Published : 13 Feb 2017 08:02 PM
Last Updated : 13 Feb 2017 08:02 PM

அரசியலைப் பொறுத்தவரையில் அதிமுக எங்களுக்கு எதிரிதான்: ஸ்டாலின்

சட்டப்பேரவையில் திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டாலும் அரசியலைப் பொறுத்தவரை, அதிமுக என்பது எங்களுக்கு எதிரிதான் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

''திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி இல்லாத காரணத்தால், தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, பலவகையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வு குறித்து ஒரு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் இன்றைக்கு கடுமையான வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டு, குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. ஆக, இதையெல்லாம் அடிப்படைகளாக வைத்து, 11 தீர்மானங்கள் திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால், இதுபற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல், யார் முதல்வராக அமர்வது என்ற பதவி வெறி பிடித்த நிலையில், ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, காபந்து முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், மக்கள் பிரச்சினைகள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தொடர்ந்து தான் முதல்வராக இருக்க வேண்டும் என்பதில், அவரது கவனம் இருந்து கொண்டிருக்கிறது. ஆக, கூவத்தூருக்கும், கிரீன்வேஸ் சாலைக்கும் இடையில் பதவிச்சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று போடப்பட்டுள்ள 11 தீர்மானங்களில் கடைசி தீர்மானமாக, தமிழகத்தின் ஆளுநர் இனியும் நேரத்தை வீணடிக்காமல், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியல் சாசன சட்டப்படி, உடனடியாக தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைவதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதையே இங்கும் நான் உங்கள் மத்தியில் வலியுறுத்துகிறேன்.

சட்டசபையில் உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களித்து, யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ, அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அதிமுக என்பது எங்களுடைய எதிரி. சட்டப்பேரவையைப் பொறுத்தவரையில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால், அரசியலைப் பொறுத்தவரையில் அதிமுக என்பது எங்களுக்கு எதிரிதான். அதிமுக இப்போது இரண்டாக சசிகலா, ஓ.பி.எஸ் அணிகளாக பிரிந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இரண்டுமே அதிமுக தான்.

ஏற்கனவே 5 வருடமாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சி இருந்தபோது எப்படி இந்த நாடு குட்டிச்சுவராகிப் போனதோ, கொள்ளையடித்தார்களோ அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் அதேபோல கொள்ளையடிப்பதற்கு தான் பதவி வெறி பிடித்து போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

எனவே அவர்களைப் பொறுத்தவரையில் எங்களுக்கு எதிரி தான். யாருக்கும் நாங்கள் பின்பக்கமாக ஆதரவு தெரிவிப்பதோ அல்லது சசிகலா சொல்வதுபோல் நாங்கள் பேசுவது, சிரிப்பது என அவரின் மனதிற்கு தகுந்தாற் போல் அரசியலுக்காக அவர் பேசிக் கொண்டிருக்கலாமே தவிர, அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவிற்கு ஆதரவு தருவதுபோல் பேசி வருகிறார். சுப்பிரமணியன்சுவாமி சொல்வதை அவருடைய கட்சியே ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

சட்டப்பேரவையில் பலப்பரீட்சை நடக்கிறபோது அதிமுக இரண்டு அணியாக இருக்கும் சூழல் சூழல் வருகிறபோது, அந்த நிலை வரும்போது, திமுக ஒரு நல்ல முடிவை எடுக்கும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x