Last Updated : 09 Dec, 2016 08:35 AM

 

Published : 09 Dec 2016 08:35 AM
Last Updated : 09 Dec 2016 08:35 AM

அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள்...: ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழி ஆகிய சசிகலா..!

ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த நாளில் அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள் பற்றி தெரியவந்திருக்கிறது. அந்த இறுக்கமான தருணத்தில் அப்போலோவில் இருந்த கட்சிப் பிரமுகர்கள், சசிகலா தரப்பினர், அதிகாரிகள், கார்டன் உதவியாளர்கள் எனப் பலரிடமும் பேசியதில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இதோ:

கடந்த 5-ம் தேதி மாலை.. 5.30 மணி இருக்கும். ஜெ.யின் உடல்நிலை குறித்த குளறுபடிகள் வெளியில் தெரியவந்த நேரம். அப்போலோவின் இரண்டாம் தளத்தில் அனுமதிக்கப்பட்ட சிலர் நடப்பது எதுவும் புரியாமல் காத்திருந்தார்கள். சில நிமிடங்களில் தனி அறையில் இருந்து கலங்கிய விழிகளுடன் சுடிதாரில் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலா வெளியே வந்தார். அவரை இளவரசி (சசிகலாவின் அண்ணன் மனைவி) ஒருபுறம் தாங்கிப் பிடித்திருக்க, மறுபுறம் இளவரசியின் மகன் விவேக் கைகளைப் பற்றியிருந்தார்.

சசிகலாவின் தோற்றம் கண்டு, அங்கு இருந்தவர்களால் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாகியிருக்கலாம் என்பதை உணர முடிந்தது. சசிகலாவிடம் எதுவும் கேட்க இயலாத நிலையில் அமைச்சர்கள் இருபுறமும் சோகத்துடன் விலகி நின்றிருந்தனர்.

சரத்குமார் மட்டும் அருகில் சென்று, ‘நீங்கதான் தைரியமா இருக்கணும் மேடம்’ என்று சொன்னார்.

எல்லோரையும் நிமிர்ந்து பார்த்த சசிகலா உடைந்து அழ ஆரம்பித்தார்.

‘அக்காவை இந்த கோலத்தில் பார்க்க முடியவில்லையே.. அவங்க இல்லாம நாளைக்கு என்ன செய்யணும்னு கூடத் தெரியலியே..’ என்று தேம்பிய சசிகலாவுக்கு அங்கிருந்தவர்கள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு சட்டென்று தன்னைத் தேற்றிக் கொண்டவராக, ஜெ. இருந்த அறைக்குள் சென்றார்.

எந்த இக்கட்டிலும் கலங்காதவராக, நல்லது கெட்டதுகளில் ஜெயலலிதா வுக்குப் பின்னால் கம்பீரமாக நிற்ப வருமாக அறியப்பட்ட சசிகலா, உடைந்து அழுதது அங்கிருந்தவர்களால் வித்தியாசமாகவே பார்க்கப்பட்டது. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்தம்பித்து நின்றிருந்தார்கள்.

சிறிது நேரத்திலேயே, ’நடக்கக் கூடாதது நடந்து விட்டது’ என்பதை அப்போலோவின் இரண்டாம் தளத்தில் காத்திருந்தவர்களால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அனைவரும் வெகு அமைதியாகப் பேசிக் கொண்டனர். அவர்களின் பேச்சில் சுற்றி வந்த விஷயங்கள்:

‘கட்சி என்ன ஆகும்னு தெரியலியே.. யாரை சி.எம். ஆக்குறது? திரும்பவும் ஓ.பி.எஸ்.தானா? தனக்கு எந்தப் பதவியும் வேணாம்னு சின்னம்மா சொல்றாங்களாமே? அதை அவுங்க சொந்தங்களே ஏத்துக்கலயாமே? எதுவா இருந்தாலும் பொதுக்குழு கூட்டி அப்புறமா பாத்துக்கலாம்னு சின்னம்மா சொல்லிட்டாங்களாமே?’

