Published : 02 Oct 2014 05:20 PM
Last Updated : 02 Oct 2014 05:20 PM

ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்தது.

இன்சியானில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் அபாரமாக விளையாடின. முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்று டிரா செய்ய ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.

பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பாகிஸ்தான் அடித்த 2 பெனால்டி ஷூட் அவுட் ஷாட்களை அபாரமாகத் தடுத்தார்.

1998ஆம் ஆண்டு பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தன்ராஜ் பிள்ளை தலைமையில் இந்தியா தங்கம் வென்ற பிறகு இப்போது தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளது.

பெனால்டி ஷூட் அவுட்:

பென்லாடி ஷூட் அவுட்டை இந்திய வீரர் குர்விந்தர் சிங் எடுத்தார். நேராக பாகிஸ்தான் கோல் கீப்பர் இம்ரான் பட்டிற்கு போக்குக் காட்டி பந்தை கோலுக்குள் அடித்தார். இந்தியா 1-0.

பாகிஸ்தானுக்காக ஹசீம் அப்துல் கான் ஷூட் அவுட்டிற்கு வந்தார். இவர் பந்தை அடிக்க சரியாகக் கணித்த இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்துவிட்டார்.

அடுத்ததாக இந்திய அணிக்காக பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் ருபிந்தர் பால் பந்தை இம்ரான் பட்டைத் தாண்டி அபார கோலாக மாற்ற இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் அணி வீரர் வகாஸ் இயல்பாக கோல் அடிக்க இந்தியா 2-1 என்று முன்னிலையைத் தொடர்ந்தது.

அடுத்ததாக மன்பிரீத் அடித்த கோல் ஏனோ மறுக்கப்பட்டது. இந்திய வீரர்கள் நம்ப முடியாமல் எதிர்ப்பு காட்டினர். இந்த கோல் மறுக்கப்பட்டது நிச்சயம் ஒரு சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக பாகிஸ்தான் வீரர் உமர் புட்டா அடித்த ஷாட்டையும் ஸ்ரீஜேஷ் தடுத்தார்.

ஆனால் இந்திய வீரர்கள் 4 மற்றும் 5வது பெனால்டி ஷூட் அவுட்டை அபாரமாக கோலாக மாற்ற இந்திய வீரர்களின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. பாகிஸ்தான் கடும் ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது. இந்தியா பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்று வெற்றி பெற்றது. மொத்தமாக 5-3 என்று வென்றுள்ளது.

ஷூட் அவுட் இல்லாமலேயே இந்தியா வென்றிருக்கலாம்:

தொடக்கத்தில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டம் தொடுத்தன. ஆட்டம் தொடங்கி 4வது நிமிடத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வலது புறத்தில் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்த் தாக்குதல் தொடுத்தனர். பந்து இந்திய கோல் எல்லைக்குள் கொண்டு செல்லப்பட பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் கோலுக்குள் செலுத்தினார். இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இடது புறமாக பாய்ந்தார் ஆனால் கோலை தடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் முதல் கால் பகுதி இறுதியில் வலது புறத்திலிருந்து அருமையான பாஸ் ஒன்றைப் பெற்ற இந்திய வீர்ர் சுனில் கோலுக்கு 6 அடிக்கு முன்னால் இருந்து கோலுக்கு வெளியே அடித்து வாய்ப்பை கோட்டை விட்டார்.

இரண்டாவது பாதியில் 8வது நிமிடத்தில் இந்தியா ஒரு அபாரத் தாக்குதலைத் தொடுக்க பாகிஸ்தான் வீரர்களின் தடுப்பாட்டம் அபாரமாக அமைந்தது. பிறகுதான் ஆட்டத்தின் முதல் பெனால்டி வாய்ப்பை இந்தியா பெற்றது. பாகிஸ்தான் அதிருப்தி அடைந்தனர். இரண்டாவது கால் பகுதி ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் போது பெனால்டி கார்னர் ஷாட்டை எடுத்த ருபிந்தர் பால் அபாரமாக அடித்தார் ஆனால் பாகிஸ்தான் கோல் கீப்பர் அதனை அதைவிட அற்புதமாகத் தடுத்தார்.

இந்தியா சமன்:

அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்து இந்திய அணியினர் லாங் பாஸில் ஈடுபட வலது புறத்திலிருந்து இந்திய வீரர் ஒருவர் அபார ஷாட் ஒன்றை அடிக்க அதனை மிக அபாரமாக இந்திய வீரர் கோதாஜித் கோல் நோக்கித் திருப்பினார் இந்தியா சமன் செய்தது.

பிறகு 3வது கால்பகுதி ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் நடுக்களத்தில் மின்னல் வேகத்தில் பந்தை எடுத்துக் கொண்டு சென்றார். தரம் வீர் அடித்த அற்புதமான பாஸ் கோலாக முடியவில்லை. பாகிஸ்தான் தப்பிப்பிழைத்தது.

பாகிஸ்தானுக்கு உடனே ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. முகமது இம்ரான் வலுவான ஷாட் ஒன்றை அடித்தார் ஆனால் இந்தியாவின் இரும்பு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது.

இது நடந்து 4 நிமிடங்களுக்குப் பிறகு இந்தியாவின் ராம்தீப் பாகிஸ்தான் கோலை நோக்கி ஒரு அற்புதமான ரிவர்ஸ் ஷாட்டை அடித்தார். ஆனால் இம்ரான் பட் அதனை ஊதினார்.

4வது மற்றும் இறுதி கால்பகுதி ஆட்டத்தில் பாகிஸ்தானின் மின்னல் வீரர் மற்றும் அனுபவ வீரர் ஷகீல் அப்பாஸியைத் தடுக்க இந்திய வீரர்கள் அபார வியூகம் அமைத்தனர். இதனால் பாகிஸ்தான் முயற்சிகள் பயனளிக்காமல் போனது. ஆனாலும் ஆட்டத்தின் உரிய நேரம் முடிய 8 நிமிடங்களுக்கு முன்னால் வலது புறம் பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தது. ஆனால் அது கோலாக மாறவில்லை.

மேலும் கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ருபிந்தர் பால் பந்தை நேராக பாகிஸ்தான் கோல் கீப்பர் இம்ரான் பட்டிடம் அடித்து கோட்டை விட்டார்.

அதன் பிறகே பரபரப்பான பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் அபாரத் தடுப்புத் திறமையின் முன்பு பாகிஸ்தான் தோற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

தென் கொரியா அணிக்கு வெண்கலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x