Published : 24 Jun 2015 12:41 PM
Last Updated : 24 Jun 2015 12:41 PM

அச்சுறுத்தலில் பாஜக அல்லாத மாநில அரசுகள்: திருமாவளவன்

பாஜக அல்லாத மாநில அரசுகள் ஓரவஞ்சனைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்காமல் தடுக்க, ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்திய வரலாற்றில் இருண்ட காலம் எனக் குறிக்கப்படும் அவசரநிலை 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் நாற்பதாவது ஆண்டு இது. மீண்டும் அப்படி அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கான ஆபத்து இருக்கிறது என பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியிருக்கிறார். அவரது கருத்தை ஆளும் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவும் ஆதரித்துள்ளது.

அவசரநிலைக் காலத்தின் அத்துமீறல்களை எவரும் எளிதில் மறந்துவிடமுடியாது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன; பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன; முன்னணி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் 'மிசா' சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்; சிறைகளிலேயே பலர் கொல்லப்பட்டனர்; பலவந்தமாக லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டெல்லியில் குடிசைப் பகுதிகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைச் சுற்றியிருந்த ஒரு சிறு கூட்டத்தின் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிக்கப்பட்டது; இந்தியப் பாராளுமன்ற முறையை ஒழித்துவிட்டு அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 'இந்திராவே இந்தியா' என்று ஒரு நபரை மையமாக வைத்துத் துதிபாடும் கூட்டம் வெறியாட்டம் போட்டது.

அவசரநிலை மீண்டும் பிறப்பிக்கப்படாமல் தடுக்க வேண்டுமானால் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அது சரியான தீர்வல்ல. "பெரும்பான்மை ஆட்சி நடக்கும் எந்தவொரு நாடுமே அவசரநிலை பிறப்பிக்கப்படுகிற ஆபத்துள்ள நாடுதான்" என சட்ட அறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் கூறியிருப்பது மறுக்கமுடியாத உண்மையாகும். 1975-ல் அவசரநிலை பிறப்பிக்கப்படும்போது இந்திரா காந்தி தலைமையில் ஒரு பெரும்பான்மை ஆட்சிதான் நடந்துவந்தது. 1971ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 352 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி நடத்தியது. அந்தப் பெரும்பான்மை பலம் தந்த இறுமாப்புதான் அந்த சர்வாதிகார ஆட்சிக்கு அடிப்படை.

அவசரநிலைக் காலத்துக்கு முன்பிருந்ததுபோலவே இப்போதும் மத்தியில் பெரும்பான்மை பலத்தோடு ஒரு கட்சி ஆட்சி நடக்கிறது; எல்லா அதிகாரங்களும் பிரதமரின் கையில் குவிக்கப்படுகின்றன, நரேந்திர மோடி என்ற ஒருவரை மையப்படுத்தி துதிபாடும் கூட்டம் உருவாகியிருக்கிறது. பாஜக அல்லாத மாநில அரசுகள் ஓரவஞ்சனைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கின்றன. எனவே இந்தியாவில் அவசரநிலை மீண்டும் பிறப்பிக்கப்படாமல் தடுக்க வேண்டுமென்றால் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதனால்தான் "மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் கூட்டணி ஆட்சி" என்ற முழக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைத்திருக்கிறோம். இந்தியாவில் சர்வாதிகார ஆட்சிமுறை தலைதூக்காமல் தடுக்கவேண்டும் என விரும்புகிற அனைவரும் இந்த முழக்கத்தை ஆதரிக்கவேண்டுமென்று கோருகிறோம்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு நபரை மையப்படுத்தினால், ஒரு கட்சியின் கையில் அதிகாரத்தைக் குவித்தால் அது சர்வாதிகார ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும். இந்த ஆபத்தை எடுத்துக்கூறும் வகையில் "அவசரநிலை ஆபத்தும் ஒருகட்சி ஆட்சிமுறையும்" என்ற தலைப்பில் 27.06.2015 சனிக்கிழமை மாலை கூட்டம் ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கிறது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறவுள்ள அக்கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பாக சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x