Published : 20 Feb 2017 07:39 PM
Last Updated : 20 Feb 2017 07:39 PM

அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்: ஸ்டாலின்

அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.

மேலும், ஜனநாயக விதிமீறலைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள திமுகவின் போராட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறைகாக அறிக்கை தரவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. ஜெ.மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்த பிறகு, ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை அனுப்பியது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று, ஓபிஎஸ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஜெ.மறைவுச் செய்தியை வெளியிட்டனர். ஆளுநர் மாளிகைக்கு பேருந்தில் சென்ற அதிமுக அமைச்சரவை அன்றைய நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டது.

அதற்குப் பிறகு ஓபிஎஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார். திடீரென்று ஒரு நாள் பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் மெரினாவில் ஜெ.நினைவிடத்தில் தியானம் செய்த பிறகு பேசினார். அப்போது வலுக்கட்டாயமாக என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்ற ஓபிஎஸ், ''ஜெ.மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு இருப்பதால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்'' என்றார். மேலும், சசிகலா குடும்பம் குறித்து 10% மட்டும்தான் கூறினேன். 90% இன்னும் உள்ளது என்றார்.

அதற்குப் பிறகு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்துவைக்கப்பட்டனர். இந்த நிலையில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் நான் மனு அளித்தேன். ஆளுநர் எடப்பாடி பழனிசாமி 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அவகாசம் கொடுத்தார். ஆனால், 48 மணிநேரத்துக்குள் சட்டப்பேரவை கூடுவதாக செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார்.

இந்த நிலையில் கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டனர். 18-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ரகசிய வாக்கெடுப்பு கோரினர்.

செம்மலை, ''நான் கூவத்தூரில் இருந்த அறை சாவி இது என எடுத்துக்காட்டினார். இங்கே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அச்சத்தோடு உள்ளதால் வேறு ஒருநாளில் வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம். எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பு முக்கியம்'' என்றார்.

நானும் எம்.எல்.ஏக்களுக்கு சுதந்திரம் தேவை. எனவே அவர்கள் தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தைக் கேட்டு வாக்கெடுப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஒரு வாரத்துக்கு வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றேன்.

அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சபாநாயகர் அழைத்து என் சட்டையை திமுக உறுப்பினர் கிழித்துவிட்டார். இது நியாயமா? என்று கேட்டார். நியாயம் இல்லை. அதை திமுகவினர் செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றேன். வாக்கெடுப்பை ஒத்திவைக்கக் கோரிய போது முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாகக் கூறினார். மீண்டும் அவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எங்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றியது மரபு இல்லை. அப்படி வெளியேற்ற முடியாது. அதுகுறித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதி அளித்தோம். ஆனால், எதிர்க்கட்சி இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது ஜனநாயகப் படுகொலை என்பதை வலியுறுத்தி மெரினா - காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டோம்.

குடியரசுத் தலைவரிடம் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விளக்க நேரம் கேட்டுள்ளோம். வரும் 22-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்த உள்ளோம். இது தொடர் போராட்டமாக நடைபெறும். இது திமுகவின் பிரச்சினை என்று மட்டும் கருதிவிடக் கூடாது. மக்கள் பிரச்சினை.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் தொகுதிப் பக்கம் செல்ல முடியவில்லை. மக்கள் எதிர்ப்பு அதிகம் உள்ளது. சசிகலாதான் ஜெ.மரணத்துக்கு காரணம் என்று மக்கள் அடிமனதில் ஓர் எண்ணம் உள்ளது. அதனால் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். சசிகலா குடும்பத்தினர் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த தமிழகத்தைக் காப்பாற்ற ஆட்சியைத் தூக்கியெறிய, இளைஞர்கள், மாணவர்கள், மக்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வரும் 22-ம் தேதி போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய ஆதரவு தர வேண்டும். ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கலாம். அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்.

திருச்சி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நான் தலைமை ஏற்கிறேன். காஞ்சிபுரம் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு துரைமுருகன் தலைமை ஏற்கிறார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக்க வேண்டும். பேரவையில் நடந்தவற்றை அப்படியே ஒளிபரப்பாமல், வெட்டப்பட்ட காட்சிகளே ஒளிபரப்பப்படுகின்றன.

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளால் எனக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன். உடல் வலி உள்ளது. எனவே,ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவு செய்துள்ளேன்.

கருணாநிதி உடல்நிலை

திமுக தலைவர் கருணாநிது வயது மூப்பு காரணமாக சில சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் டிரக்டாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் குணமடைவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்'' என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x