Published : 19 Jun 2017 10:53 AM
Last Updated : 19 Jun 2017 10:53 AM

ஹர்திக் பாண்டியாவுக்கு தனது விக்கெட்டை ஜடேஜா விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்: குமார் சங்ககாரா

ஐசிசி சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபாரமான வெற்றியைப் பெற்றது.

லண்டனின் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது.

வெற்றி பெற 339 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுக்க, இந்திய அணியின் ஆல்ரவுண்டராக உருவாகி வரும் ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் பந்துவீச்சை பவுண்ட்ரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினார்.

இந்திய அணியின் ரசிகர்கள் பலரின் கடைசி நம்பிக்கையாக பாண்டியாவின் நேற்றைய ஆட்டம் இருந்தது. எனினும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறுமுனையில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய வீரர் ஜடேஜா, இந்திய ரசிகர்களின் நம்பிக்கையைத் தகர்த்தார்.

ரன் ஓடுவதில் இருவருக்கும் ஏற்பட்ட குளறுபடியால் பாண்டியா ரன் அவுட் ஆனார் (ஜடேஜா அவுட் ஆக்கினார் என்றுதான் கூற வேண்டும்). 46 பந்துகளை சந்தித்த பாண்டியா 76 ரன்கள் எடுத்து விரக்தியுடன் ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலே ஜடேஜா உட்பட அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஆட்டம் இழக்க, இந்திய அணி 158 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

ரோஹித் சர்மா, தவான், கோலி, தோனி, யுவராஜ் என முன்னணி வீரர்கள் சொதப்ப, சிறப்பாக விளையாடிய பாண்டியாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாண்டியாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுடனான ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் குறித்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தனது ட்விட்டர் பக்கத்தில்," பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா பந்தை அடித்த விதத்தை பார்க்கும்போது அவர் பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வித்தியாசமான யோசனை வைத்திருந்தது தெரிந்தது. ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் சிறப்பான ஆட்டம்.

ஹர்திக் பாண்டியா விக்கெட் பறிபோனதில் ஜடேஜாவுக்கு தொடர்பு உண்டு. ஜடேஜா தனது விக்கெட்டை விட்டு கொடுத்து பாண்டியாவை விளையாட அனுமதித்திருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x