தளத்தில் நடந்த பேச்சுக்கள் அனைத் தும் சசிகலாவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. கூர்ந்து கேட்டுக் கொண்ட சசிகலா, ‘இக்கட்டான நேரத்தில் எல்லாம் ஓ.பி.யைத்தான் சி.எம். ஆக்கினாங்க அக்கா. இதுவும் இக்கட்டான நேரம்தான். அவங்க தேர்ந் தெடுத்த ஓ.பி.யைத்தான் நானும் தேர்ந் தெடுக்க முடிவு பண்ணிருக்கேன்’னு உறுதியாக சொல்லிவிட்டார்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் ஆர்வம் காட்டாமல், இரண்டா வது தளத்தின் வலது வராண்டாவின் கடைசி பெஞ்சில் தனியாக அமர்ந் திருந்தார் ஓபிஎஸ். டீ குடிக்கச் சொல்லி அவரிடம் சிலர் கேட்க, ’வேண்டாம்’ என சைகையில் சொன்னார்.

ஜெயலலிதா இறந்தது உறுதியான நிலையில், அங்கு இருந்த எல்லோருமே சில நிமிடங்கள் அழுதபடி நின்றிருந்தனர்.

அடுத்து செய்ய வேண்டியவை குறித்துப் பேசுவதற்காக சசிகலாவின் அருகில் போய் அதிகாரிகள் நின்றனர். தயங்கியபடியே, ‘அடக்கம் பற்றி முடிவு செய்யணும் மேடம். கார்டனிலேயே அடக்கம் பண்ணிறலாமா? ’ என்றனர்.

சற்றும் தாமதிக்காமல், ‘அக்காவை எம்ஜிஆர் சமாதியிலேயேதான் அடக்கம் செய்யணும். எம்ஜிஆருக்குப் பக்கத்தில்தான் அக்கா இருக்கணும்’ என்று தீர்மானமாகச் சொன்னார்.

‘மெரினாவில் அடக்கம் செய்வதில் கோர்ட் சிக்கல் இருக்கிறதே..’ என்று இழுக்க.. ‘கூடுதலாக இடம் எடுத்துச் செய்தால்தான் பிரச்சினை வரும். எம்ஜிஆர் சமாதியிலேயே இடம் எடுத்தால் எந்த சிக்கலும் வராது’ என்று சொல்ல.. அதிகாரிகள் அமைதியானார்கள். அதேபோல் எம்ஜிஆருக்கு இறுதி அஞ்சலி நடந்த ராஜாஜி ஹாலிலேயே அக்காவுக்கும் இறுதி அஞ்சலி நடக்கட்டும் என்று சசிகலா சொன்னார்.

ஷீலா பாலகிருஷ்ணன் அருகில் சென்று, சசிகலாவை அவ்வப்போது தேற்றினார். அக்கா விருப்பப்படி நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அப்படியே தொடர்வார்கள் என்பதையும் ஆணித்தரமாக சொன்னதில் அங்கிருந்தவர்களுக்கு தெளிவு கிடைத்தது போல் ஆனது.

அப்போது அங்கு வந்த ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன், ‘ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸ் முடிந்துவிட்டது’ என்றார். அப்போதும் சசிகலா உள்ளிட்ட அனைவரும் உடைந்து அழுததைக் காண முடிந்தது.

ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டுவரப்பட்டபோது கடுமையான கெடுபிடிகள் இருந்தன. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி அப்பு, உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் இறுகிப்போய் நின்றார்கள். கார்டனின் வேலைக்காரப் பெண்கள் கதறினார்கள். அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவின் உடலைப் பார்க்க கார்டனுக்குள் சில நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

கடுமையான கெடுபிடி நிலவிய அந்த நேரத்தில், கேட்டில் நின்று கதறிய அஞ்சலை என்கிற பெண்ணை மட்டும் பாதுகாப்பு அதிகாரிகள் கார்டனுக்குள் அனுமதித்தார்கள். அவர் கார்டனுக்குள் அவ்வப்போது வந்து வேலை பார்க்கும் பெண்ணாம். ஆம்புலன்ஸுக்குப் பின்னால் சசிகலா காரில் வந்தபோது இந்தப் பெண் கதறியதை பார்த்து, உள்ளே அனுமதிக்கச் சொல்லியிருக்கிறார்.

அரை மணி நேரம் மட்டுமே கார்ட னில் ஜெ. உடலுக்கு சடங்குகள் நடக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் மூன்று மணி நேரத்துக்கு மேல் ஜெ.யின் உடல் அங்கேயே இருந்தது. ஜெயலலிதா வுக்குப் பிடித்த பச்சை நிறச் சேலையை சசிகலா உடுத்திவிட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் கைக்கு வாட்ச் கட்டிவிட்டு, தனது இரு கைகளாலும் முகத்தைப் பிடித்து சசிகலா கதறியிருக்கிறார்.

‘அக்கா, நீங்க இல்லாத வீட்ல இனிமே நான் என்னக்கா பண்ணப் போறேன். எல்லா எடத்துலயும் நீங்கதானக்கா தெரியுறீங்க..’ என்று பிதற்றியபடி ரெண்டு மணி நேரத்துக்கும் மேல் ஜெயலலிதாவின் உடலுக்கு அருகிலேயே சசிகலா அமர்ந்திருக்கிறார். விடிய விடிய ஜெயலலிதா உடலின் மீது கைவைத்துக் கொண்டு கலங்கியபடியே அமர்ந்திருக்கிறார் சசிகலா.

‘விடிஞ்சுருச்சு. ராஜாஜி ஹால் கொண்டு போயிறலாமா?’னு தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சொன்னப்ப கூட, சசிகலா அருகில் போய் சொல்ல அனைவருமே தயங்கினர். ஜெயலலிதாவின் உடலை தூக்கும் போது சசிகலாவை, கார்டனில் பணிபுரியும் பெண்கள்தான் ஆறுதலாகத் தாங்கிக் கொண்டனர்.

நர்ஸிடம் மன்னிப்பு கேட்ட ஜெயலலிதா

அப்போல்லோவில் அட்மிட்டான மூன்றாவது நாள் ஜெயலலிதாவின் உடல்நிலை சற்று மோசமானது. அன்று இரவு ஜெ. திடீரென கண் விழிக்க சசிகலா சட்டென எழுந்து என்ன என்று கேட்டிருக்கிறார். அப்போது பணியில் இருந்த நர்ஸ் கண் அயர்ந்துவிட, அவரை எழுப்பச் சொல்லி இருக்கிறார் ஜெ. ‘நாங்க தூங்காம இருக்கோம். நீ இப்படி தூங்கலாமா’ என அந்த நர்ஸை கடிந்து கொண்டாராம் ஜெ. அடுத்த சில நாட்களில் சுய நினைவு பறிபோகும் அளவுக்கு ஜெ.யின் உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்களின் தொடர் முயற்சியால் ஒரு வாரத்தில் நினைவு திரும்பியது.

ஆனாலும் ஜெ.க்கு எந்தளவுக்கு நினைவு திரும்பி இருக்கிறது என்பதை மருத்துவர்களால் அறிய முடியவில்லை. அப்போது அந்த நர்ஸ் அறைக்குள் வர, அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஜெ. ‘நான் பேசியதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதே… வேதனையில் அப்படி பேசிவிட்டேன்’ என ஜெ. சொல்ல, பதறி இருக்கிறார் அந்த நர்ஸ். ஜெ.க்கு முழுவதுமாக நினைவு திரும்பிவிட்டது என்பதை அதை வைத்தே மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x