக்கும் இவர், சிங்கம்பட்டியைப் பொறுத்தவரை இப்போதும் ராஜாதான்!

நெல்லை மாவட்டம், சிங்கம்பட்டியில் 5 ஏக்கரில் விரிகிறது இவரது அரண்மனை. அந்தக் காலத்தில் மன்னர்கள், ‘யாரங்கே?’ என்று குரல்கொடுத்து அழைப்பார்கள். ராஜா முருகதாஸை பார்க்கப் போனால் சீட்டு எழுதி உள்ளே கொடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காகவே அரண்மனை முகப்பில் இரண்டு நபர்களுடன் இயங்குகிறது ’சமூகம் ஆபீஸ்’.

விஜயநகர வீழ்ச்சிக்குப் பிறகு..

ராஜாவின் அனுமதி கிடைத்ததும் உள்ளே இருக்கும் மண்டபத்தில் நம்மை உட்கார வைக் கிறார்கள். மன்னராட்சியில் அதுதான் தர்பார் மண்டபம். இதை, இப்போது, சிங்கம்பட்டி மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்வுகளுக்கும் பயன்

படுத்துகிறார்கள். மற்ற நாட்களில் இது பார்வையாளர்களுக்கான காத்திருப்பு மண் டபம். சிங்கம்பட்டி ராஜாக்களின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லும் படங்கள் அந்த மண்டபத்துச் சுவர் முழுக்க வியாபித்திருக்கின்றன. இப்போதும் இந்த அரண்மனையில் பத்துக்கும் மேற்பட்டோர் பணி செய்கிறார்கள்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகம நாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தங்களை, மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையில், சர்வ சுதந்திரம் பெற்ற ஆட்சித் தலைவர்கள் என அறிவித்துக் கொண்டார்கள். இவர்கள், பாண்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் இருந்த குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக கி.பி 1433-ல் மாற்றியமைத்தார்கள். அப்போதுபிறந்ததுதான் சிங்கம்பட்டி பாளையம்.

‘‘விஸ்வநாத நாயக்மதுரையைச் சுற்றிகோட்டை அமைத்தார். அதில் அமைக்கப்பட்ட 72 கொத்த ளங்களில் 21 கொத்தளங்கள் சிங்கம்பட்டி பாளையக்காரர் தலைமைக்குள் வைக்கப்பட்டன. விஸ்வநாத நாயக்தான் எங்களுக்கு ‘தென்னாட்டுப் புலி’ என பட்டம் கொடுத்தவர்.

திருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்கும் இடையில் பிரச்சினை.எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக சிங்கம்பட்டி இளவரசர் மரணம் அடைந்

தார். அப்படி இறந்தவ ருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கரையும் ‘நல்ல குத்தி’ என்ற பட்டத்தையும் ராணி உமையம்மை வழங்கினார். அதுவே, காலப்போக்கில் ‘நல்ல குட்டி’ ஆகிவிட்டது.” என்று கடந்த காலம் சொல்கிறார் ராஜா முருகதாஸ் தீர்த்தபதி.

ராஜாவா இருப்பது பெரிய சுமை முருகதாஸுக்கு மூன்றரை வயதி ருக்கும்போது அவரது தந்தையார் காலமாகிவிட்டார். அப்போது இளவரசர் மைனராக இருந்ததால் சிங்கம்பட்டி பாளை யத்தைத் தனது பராமரிப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டீஷ் சர்கார். படிப்புக்காக முருகதாஸ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். 21 வயதில் தாயகம் திரும்பிய முருக தாஸுக்கு முறைப்படி சிங்கம்பட்டி ராஜாவாக பட்டம் சூட்டினார்கள்.

அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஜபர்தஸ்தா இருப்பாங்களாமே? என்று கேட்டால், பலமாகச் சிரிக்கிறார் முருகதாஸ். “அந்தக் காலத்துல ராஜாவா இருக்கிறதே பெரிய

சுமைதான். தினமும் புதுத்துணி உடுத்தணும், யாரையும் பார்த்தவுடன் சட்டுனு எழுந்து நின்றககூடாது, ஆச்சாரமான அந்தணர் எலுமிச்சம் பழம் கொண்டு வந்தால் மட்டுமே எழுந்து நிற்கலாம், இரண்டு இலைபோட்டுத்தான் சாப்பிடணும். பொது இடங்களுக்குச் சென்றால் மன் னருக்கு மட்டும்தான் மாலை மரியாதை செய்யவேண்டும். இப்பெல்லாம் அப்படிச்சொன்னா கல்லால் அடிக்க வந்துருவாங்க.

