Published : 04 Nov 2014 09:32 AM
Last Updated : 04 Nov 2014 09:32 AM

அனைத்து சென்னை பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை

சென்னை மாநகராட்சி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் குழந்தைகள் பாலியல் வன் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

துளிர் மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி கல்வித்துறை இணைந்து கொளத்தூர் மாநக ராட்சி பள்ளியில் பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந் தைகள் தங்களை பாது காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். கல்வித்துறை அலுவலர் பேரின்பராஜ், துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து மாநகராட்சி கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

இந்திய அரசு தேசிய அளவில் நடத்திய ஆய்வு ஒன்றில் 53.22 சதவீத குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.

நவம்பர் 19-ம் தேதி உலக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் 284 பள்ளிகளிலும், குழந்தைகள் பாலியல் வன்கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டோம்.

இந்நிகழ்ச்சியை கொளத்தூர் பள்ளியில் தொடங்கியுள்ளோம். மற்ற பள்ளிகளில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவர் என்றார் அவர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து துளிர் நிறுவனத்தின் திட்ட மேலாளர் நான்சி கூறியதாவது: குழந்தைகள் பாதுகாப்பின்மையை உணரும்போது அவர்களின் மற்ற உரிமைகள் மற்றும் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. அது அக்குழந்தையை மட்டுமல்லாது சமுதாயத்தையே பாதிக்கக் கூடியதாக இருக்கும். குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை பள்ளிகளிலேயே செலவிடுகின்றனர். எனவே பள்ளிகளே குழந்தை பாதுகாப்புக்கான முன்னோடி இடமாகும்.

குழந்தைகளுக்கு பொதுவான பாதுகாப்பு விதிகளை கற்றுக் கொடுப்பதைப் போல ‘குழந்தைகள் பாலியல் வன்முறை’ குறித்த விழிப்புணர்வுகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இம்மாதிரியான கற்றல் நிகழ்வுகள் குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பை வளர்த்துக் கொள்வதுடன், எந்தச் சூழ்நிலைகளிலும் கவனமாக இருக்கவும், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x