Last Updated : 25 Oct, 2014 09:46 PM

 

Published : 25 Oct 2014 09:46 PM
Last Updated : 25 Oct 2014 09:46 PM

ஹாக்கி இந்தியா லீக் அணியான ராஞ்சி ரேஸ் அணியின் சக உரிமையாளரானார் தோனி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து அணியான சென்னையன்ஸ் கால்பந்து கிளப் அணியின் சக-உரிமையாளரான தோனி இப்போது ஹாக்கி இந்தியா லீக் அணியான ராஞ்சி ரேஸ் (Ranchi Rays) அணியின் சக உரிமையாளரானார்.

இந்த அணியின் மற்றொரு உரிமையாளர் சஹாரா அட்வென்ச்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகும்.

ஹாக்கி இந்தியன் லீகின் கடந்த சாம்பியன்களான ராஞ்சி ரைனோஸ் அணி நீக்கப்பட்டதையடுத்து இந்தப் புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. கால்பந்து அணியைத் தொடர்ந்து தற்போது ஹாக்கி அணி ஒன்றிற்கும் சக உரிமையாளரான தோனி ஏற்கனவே மாஹி ரேசிங் டீம் இந்தியாவின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

“புதிய ஹாக்கி இந்தியா லீக் அணியை, அதுவும் நான் சார்ந்த நகரின் அணியின் சக உரிமையாளரான இன்றைய தினம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. ஜார்கண்டில் ஹாக்கி பிரபலமான விளையாட்டு. பிற விளையாட்டுகளையும் வளர்த்தெடுப்பதில் பங்களிப்பு செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் கடந்த 2 தொடர்களாக ராஞ்சி அணி சிறப்பாக விளையாடியதும் எனது இந்த முடிவுக்கு ஒரு காரணமாகும்.

ஹாக்கியைப் பொறுத்தவரையில் அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி பெறுவது முக்கியம். இளம் வீரர்கள் சிறப்பாக விளையாட சிறந்த வழிகாட்டுதலும், நல்ல உள்கட்டமைப்பும் இருப்பது அவசியம். உள்கட்டமைப்பு சரியில்லை எனில் இளம் திறமைகளைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். நல்ல பயிற்சியாளர்களையும், பயிற்சி முகாம்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் இளம் வீரர்களுக்கு ஆதரவாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

முந்தைய ராஞ்சி ரைனோஸ் அணியின் சில வீரர்களையும் இந்த புதிய அணியில் சேர்த்துக் கொள்ள லீக் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். அனுபவமிக்க சில வீரர்களை சேர்ப்பது கைகொடுக்கும். மேலும் அண்டர்-16 மற்றும் அண்டர்-19 வீரர்களையும் வளர்த்தெடுக்க விரும்புகிறோம். இவர்கள் இந்தியாவுக்காக இன்னும் 2 அல்லது 3 ஆண்டு காலக்கட்டத்தில் விளையாட வருவார்கள் என்று நான் கருதுகிறேன்.

என்னுடைய முன்னுரிமை நாட்டிற்காக கிரிக்கெட் ஆடுவதுதான். இதைத்தவிரவும் பிற விஷயங்களில் பங்களிப்பு செய்ய முயற்சி செய்து வருகிறேன்” என்று இந்திய கேப்டன் தோனி நிகழ்ச்சியின் போது கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x