Published : 08 Feb 2015 02:38 PM
Last Updated : 08 Feb 2015 02:38 PM

அமைதியாக ஓரு சமூக சேவை: கோவையில் பரஸ்பரம் உதவும் மக்கள் இயக்கம்

பிறருக்கு உதவ வசதியோ, பதவியோ தேவையில்லை. உதவ வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் போதும், நிச்சயம் நம்மால் முடிந்த உதவியை செய்ய முடியும் என்கிறது கோவையில் உள்ள பரஸ்பரம் மக்கள் அறக்கட்டளை.

சமீபத்தில், பொள்ளாச்சி அருகே உள்ள பழங்குடி மாணவர்கள் பயிலும் இல்லம் ஒன்றுக்கு இந்த அமைப்பு பல்வேறு உதவிகளைச் செய்தது.

பரஸ்பரம் அமைப்பினரிடம் கேட்டபோது, பதவி, வருமானம், பொறுப்பு, அந்தஸ்து என எதுவுமே நாங்கள் பார்ப்பதில்லை. உதவி செய்ய நினைத்தால் போதும், நம்மால் முடிந்த ஏதாவது ஒன்றை கொடுத்துதவ முடியும். அதைத்தான் அனைவரும் செய்கின்றனர். வசதி இருப்பவர் பொருளாக உதவுவார். தொழில் தெரிந்தவர் தொழிலாகவே உதவுவார். சிலர் தங்கள் உண்டியல் சேமிப்பைக் கூட எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

எங்கள் அமைப்பில் துப்புரவுத் தொழிலாளி முதல் வங்கி மேலாளர் வரை உள்ளனர். இதுதான் பரஸ்பரம் என்பதன் அர்த்தம் என்றனர்.

25 வருடங்களுக்கு முன் ரத்த தானத்தை மையப்படுத்தி சில நண்பர்களால் இந்த அமைப்பு உருவானது. இன்று 140 உறுப்பினர்களுடன், கோவையில் மிகப்பெரிய அமைப்பாக மாறியுள்ளது. அமைப்பின் உறுப்பினர்களிடம் பேசும்போது, வேறு,வேறு தொழில்களைச் சேர்ந்த பலரும் ஒன்றாக இணைந்தபோது பெரிய தொகை சேரத் தொடங்கியது. 2005-ல் பரஸ்பரம் மக்கள் அறக்கட்டளையாக பதிவு பெற்றது. ஆதரவற்ற இல்லங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவது, கல்லூரியில் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் நிதியுதவி செய்வது, கண் தானம், உடல் தானம், உடல் உறுப்பு தானங்களை பெற்றுத்தருவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறோம்.

உடல் தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம் ஆகியவை மிக முக்கியமானவை. விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட 100-ல் 4 % தான் இதில் வெற்றி உண்டு. தெரிந்த வீடுகளில் துக்க நிகழ்வுகள் ஏற்படும்போது, உறுப்பினர்கள் அங்கு சென்று, அவர்களது மனநிலை அறிந்து, உடல் உறுப்பு தானத்தை எடுத்துக் கூறி சம்மதம் பெறுவர்.

அதேபோல கண்தானம் செய்தவர்களுக்கு விழா எடுத்து அங்கீகாரம் செய்கிறோம். இதுவரை சுமார் 350 கண் தானங்களில் எங்களது பங்கு உள்ளது. சுமார் 200 பேருக்கு உடல் தானப் பதிவு செய்து கொடுத்துள்ளோம். நேரடியாக 5 உடல் தானங்களை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

இந்த சமூகத்துக்கு நாம் அனைவருமே கடனாளிகள். அதை யாரும் முழுமையாக திருப்பிச் செலுத்துவதில்லை. குறைந்தபட்சம், கடனுக்கு வட்டியாவது செலுத்த வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம் என்கின்றனர் பரஸ்பரம் உறுப்பினர்கள்.

பெரிய பெரிய நோக்கங்களு டன், அவற்றை சத்தமில்லாமல் நிறைவேற்றி சமூக மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது இந்த மக்களின் இயக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x