Published : 12 May 2016 05:43 PM
Last Updated : 12 May 2016 05:43 PM

அதிமுகவுக்கு உதவும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு உதவும் அரசு அதிகாரிகள் 19-ம் தேதிக்கு பிறகு தண்டிக்கப்படுவார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து, வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளில் கப்பம் கட்டாத அமைச்சர்கள் தூக்கி எறியப்பட்டனர். வேலூர் அதிமுக எம்எல்ஏ வி.எஸ். விஜய் அப்படித்தான். தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக உள்ள கே.சி.வீரமணி சரியாக கப்பம் கட்டுவதால், அவர் மீது நடவடிக்கை இல்லை.

பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதை முறையாக பயன்படுத்தாமல், அதில் எப்படி ஊழல் செய்யலாம் என அதிமுக யோசித்து முடிப்பதற்குள் காலக்கெடு முடிந்து, அந்த பணம் மத்திய அரசுக்கு திரும்பிச் சென்றது. இதுபோல பல காரணங்களால் அதிமுக அமைச்சர்கள் மீதும், அரசு மீது தமிழக மக்கள் கோபமடைந்துள்ளனர்.இதனால் தான் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் அமைச்சர்கள் மீது செருப்பு வீச்சு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

இன்று (நேற்று) காலை கடலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் சம்பத் மீது செருப்பு வீச்சு நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதேபோல், மதுரையில் செல்லூர் ராஜூ, தேனியில் ஓபிஎஸ் ஆகியோர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதை சரிசெய்யவே மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய அதிமுக திட்ட மிட்டுள்ளது. இதை திமுக முறியடிக்கும். இந்தத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெறுவது கடினம்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுகவுக்கு அரசு அலுவலர்கள் உதவி செய்து வருவதாக எனக்கு தகவல்கள் வருகிறது. அவர்கள் யாரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே 19-ம் தேதிக்கு பிறகு அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x