Published : 25 Aug 2015 12:14 PM
Last Updated : 25 Aug 2015 12:14 PM

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனையை ஏழை, எளிய மக்களும் செய்துகொள்ளும் வகையில், முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், 'அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, "நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் அடைய இயலும். எனவே தான் உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனையை பலரும் மேற்கொள்கின்றனர்.

தற்போது பல தனியார் மருத்துவமனைகள், முழு உடல் பரிசோதனைக்கு 5,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. அனைவராலும் அதிக அளவில் கட்டணம் செலுத்தி, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள இயலாது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டு உள்ளதோடு, நவீன மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதால், ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் இத்தகைய உடல் பரிசோதனை செய்யும் வசதிகள் தற்போது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்ளன.

எனவே முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில்‚ ' அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்‛ அதாவது, Amma Master Health Check-up தொடங்கப்படும்.

இந்த திட்டத்தில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, ரத்தக் கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு பரிசோதனை, ஹெப்படைடிஸ் பி ரத்த பரிசோதனை, ரத்த வகை மற்றும் ஆர்.எச் (சுh) பரிசோதனை, நெஞ்சு சுருள் படம், நெஞ்சு ஊடுகதிர் படம், மிகையொலி பரிசோதனை (USG- abdomen), இதய மீள் ஒலி பரிசோதனை (echo), தைராய்டு ரத்த பரிசோதனை மற்றும் சிறப்பு சர்க்கரை நோய் பரிசோதனை (HbA1c) ஆகியவை செய்யப்படும்.

'அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்'

இதே போல் மகளிருக்கு என்று தனியாக ‚ 'அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை', அதாவது Amma Women Special Master Health Checkup என்ற திட்டமும் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், மேற்கண்ட அனைத்து பரிசோதனைகளுடன் கூடுதலாக கருப்பை முகைப் பரிசோதனை (pap smear), மார்பக எண்ணியல் ஊடு கதிர்ப்பட பரிசோதனை Digital Mamogram, எலும்பு திறனாய்வு பரிசோதனை, ரத்த வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பாரா தைராய்டு ஹார்மோன் (Parathyroid Hormone) பரிசோதனை ஆகியவைகளும் செய்யப்படும். இதற்காக 10 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முழு உடல் பரிசோதனைக்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.

'அம்மா ஆரோக்கியத் திட்டம்'

மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டார அளவிலான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்தில் இரு நாட்களில் பொதுமக்கள் சென்று, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், இரத்த அழுத்தம், இ.சி.ஜி., கொலஸ்ட்ரால், கண் பரிசோதனை போன்ற அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் கட்டணம் ஏதுமின்றி செய்து கொள்ளும் வகையில் 'அம்மா ஆரோக்கியத் திட்டம்' என்ற ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணம் ஏதும் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு 'அம்மா மகப்பேறு சஞ்சீவி'

தமிழக அரசு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகப்பேற்றின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தவிர்க்க மாதுளை மணப்பாகு மற்றும்

கருவேப்பிலை பொடியையும்; அடுத்த மூன்று மாதங்களின் போது தாய்க்கு ஏற்படும் இரும்பு சத்து மற்றும், வைட்டமின் சத்து குறைபாட்டை நீக்க அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை போன்றவற்றையும்; கடைசி மூன்று மாதங்களின் போது ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றை குறைக்க உளுந்து தைலத்தையும்; சுக மகப்பேறுக்கு குந்திரிக தைலம் மற்றும் பாவன பஞ்சங்குல தைலத்தையும் பயன்படுத்தலாம்.

ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தை பிறப்புடன் முடிந்து விடுவது இல்லை. குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய் சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சதாவேரி லேகியம்; இடுப்பு வலி, கைகால் வலிக்கு பிண்ட தைலம்; குழந்தையின் ஆரம்ப கால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட 'அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மருந்துகள், சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கூறிய திட்டங்கள், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேலும் சிறந்து விளங்கவும், அதன் மூலம் தரமான உயர்தர மருத்துவச் சேவை தங்கு தடையின்றி, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவும், ஒளிபடைத்த தமிழகம் உருவாகவும் வழிவகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டு அமைகிறேன்" என்று அந்த அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, தென்தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்படும், தென் தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்த்துள்ளார்.

விரிவான செய்திக்கு >| புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, தென்தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி |

அடையார் புற்று நோய் மையம் மேம்படுத்தப்படுகிறது:

அடையார் புற்று நோய் மையம் ரூ.120 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x