Published : 11 Feb 2017 02:33 PM
Last Updated : 11 Feb 2017 02:33 PM

அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வருவார்கள்: ஓபிஎஸ் நம்பிக்கை

மாஃபா பாண்டியராஜனைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வருவார்கள் என்று பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்குச் சென்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன் ஆதரவை தெரிவித்தார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முதலாவது அமைச்சராக வந்த மாஃபா பாண்டியராஜனை முதலமைச்சராக வரவேற்கிறேன். இன்னும் ஏராளமானோர் ஆதரவு தரக் காத்திருக்கிறார்கள்.

மக்களின் ஒருமித்த கருத்தை ஏற்று அமைச்சர் பாண்டியராஜன் எங்களுடன் இணைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வந்து இணைவார்கள்.

தமிழகத்தின் ஆட்சி ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறுவதைத் தடுத்து நிறுத்துவோம். தர்ம யுத்தத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாண்டியராஜன் தற்போது இணைந்துள்ளார்'' என்றார்.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 7-ம் தேதி இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் மவுனமாக தியானத்தில் அமர்ந்ததும், 'கட்டாயப்படுத்தி தான் என்னிடம் ராஜினாமா கடிதம் பெற்றனர்' என்று கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கவனம் ஓபிஎஸ் பக்கம் திரும்பியது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக அவர் பக்கம் வரத் தொடங்கினர். 5 எம்எல்ஏக்களும் அவரது அணிக்கு வந்தனர்.

இதற்கிடையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் உள்ளிட்ட 2 இடங்களில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். இவருடைய ட்வீட்டுக்கு, நடிகர் அரவிந்த்சாமி அளித்த பதில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது வாக்காளர்களின் கருத்தை கண்டிப்பாக கேட்டு அம்மாவின் மதிப்பையும், அதிமுகவின் ஒற்றுமையையும் நிலைநிறுத்தும் வண்ணம் முடிவெடுப்பேன்" என்று தெரிவித்தார் மாஃபா பாண்டியராஜன்.

இதைத் தொடர்ந்து சசிகலா அணியிலிருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அங்கிருந்து விலகி, பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு, ''மாஃபா பாண்டியராஜனைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வருவார்கள்'' என்று பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x