Published : 16 Feb 2016 05:23 PM
Last Updated : 16 Feb 2016 05:23 PM

அத்திக்கடவு - அவினாசி திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அரசு உறுதி

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதற்குப் பிறகு அவர் நிகழ்த்திய உரையில், ''அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 1,862 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை 2011 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள 31 பொதுப்பணித் துறை ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர்நிலைகளில் நிரப்புவதற்கு இத்திட்டம் வகை செய்கிறது.

நிதி உதவி கோரி மத்திய அரசுக்கு இந்தத் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன்படி மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும். அதே சமயம், இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும்'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x