Published : 30 Aug 2015 02:44 PM
Last Updated : 30 Aug 2015 02:44 PM

அரசு ஆவணங்களில் காலனி, சேரி, குப்பம் பெயர்களை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளில் இடம் பெற்றுள்ள காலனி, சேரி, குப்பம் போன்ற பெயர்களை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக சமத்துவப் படை நிறுவனத் தலைவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான பி.சிவகாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு:

தமிழகத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகள் காலனி, சேரி, குப்பம் உள்ளிட்ட பாரபட்சமான பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

மதுரை திருமங்கலம் வடக்கம்பட்டியில், ஆதிதிராவிடர் வகுப்பினர் வசிக்கும் பகுதியை வடக்கம்பட்டி காலனி என்றும், மற்றொரு இரு பகுதிகளை தங்களாச்சேரி, சுவீப்பர் காலனி என்றும் அழைக்கின்றனர்.

உசிலம்பட்டியில் சக்கிலியன்குளம், வாடிப்பட்டி அருகே ஆதிதிராவிடர் காலனி உள்ளது. வாடிப்பட்டியில் பிரதான பகுதியின் பெயர் அழகாபுரி ஆகும். சில இடங்களில் மேலத்தெரு, கீழத்தெரு எனப் பிரித்து காட்டுகின்றனர்.

அரசின் முக்கிய ஆவணங்களான ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் இந்த பாரபட்சமான பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சமுதாயத்தில் ஜாதியப் பாகுபாடு நடைமுறையில் இருந்து வரும்போது, அரசு ஆவணங்களிலும் ஆதிதிராவிட வகுப்பினர் வசிக்கும் பகுதிகளை பாரபட்சமான பெயர்களில் குறிப்பிடுவது, தீண்டாமைக் கொடுமை, ஜாதி வன்முறைகளை அதிகரிக்கவே செய்யும்.

மேலும், இந்த பாரபட்சமான அடையாளங்களை குறிப்பிடும் முறை அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

எனவே, தமிழகம் முழுவதும் ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களில் இடம் பெற்றுள்ள காலனி, சேரி, குப்பம் உள்ளிட்ட பாரபட்சமான பெயர்களை நீக்கி, அந்த பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டவும் அல்லது அப்பகுதியை பிரதான இடத்தின் பெயரில் அழைக்கவும் உள்துறை செயலர், தமிழக ஊரக மேம்பாடு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துறை செயலர், ஆதிதிராவிட நலத்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை - ஆகஸ்ட் 31-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x