Published : 19 May 2016 12:23 PM
Last Updated : 19 May 2016 12:23 PM

அதிமுக ஐவர் அணியில் இருவர் பின்னடைவு; ஒருவர் தோல்வி

அதிமுக ஐவர் அணியில் இருவர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வியடைந்தார்.

அதிமுகவில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், பி.பழனியப்பன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவே முதல்வருக்கு அடுத்த அதிகார மையமாக வலம் வந்தது. ஆனால், சமீபகாலமாக ஐவர் அணி மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணத்தால், அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் பகல் 12 மணி நிலவரப்படி அதிமுக ஐவர் அணியில் இருவர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வியடைந்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக அமைச்சர் பி.பழனியப்பன் பின்னடைவை சந்தித்துள்ளார். இத்தொகுதியில் 5 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் அதிமுகவின் பழனியப்பன் 15408 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சத்யமூர்த்தி 19935 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

இதேபோல் ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் 40736 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 50262 வாக்குகள் பெற்று முதல் சுற்று முதலே தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தை 3642 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 51635 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 35609 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

இதுதவிர தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில், திமுக வேட்பாளர் இன்பசேகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இத்தொகுதியில் மூன்று சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் இன்பசேகரன் 10305 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.முனுசாமி 8222 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x