நான் 32-வது ராஜா

நான் சிங்கம்பட்டிக்கு 32-வது ராஜா. எங்கப்பா, சென்னையில் படிச்சப்போ, கொலை வழக்கில் சிக்கிட்டாரு. வழக்குக்கு நிறைய செலவானதால ஜமீன் வருமானமெல்லாம் பாதிச்சுது. அதை சமாளிக்கிறதுக்காக எங்க தாத்தா மலைநாட்டுல இருந்த சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை பிரிட்டீஷ் கம்பெனிக்கு குத்தகைக்குக் கொடுத்தார். அப்படி உருவானது தான் இப்ப இருக்கிற மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்.’’ என்கிறார் முருகதாஸ்,

முருகதாஸ் தீர்த்தபதி (முதலாவது படம்), தனது மனைவியுடன் முருகதாச் தீர்த்தபதி (இரண்டாவது படம்)

முன்புபோல் இப்போது ஜமீனுக்கு வருமானம் வளமாய் இல்லை. கொஞ்சம் நில, புலன்களும் வங்கிக் கையிருப்பும் தான் இப்போதைய இருப்பு. ஜமீனுக்கு பாத்தியப்பட்ட காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட சில கோயில்கள் இருக்கின்றன. முன்பு, அரண்மனையில தளபதிகளாக, மந்திரிகளாக இருந்தவர்களின் வாரிசுகளே இப்போதும் அரண்மனையில் பணியாளர்களாக இருக்கிறார்கள். ராஜ விசுவாசத்தால் இவர்கள் அனைவருமே குறைவான ஊதியத்திலேயே இங்கு பணி செய்கிறார்கள்.

ரெண்டு நாள் ராஜா

‘‘ராஜாங்கிற கெத்து இருக்கதால கல்யாண வீட்டுக்கு போனா, 10 ஆயிரமாச்சும் மொய் வெக்க வேண்டியிருக்கு. அதேசமயத்துல, ராஜான்னு சொல்லிக்கிட்டு சும்மா உக்காந்திருக்கவும் முடியாது. கொஞ்ச காலம் சென்னையில், கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செஞ்சேன். ஆனா, ஆன்மிக நாட்டம்.. நம்மல சொந்த ஊருக்கே இழுத்துட்டு வந்திருச்சு.” என்று சொல்லும் சிங்கம்பட்டியின் இந்த ராஜா, “இப்ப இங்கே, எல்.ஐ.சி. முகவரா இருக்கேன். அதுல வர்ற வருமானம் கொஞ்சம் கைகுடுக்குது. இப்பவும் வருசத்துல ரெண்டு நாள் நிஜமாவே நான் ராஜாவா இருந்தாக ணும். ஆடி அமாவாசையும் அதற்கு அடுத்த நாளும்தான் அந்தத் திருநாள்கள். அந்த நாள்களில் ராஜா உடைதரித்து சொரிமுத்து அய்யனார் கோயில் தர்பாரில் பொதுமக்களுக்குத் தரிசனம் கொடுப்பேன்.

எனக்கு மூணு பொண்ணுங்க; ரெண்டு பசங்க. மூத்தவன் இறந்துட்டான். இளையவன்தான் அடுத்த ராஜா. எனக்குப் பின்னாடி இந்தச் சடங்கு, சம்பிரதாயம், பாரம்பரியம் எல்லாம் தொடருமா? என் புள்ள இதையெல்லாம் விரும்புவானான்னு தெரியல. ஆனா, என் காலம் வரைக்கும் இந்த ஜமீனுக்கான சம்பிரதாயங்களை எல்லாம் ஒண்ணு விடாம கடைபிடிப்பேன்.” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x