Published : 18 Apr 2016 11:00 AM
Last Updated : 18 Apr 2016 11:00 AM

அதிமுக பட்டியலில் 7-ம் முறையாக திருத்தம்: 8 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம்

அதிமுகவில் கோவில்பட்டி, பாப்பி ரெட்டிபட்டி, சங்கராபுரம் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பி.பழனியப்பன், மோகன், சண்முகநாதனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 4-ம் தேதி வெளியானது. மறுநாளே அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து 6 முறை வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் 15, புதுச்சேரியில் 3 என மொத்தம் 18 வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். சிலர் தொகுதி மாறினர்.

கடந்த 9-ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா, விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து பிரச்சாரம் செய்தார். 5-ம் நாளாக காஞ்சிபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதற்கிடையே, 7-வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று மாற்றப்பட்டது. 8 தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, அரக்கோணம் (தனி) வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோ.சி.மணிவண்ணன் மாற்றப்பட்டு, தற்போதைய எம்எல்ஏ சு.ரவி அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாப்பிரெட்டிபட்டியில், ஜி.எஸ்.குப்புசாமிக்கு பதிலாக அமைச்சர் பி.பழனியப்பன், சங்கராபுரத்தில் ஏ.எஸ்.ஏ.ராஜசேகரை மாற்றிவிட்டு அமைச்சர் ப.மோகன், ஈரோடு (மேற்கு) தொகுதியில் ஆர்.வரதராஜனுக்கு பதில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான கே.வி.ராமலிங்கம் நிறுத்தப்படுகின்றனர்.

திருச்சி (கிழக்கு) தொகுதியில் டாக்டர் எஸ்.தமிழரசிக்கு பதிலாக தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகள் இணைய தலைவர் வெல்லமண்டி என்.நடராஜனும், வைகுண்டம் தொகுதியில் ம.புவனேஸ்வரனுக்கு பதிலாக அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதனும், கோவில்பட்டியில் கே.ராமானுஜம் கணேஷ் மாற்றப்பட்டு, தற்போதைய எம்எல்ஏ கடம்பூர் ராஜூவும், பாளையங்கோட்டையில் அ.தமிழ்மகன் உசேனுக்கு பதில் நெல்லை மாநகர் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்.கே.ஏ.ஹைதர் அலியும் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மாற்றம் ஏன்

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 6 முறை மாற்றங்கள் நிகழ்ந்தபோதே, திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதும் மேலும் மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாயின. கடந்த 13-ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. தொடர்ந்து மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பட்டியல்கள் அடிப்படையில், சில மாற்றங்களை அதிமுக செய்துள்ளதாக கூறப் படுகிறது.

அமைச்சர் பழனியப்பன், சென்னையில் தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். அவர் மீது பல புகார்கள் எழுந்த நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்நிலையில், இப்போது மீண்டும் பாப்பிரெட்டிபட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சங்கராபுரம் தொகுதியில், ஏ.எஸ்.ஏ.ராஜசேகர் மீது தலைமைக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அவர் மாற்றப்பட்டு, அமைச்சர் பி.மோகனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மேற்கில் இருந்து கிழக்கு தொகுதிக்கு மாற்றப்பட்ட டாக்டர் தமிழரசி மீதும் தொடர்ந்து புகார்கள் வந்ததால், அவரும் மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியை பொறுத்தவரை, தற்போதைய எம்எல்ஏ வான அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அவரது மகன் மீது புகார்கள் அதிகளவில் வந்ததால், முதலில் வெளியான பட்டியலில் அவர் பெயர் இல்லை. ஆனால், தற்போது மீண்டும் அவர் வேட்பாளராகியுள்ளார். கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இதனால், அந்த தொகுதியில் வைகோவின் சமூகத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜூவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாளையங்கோட்டையில் வேட்பாளராக இருந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் மீது அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் மட்டுமின்றி, பல்வேறு ஆதரவு அமைப்புகளும் தலைமைக்கு புகார் அனுப்பின. இது தவிர, அவரது பிரச்சாரம் எடுபடவில்லை என்ற தகவலும் தலைமைக்கு சென்றதால் அவர் மாற்றப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த பட்டியலும் முடிவானதல்ல. வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பாக இன்னும் சில மாற்றங்கள் வரும் என்பதே அதிமுக வட்டாரத்தில் பேச்சாக உள்ளது.

19 அமைச்சர்கள் போட்டி

வேட்பாளர் பட்டியலில் 7-வது முறையாக ஏற்பட்ட மாற்றத்தால், போட்டியிடும் அமைச்சர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிட்டது.

அமைச்சர்கள் மோகன், பழனியப்பன் சண்முகநாதனுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவில்பட்டியில் வைகோ போட்டியிடுவதால் அங்கு அவரது சமூகத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜூவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x