Published : 09 Feb 2017 02:00 PM
Last Updated : 09 Feb 2017 02:00 PM

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் உற்சாகம்

பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

தமிழக அரசியல் சூழலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு ஏற்பட்டுவரும் நிலையில், ஆளுநர் வருகை தருவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் மதுசூதனன் திடீரென சென்னை கிரீம்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வந்தார். அவர் ஆதரவு தெரிவிக்க வருகிறாரா அல்லது சசிகலா சார்பில் சமாதானம் பேச வந்திருக்கிறாரா என குழப்பம் நிலவியது. ஆனால், ஒருசில நிமிடங்களிலேயே மதுசூதனன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் பேட்டியளித்த அவர், "சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். அதிமுக காப்பாற்றப்பட வேண்டும்" என்றார்.

அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவை மகிழ்ச்சியுடன் தெரிவித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், "குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "மதுசூதனன் வருகை எங்களுக்கு வலிமையைக் கூட்டியுள்ளது. சில உண்மைகளை தெரிவிக்காவிட்டால் 'அம்மாவின்' ஆன்மா மன்னிக்காது என்பதாலேயே உண்மைகளை வெளிப்படையாகத் தெரிவித்தேன். உண்மை நிலையை தெரிவிக்கவே இந்த அறப்போராட்டம்.

யார் நாடகமாடினார்கள், யார் துரோகம் செய்தார்கள் என்பதை ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி அதை தனது குடும்ப சொத்தாக மாற்ற சசிகலா முயற்சிக்கிறார். கட்சி, ஆட்சி பொறுப்புக்கு வரமாட்டேன் என மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர் சசிகலா. ஆனால், இப்போது அதற்கு மாறாக செயல்படுகிறார். அமைச்சர்களை தூண்டிவிட்டதே சசிகலாதான்.

இனிமேலும் செயற்கையான குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தால் சில தகவல்களை வெளியிட நேரும். போயஸ் கார்டனுக்கு உறவினர்களை அழைத்துவந்து துரோகம் செய்தவர் சசிகலா. போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும். " என்றார்.

மேலும், கடந்த 2012-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய கடிதத்தை வாசித்துக் காட்டினார்.

பலம்வாய்ந்த பதவி..

அதிமுகவைப் பொறுத்தவரை பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக அவைத்தலைவர் பதவி மிகவும் சக்தி வாய்ந்தது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் அவைத்தலைவருக்கே இருக்கிறது. இந்நிலையில், அவைத் தலைவரே முதல்வர் ஓபிஎஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x