Published : 06 Mar 2017 04:55 PM
Last Updated : 06 Mar 2017 04:55 PM

ஐநாவின் தீர்மானத்தை மதிக்காமல் இலங்கை அரசு அலட்சியம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

இலங்கை அரசும் ஐநாவின் தீர்மானத்தை மதிக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. எனவே, இலங்கையையும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்துவதுதான் சரியாக இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் 8-ம் தேதி சென்னையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளா.ர்

இது தொடர்பாக இன்று திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ''ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையைக் குறித்து 2015-ம் ஆண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு தொடர்ந்து புறக்கணித்துவருகிறது.

போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையில் பிறநாட்டு நீதித்துறை வல்லுநர்களை உள்ளடக்க வேண்டும் என்ற ஐநா சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் காலநீட்டிப்பு வழங்கக் கூடாது.

இலங்கை போர்க்குற்ற வழக்கை ஐநா பொதுமன்றத்தின் மூலம் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்திற்கு அனுப்பிட தற்போதைய ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கையை இந்திய அரசு ஆதரித்து அழுத்தம் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதையும், தற்போதைய மைத்திரிபால அரசின் கீழும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் இந்தக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள ஐநா மனித உரிமை கவுன்சில் செயலாளரின் அறிக்கை தெளிவாக கூறுகிறது.

இந்த நிலையில், ஐநா மனித உரிமை கவுன்சில் இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் தருவது இலங்கை அரசின் தமிழர் விரோதப் போக்குக்கு ஆதரவு அளிப்பதாக பொருள்படும்.

வடகொரியாவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமை கவுன்சில் அந்நாட்டிற்கு விதித்த நிபந்தனைகளை அது செயல்படுத்த தவறியதால் அந்த வழக்கு இப்போது சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வடகொரியாவைப் போலவே இலங்கை அரசும் ஐநாவின் தீர்மானத்தை மதிக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. எனவே, இலங்கையையும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.

தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தில் 2010-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப்போகச்செய்யும் விதத்தில் திருத்தம் கொண்டுவர இலங்கை அரசு முயற்சிக்கிறது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையை இந்திய அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். இலங்கையின் போர்க்குற்றங்களை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரிக்க இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் 8-ம் தேதி புதன் கிழமை சென்னையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x