Last Updated : 29 Apr, 2016 04:59 PM

 

Published : 29 Apr 2016 04:59 PM
Last Updated : 29 Apr 2016 04:59 PM

வில்வித்தை உலகக்கோப்பை இறுதியில் இந்திய மகளிர் அணி

சீனாவில் நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பையில் ஜெர்மனியை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கி இந்திய மகளிர் ரீகர்வ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஜெர்மனி மகளிர் அணியை 5-3 என்று வீழ்த்திய இந்திய மகளிர் ரீகர்வ் அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியைச் சந்திக்கிறது.

தீபிகா குமாரி, லயிஷ்ராம் பொம்பல்யா தேவி, லஷ்மிராணி மஜ்ஹி ஆகியோர் தனிப்பட்ட வீரர்கள் போட்டிப் பிரிவில் ஏமாற்றமளித்தாலும் ஜெர்மனி அணிக்கு எதிராக ஒரு அணியாக எழுச்சியுற்று 5-3 என்று வெற்றி பெற்று ஜெர்மனிக்கு அதிர்ச்சியளித்துள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் தரவரிசையில் உள்ள சீன தைபே அணியினர் இவர்களை விட தரவரிசையில் உயர்ந்த இடத்தில் உள்ள ரஷ்யாவை 6-0 என்று அதிர்ச்சிகரமாக தோல்வியுறச் செய்துள்ளது.

முதல் செட்டில் 2-0 என்று இந்திய மகளிர் அணி முன்னிலை பெற, அடுத்ததாக ஜெர்மனி வீராங்கனைகள் லிசா அன்ரு, எலினா ரிக்டர், கரினா விண்டர் ஆகியோர் அபாரமாக இலக்குகளைத் தாக்கி 57 புள்ளிகளுடன் நெருங்கினர், ஆனால் தொடர்ந்து அபாரமாக ஆடிய இந்திய மகளிர் அணி 3-1 என்று முன்னிலை பெற்றது. 3-வது செட்டில் இந்திய வீராங்கனைகள் சிறிய அளவில் தவறிழைக்க ஜெர்மனி நெருக்கியது. ஆனால் மீண்டும் இலக்குகளை குறிவைப்பதில் சோடை போகாத இந்திய மகளிர் அணி ஜெர்மனியை வீழ்த்தியது.

இதே ரீகர்வ் பிரிவில் இந்திய ஆடவர் அணி அரையிறுதியில் ஹாலந்து அணியிடம் 4-5 என்று போராடி தோல்வி தழுவியது.

இதனையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஆடவர் ரீகர்வ் அணி பிரிட்டனைச் சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x