Published : 05 Apr 2015 10:29 AM
Last Updated : 05 Apr 2015 10:29 AM

வேளாண் அதிகாரி கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது: மேலும் பல அதிமுக பிரமுகர்கள் சிக்குகின்றனர்

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை சிறை யில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் பல அதிமுக பிரமுகர் கள் சிக்குவார்கள் என்று கூறப் படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை திருமால் நகரில் வசித்தவர் முத்துகுமாரசாமி (57). நெல்லையில் வேளாண் துறை உதவி செயற்பொறியாளராக பணி யாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 20-ம் தேதி, தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகில் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்ட வேளாண் துறையில் காலியாக இருந்த 7 ஓட்டுநர் பணியிடத்துக்கு அரசு விதிமுறைப்படி பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்தார் முத்துகுமாரசாமி. அப்போது வேளாண் துறை அமைச் சராக இருந்த அக்ரி கிருஷ்ண மூர்த்தி, தான் கூறும் நபர்களுக்குத் தான் ஓட்டுநர் பணி வழங்க வேண்டும் என்றும், இல்லா விட்டால் அதற்கான பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் தனது உதவியாளர்கள் மற்றும் வேளாண்மை துறை உயர் அதிகாரிகள் மூலம் முத்துகுமார சாமியை மிரட்டியதாக புகார் எழுந்தது. அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாயின.

முத்துகுமாரசாமி தற்கொலை சம்பவத்தில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உட்பட பல அரசியல் கட்சிகள் வலி யுறுத்தி வந்தன. போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து அமைச்சர் மற்றும் கட்சிப் பதவி களில் இருந்து அக்ரி கிருஷ்ண மூர்த்தி அதிரடியாக நீக்கப்பட்டார்.

சிபிசிஐடி விசாரணை

இந்நிலையில், முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, கடந்த மார்ச் 8-ம் தேதி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார். சிபிசிஐடி எஸ்பி அன்பு தலைமையில் டிஎஸ்பி சிட்டிபாபு, ஆய்வாளர்கள் பிறை சந்திரன், ராமகிருஷ்ணன், சீனி வாசன் ஆகியோரைக் கொண்ட தனிப்படையினர் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்டமாக அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் உதவியாளர் பூவையா மற்றும் ஒருவரிடம் சிபிசிஐடி போலீஸார் மார்ச் 13-ம் தேதி விசாரணை நடத்தினர். அதில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான புகாருக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 4-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசார ணைக்காக வந்தார் அக்ரி கிருஷ்ண மூர்த்தி. அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் அவரை கைது செய்து நெல் லைக்கு அழைத்துச் சென் றனர்.

தலைமை பொறியாளரும் கைது

இந்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த வேளாண் துறை தலை மைப் பொறியாளர் எம்.செந்தில் என்பவரையும் சிபிசிஐடி போலீ ஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து நெல்லை அழைத்துச் சென்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை ரஹமத் நகரில் உள்ள 3-வது மாஜிஸ்திரேட் செந்தில்குமார் வீட்டில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நேற்று பகல் 1.20 மணிக்கு போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 17-ம் தேதி வரை நீதி மன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இதையடுத்து அவரை பாளையங் கோட்டை மத்திய சிறையில் போலீ ஸார் அடைத்தனர். இதைத் தொடர்ந்து வேளாண் துறை தலை மைப் பொறியாளர் செந்திலும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் சிலரும் முத்துகுமாரசாமியை மிரட்டியதற்கான ஆதாரங்கள் சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத் துள்ளன. கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகியாக உள்ள அதிமுக பிரமுகர் ஒருவர், மாவட்ட நிர்வாக பொறுப்பில் உள்ள ஒருவர் ஆகியோரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இது 2-வது முறை

தமிழகத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது இது 2-வது முறை ஆகும். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அதே கட்சியைச் சேர்ந்த ஈரோடு தொகுதி எம்எல்ஏ என்.கே.கே.பி.ராஜாவை நம்பியூர் போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத் தனர். பவானிசாகர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த ஓ.சுப்பிர மணியத்தை மிரட்டிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது கைது செய்யப் பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் மற்றும் கட்சிப் பதவி களில் இருந்து நீக்கப் பட்டாலும், கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வாக நீடிக்கிறார்.

குடும்பத்தினர் அதிர்ச்சி

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது, அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் மற்றும் சொந்த கிராமமான எலத்தூரில் உள்ள அவரது வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘பங்குனி உத்திர விழாவையொட்டி, எலத்தூர் கிராமத்துக்கு கடந்த 3-ம் தேதி இரவு வந்தார். அப்போதுகூட குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவே இருந்தார். கட்சித் தலைமை தன்னை கைவிடாது என நெருக்கமானவர்களிடம் கூறிவந்தார். ஆனால், திடீரென அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1-ம் தேதி சென்னையில் பேட்டி கொடுத்தபோது, ‘நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் கட்சிப் பதவி மற்றும் அமைச்சர் பதவி ஏன் பறிக்கப்பட்டது’ என்று நிருபர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதில் கூறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரோ, ‘அம்மாவிடம்தான் கேட்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அந்தப் பேட்டியே அவருக்கு எதிராக மாறிவிட்டது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x