Published : 17 Feb 2017 07:44 AM
Last Updated : 17 Feb 2017 07:44 AM

அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவு எடுக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பேரணி: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பேரணி நடை பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள் ளார்.

தமிழக அரசியலில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து குழப்பங்களும், பரபரப்பு திருப்பங்களும் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 30 அமைச்சர்கள் பதவி யேற்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியில் உள்ள அதிமுக மூத்த நிர்வாகிகள் இ.மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனு சாமி, பாண்டியராஜன், செம்மலை, எஸ்.பி.சண்முகநாதன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத் தில் நேற்று இரவு 7.45 மணி அளவில் அஞ்சலி செலுத்தினர்.

அங்கு செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:

கடந்த 2011-ல் ஜெயலலிதா யாரையெல்லாம் கட்சியில் இருந்தும், போயஸ் கார்டன் வீட்டில் இருந்தும் வெளியேற்றினாரோ, அவர்கள் எல்லாம் இன்று போயஸ் கார்டனில் இருந்து அதிமுகவை இயக்கும் துர்பாக்கிய நிலை ஏற் பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தி னரை ஜெயலலிதா கடைசிவரை கட்சியில் சேர்க்கவில்லை.

ஆனால், தற்போது சசிகலா குடும்பத்தின் ஆட்சிதான் பதவி யேற்றுள்ளது. இந்த ஆட்சியை நீக்கி ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க அவரது ஆன்மாவிடம் ஆசி பெற்றுள்ளோம். சபதம் ஏற்றுள்ளோம்.

அதிமுக எம்எல்ஏக்கள் அனை வரும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப் பேரவை தொகுதி வாரியாக 17-ம் தேதி (இன்று) வாக்காளர் பேரணி நடைபெறும். பல எம்எல்ஏக்கள் அவர்கள் பக்கம் இருக்கின்றனர். ஆனால், ஏழரை கோடி தமிழக மக்களும் எங்களைத்தான் ஆதரிக்கின்றனர். எனவே, சிறிது காலத்தில் இந்த ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி.

தற்போது பதவியேற்றிருப்பது மக்கள் விரோத ஆட்சி. 1 சதவீத மக்கள்கூட விரும்பாத ஆட்சி. எனவே, இந்த ஆட்சியை அகற்றும் வரை நாங்கள் ஓயமாட்டோம். கடந்த 10 நாட்களாக எதுவும் முறையாக நடக்கவில்லை. இந்த ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் ஒவ்வொரு வரும் சபதம் ஏற்றுள்ளனர்.

இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய இ.மதுசூதனன், ‘‘ஜெயலலிதா வால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி.தினகரனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா வழங்கியிருக்கிறார். இதுபோன்ற பதவியை யாருக்கும் ஜெயலலிதா வழங்கியதில்லை. ஜெயலலிதா மறைவுக்கு இவர்கள்தான் காரணம் என்று மக்கள் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அரசை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஓபிஎஸ் தலைமையில் தர்ம யுத்தத்தை தொடர்வோம்’’ என்றார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 20 நிமிடங்கள் இருந்த அவர்கள் இரவு 8 மணி அளவில் புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x