Published : 18 Apr 2017 11:38 PM
Last Updated : 18 Apr 2017 11:38 PM

அதிமுக அம்மா கட்சியில் பிளவா?- தினகரனுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்கள்

சசிகலா குடும்பத்தை கட்சி, ஆட்சியில் ஒதுக்கிவைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் முடிவெடுத்து பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும் சில எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன் சார்ந்த குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கிவிட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவது என்று நாங்கள் ஆலோசித்து முடிவெடுத்திருக்கிறோம் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதற்குப் பிறகு வெற்றிவேல், சுப்பிரமணி, தங்க தமிழ்ச்செல்வன், செல்வமோகன்தாஸ், ஜக்கையா, கதிர்காமு ஆகிய 6 எம்.எல்.ஏக்களும் செவ்வாய்க்கிழமை டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்துக்கு வருகை புரிந்து ஆலோசனை நடத்தினர். விபி கலைராஜன், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் தினகரன் இல்லத்துக்கு வருகை தந்தனர்.

சாத்தூர் எம்.எல்.ஏ சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஓபிஎஸ் நேற்று ஒன்று இன்று ஒன்று பேசுகிறார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றும் இல்லை. நாங்கள் தினகரன் வழிகாட்டுதல்படி நடப்போம். 122 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்தான் கட்சியை வழிநடத்துவார்'' என்றார்.

வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறுகையில் ''அமைச்சர்கள் அனைவரும் பதவியை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றனர். அவர்கள் எடுத்த முடிவு கட்சியின் முடிவு அல்ல'' என்றார்.

தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ கூறுகையில் ''அதிமுக அம்மா அணியில் எந்த சலனமும் இல்லை. 122 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. தினகரனின் ஆதரவால் உயர்ந்தவர் ஓ.பன்னீர்செல்வம். குடும்ப அரசியல் பற்றிப் பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதியில்லை.

ஓபிஎஸ் அணியினர் இணைந்தால் ஏற்றுக்கொள்வதாக தினகரன் கூறியுள்ளார். ஓபிஎஸ் அணி இணைந்தால் மீண்டும் இரட்டை இலை கிடைக்கும். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பொதுச் செயலாளர் சசிகலாவையும், துணை பொதுச் செயலாளர் தினகரனையும் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர்'' என்றார்.

இதனால் அதிமுக அம்மா கட்சியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x